எஸ்.என்.எம்.சுஹைல்
நாங்கல்லவைச் சேர்ந்த, மனாசிக் கான், மிப்ளால், சப்ரான், அல்தாப் மற்றும் ரஹ்மி ஆகிய ஐவரும் சிறுபராயம் முதல் நண்பர்களே. தற்போது 27 வயதாகும் சமவயதுடைய இவர்கள், நாங்கல்ல முஸ்லிம் வித்தியாலயத்தில் ஒன்றாக படித்து பாடசாலை காலம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்திருப்பினும் அன்று போல் இன்றும் ஒன்றாகவே தோழமை பாராட்டி வந்தவர்கள். ஊரில் எல்லோருடனும் இயல்பாக பழகும் இவர்கள் அனைவரது அன்பையும் பெற்றிருந்தனர் என்பதை கடந்த 9 ஆம் திகதி இரவு கேகாலை, ரங்வெல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தின் பின்னர் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.
9 ஆம் திகதி இரவு இஷாத் தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றிவிட்டு, நாங்கல்ல பத்திரிகை விற்பனை முகவர் நிலையத்திற்கருகே ஒன்றாய் கூடி கதைத்துக் கொண்டிருந்ததை அல்தாபின் தந்தை கண்டிருக்கிறார். பின்னர் அங்கிருந்து இவர்கள் கேகாலைக்கு அல்லது மாவனெல்லைக்கு சென்று உணவருந்திவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம்
கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு – கண்டி பிரதான வீதி, கேகாலை – ரங்வல பகுதியில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது வேன் ஒன்று மோதியதில் இந்த கோர விபத்து பதிவானது.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று மறு திசையில் இந் நண்பர்கள் பயணித்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதிலேயே இக் கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.
மோட்டார் சைக்கிள்கள் மூன்றில் ஐவர் பயணித்தனர். மொஹமட் மல்கான் மொஹமட் மனாசிக் கான், மொஹமட் மிஹ்லார் மொஹமட் மிப்ளால், மொஹமட் நிஸார் மொஹமட் சப்ரான், மொஹமட் ஹிலுர் மொஹமட் அல்தாப் மற்றும் ரஹ்மான் மொஹமட் மொஹமட் ரஹ்மி ஆகியோரே இவ்வாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்துக்குள்ளாகினர்.
அதி வேகத்துடன் வந்த வேன் குறிப்பிட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களையும் மோதியதில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வேனுடன் இழுத்துச் செல்லப்பட்டு மதிலொன்றுடன் மோதியுள்ளன. மற்றுமொரு மோட்டார் சைக்கிளானது வேன் மோதியதில் தூரத்தே வீசப்பட்டுள்ளது.
பலத்த காயங்களுக்கு உள்ளான ஐவரையும் கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் மனாசிக் கான், மிப்ளால், ரஹ்மி ஆகிய மூவரும் அன்றைய தினமே உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், அல்தாப், நேற்று முன்தினம் செவ்வாயன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சப்ரான் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனிடையே இவ் விபத்துக்குக் காரணமான வேன் சாரதி 20 வயதுடையவர் எனக் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர் கேகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மனாசிக் கான்
நாங்கல்ல வீரகேசரி, விடிவெள்ளி பத்திரிகை விற்பனை முகவரான மொஹமட் மல்கான் மொஹமட் மனாசிக் கான் மருந்தகத்தையும் நடத்தி வந்தவர். தந்தை மொஹமட் மல்கான் உயிரிழந்த பின்னர் பத்திரிகை விற்பனை முகவர் நிலையத்தை நடத்தி வரும் மனாசிக் கான் வீட்டுக்கு ஏக புதல்வராவார். தாய் வழி குடும்பத்தில் இவர் மாத்திரமே ஒரேயொரு பேரப்பிள்ளையும் ஆவார். மிகவும் செல்லமாக வளர்ந்த இவர் திருமணமாகி கிட்டத்தட்ட ஒரு வருடமேயாகும். மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக உள்ளார்.
“ஊரில் எல்லோருடனும் நட்பாக பழகும் மனாசிக் கான், குடும்பத்தின் ஒரே வாரிசு என்பதால் எமக்கு இந்த இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது” என்று அவரது சாச்சா மொஹமட் சாக்கிர் கூறினார்.
அத்தோடு, இவர் மார்க்க விடயங்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தார் என ஹட்டன் மத்ரஸாவின் அதிபர் முஸம்மில் மௌலவி கூறினார். மத்ரசாவிற்காக மாதாந்தம் ஒரு தொகை பணத்தை தொடர்ச்சியாக சதகா செய்து வந்ததையும் அவர் ஞாபகப்படுத்தினார். மார்க்கக் கல்விக்காக மறைமுகமாக அவர் செய்துவந்த உதவி முன்மாதிரியான செயல் என்றார்.
மிப்ளால்
மொஹமட் மிஹ்லார் மொஹமட் மிப்ளால் புறக்கோட்டை அமானா தக்காபுல் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றினார். வீட்டில் மூத்த பிள்ளையான இவருக்கு ஒரேயொரு சகோதரி இருக்கிறார். இவரும் திருமணம் முடித்து சில வருடங்களேயாகின்றன. இவர் மிகவும் அமைதியான, மென்மையான சுபாவமுடையவர் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
“ஐந்து நண்பர்களும் மிகவும் நெருக்கமானவர்கள். இவர்கள் பிரதேசத்தில் மதிக்கப்பட்டு வரும் இளைஞர்களாக திகழ்ந்ததோடு மார்க்க விடயங்களிலும் ஈடுபாடு காட்டி வந்தனர். முன்மாதிரியான இளைஞர்களாக செயற்பட்டு வந்த இவர்களை அல்லாஹ் நேரகாலத்தோடு தன் பக்கம் அழைத்துக்கொண்டான்” என தந்தை மிஹ்லார் கவலையுடன் தெரிவித்தார்.
ரஹ்மி
ரஹ்மான் முஹம்மது ரஹ்மி தொழிற்சாலையொன்றில் வேலை செய்து வருகின்றார். திருமணமாகி ஒன்றரை வருடங்களாகின்ற நிலையில் 27 நாட்களேயான குழந்தையின் தந்தையே ரஹ்மி.
இவர் ஏற்கனவே மாலைதீவில் தொழில் செய்துவிட்டு நாட்டுக்கு திரும்பி இங்கு தொழிலில் ஈடுபட்டு வந்ததாக அவரது ஒரேயொரு சகோதரரான முஹம்மது ரமீஸ் கூறினார்.
அத்தோடு, விபத்துக்குள்ளானபோது ரஹ்மியின் கையடக்கத் தொலைபேசி தொலைந்துவிட்டதாகவும் குறித்த தொலைபேசியில் முக்கியமான ஆவணங்கள் இருப்பதாகவும் ரமீஸ் தெரிவித்தார்.
அல்தாப்
தந்தை மொஹமட் ஹில்ருக்கு பக்கபலமாக நாங்கல்லயில் வாசனை திரவியங்கள் கொள்முதல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் தான் மொஹமட் ஹில்ர் மொஹமட் அல்தாப். நாங்கல்லையில் வர்த்தக நிலையத்தை நடத்தி வரும் இவர் ஐந்து சகோதரர்களுடன் பிறந்தார்.
வீட்டில் மூன்றாவது பிள்ளையான இவர் இன்னும் திருமணமாகாதவர். தந்தை பள்ளிவாசலுக்காக தனது காணியை வக்பு செய்ததுபோல் மகனும் மார்க்க மற்றும் பொது வேலைகளுக்காக பல்வேறு உதவிகளை செய்துவந்தார் என்றார் அல்தாபின் மூத்த சகோதரர் இக்ராம் மதனி.
விபத்தில் சிக்கிய அல்தாப் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நான்கு தினங்களுக்கு பின்னர் கடந்த செவ்வாயன்று உயிரிழந்தார்.
சிகிச்சை பெற்று வரும் சப்ரான்
நாங்கல்லயில் முச்சக்கரவண்டி உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் நிலையத்தை நடத்தி வருபவர் மொஹமட் நிஸார் மொஹமட் சப்ரான். மூன்று பேருடன் பிறந்த இவர் வீட்டில் மூன்றாமவர். 2019 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த சப்ரான் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
விபத்தில் சிக்கிய இவர் கேகாலை போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்தில் சிக்கியவுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது சாதாரண சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், பின்னர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
“சப்ரானின் உடல் நிலை தொடர்ந்தும் மோசமானதாகவே இருக்கிறது. உள்காயங்கள் இருப்பதாகவே தெரிகிறது. இவருக்காக துஆச் செய்யுங்கள்” என்றார் அவரின் மாமா முஹம்மது ஜெஸீல்.
நாங்கல்லவைச் சேர்ந்த மனாசிக் கான், மிப்லால், சப்ரான், அல்தாப் மற்றும் ரஹ்மியுடன் மேலும் இரு நண்பர்கள் இந்த வட்டத்தில் இருக்கின்றனர். இவர்கள் எப்போதும் ஒன்றாக இருப்பவர்கள். கூட்டாக இணைந்து பல நல்ல காரியங்களை மேற்கொள்பவர்கள். சமூக சேவைகளுக்கு முன்னின்று செயற்படுபவர்கள். குறித்த விபத்துச் சம்பவத்தையடுத்து நாங்கல்ல மக்கள் மட்டுமல்ல செய்தியறிந்த அனைவரும் பெருந் துயருக்கு ஆளானார்கள். இந்த விபத்தினால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நாங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பலரும் கடந்த சில தினங்களாகவே நோன்பிருந்து இந்த இளைஞர்களுக்காக துஆச் செய்து வருகின்றனர். நாமும் இவர்களுக்காக பிரார்த்திப்போம். திடீர் விபத்துகளிலிருந்து பாதுகாப்பு வேண்டுவோம். அத்துடன் அனுபவமற்றவர்களின் கைகளில் வாகனங்களை ஒப்படைப்பதையும் தவிர்த்துக் கொள்வோம்.- Vidivelli