(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான இறுதி அறிக்கையில் இலங்கையின் வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் மற்றும் அபிலாசைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு கோரும் மகஜரொன்று ஐ.நா.வின் செயலாளருக்கு அனுப்பும் பொருட்டு UNHRC யாழ் அலுவலக பிரதிநிதி திருமதி. காயத்திரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மகஜர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மக்கள் பணிமனை தவிசாளரும், வடக்கு முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பின் செயலாளருமான அஷ்ஷெய்க் பி.எ.எஸ். சுபியான் மற்றும் அமைப்பாளர் ஏ.சி.எம். கலீல் என்போரினால் UNHRC யாழ் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “தாங்கள் இலங்கை தொடர்பான அறிக்கையை சென்ற வாரம் வெளியிட்டிருந்தீர்கள். இவ்வறிக்கையில் எவ்வித தவறுகளும் செய்யாத ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்கள் ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, வருடங்கள் பல கடந்தும் தீர்வுகள் கிட்டாதுள்ளனர்.இவர்கள் பற்றி கவனம் செலுத்தப்படவில்லை என்பதே எமது கவலையாகும்.
மறக்கப்பட்ட சமூகமாக இருக்கும் இலங்கையின் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தாங்கள் இக்கூட்டத்தொடரில் கவனம் செலுத்தி இறுதி அறிக்கையில் உள்வாங்க சர்வதேசத்தின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்ப ஆதரவு தாருங்கள். இது தொடர்பில் இலங்கை அரசுக்கும் அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு தாங்களை வேண்டிக்கொள்கிறோம்.
வட மாகாணத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தமது அசையும், அசையாத சொத்துக்களை பறிகொடுக்க வேண்டியேற்பட்டது. 2 மணி நேரத்தில் இனச்சுத்திகரிப்பு நிறைவேறியது.
32 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை. ஆட்சியாளர்களிடம் மீளக்குடியேற்றம் தொடர்பில் ஒரு நிலையான கொள்கை, திட்டமிடல், தொடர் வேலைத்திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சனத்தொகையைக் கொண்டுள்ள இம்மக்கள் ஆதரவற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
இம்மக்களிடையே இவ்இடைப்பட்ட கால கட்டத்தில் புதிய இரண்டு தலைமுறையினர் உருவாகியுள்ளனர். தீர்வு என்று வரும்போது இவர்களுக்கும் சேர்த்தே தீர்வு காணப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli