(நா.தனுஜா)
கொவிட் தொற்றின் போது முஸ்லிம் சமூகத்தை ஓரங்கட்டும்வகையிலும் அவர்கள் மீது பாகுபாடுகளை அதிகரிக்கும் விதமாகவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்தது. தற்போது கொவிட் தொற்றால் உயிரிழந்தோரை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருப்பினும் முஸ்லிம்களின் சமய உரிமைகளை உறுதிபடுத்துமாறு இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் சாராம்சம் வாசிக்கப்பட்டு, அதுகுறித்த விவாதமும் இடம்பெற்றது. இவ்வாறானதொரு பின்னணியில் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, வடமெசிடோனியா மற்றும் மாலாவி ஆகிய 6 இணையனுசரணை நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பில் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் தயாரித்துள்ள புதிய பிரேரணையின் வரைபு நேற்று முன்தினம் பகிரங்கப்படுத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களால் வழிநடத்தப்பட்டு, மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனத்தை மீளுறுதிப்படுத்தி, மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளை மீளநினைவூட்டும் வகையில் இப்பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இறையாண்மையுடைய, சுயாதீனமானதும் ஐக்கியமானதும் சுயாட்சியுடையதுமான இலங்கையை அங்கீகரிக்கும் அதேவேளை, மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன் அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசினதும் முக்கிய பொறுப்பாகும் என்று அப்பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இலங்கை முகங்கொடுத்துவரும் மிகத்தீவிரமான பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நெருக்கடி மக்கள்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்பவற்றை ஏற்பதாகவும், இருப்பினும் தீவிர இராணுவமயமாக்கல், ஆட்சிநிர்வாகத்தில் நிலவும் பொறுப்புக்கூறலின்மை மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்குத் தண்டனை வழங்கப்படாமை ஆகியன உள்ளடங்கலாக தற்போதைய நெருக்கடி தோற்றம்பெறுவதற்குப் பங்களிப்புச்செய்த காரணிகளைக் கண்டறிந்து தீர்வை வழங்கவேண்டியதும் தற்போதைய மற்றும் முன்னாள் அரச அதிகாரிகள் உள்ளடங்கலாக ஊழல்மோசடிகளுக்குக் காரணமானவர்களை விசாரணைக்குட்படுத்தி பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதும் அவசியம் எனவும் அப்பிரேரணை ஊடாக இணையனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
‘அமைதிவழிப்போராட்டங்கள் அபிவிருத்தியிலும் தேர்தல்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி உள்ளடங்கலாக ஜனநாயகக்கட்டமைப்பின் செயற்திறனை வலுப்படுத்துவதிலும் நேர்மறையான பங்களிப்பை வழங்கக்கூடும் என்பதுடன் போராட்டங்களில் கலந்துகொள்வதென்பது கருத்துக்களை வெளிப்படுத்தல் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் ஆகியவற்றுக்கான உரிமையை அனுபவிப்பதன் ஓர் முக்கிய வடிவமாகும்’ என்று பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள், கடந்த 2021 ஓகஸ்ட் மாதத்திலிருந்து நாட்டில் 4 முறை அவசரகாலச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளது.
‘நல்லிணக்கத்திற்கு மிகவும் அவசியமான அரசியல் அதிகாரப்பகிர்வு, அனைத்துப்பிரஜைகளுக்கும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றை உறுதிசெய்வதில் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் மற்றும் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் உள்ளடங்கலாக நாட்டிலுள்ள அனைத்து மாகாணசபைகளும் செயற்திறனாக இயங்குவதை உறுதிசெய்தல் ஆகியவற்றின் மூலம் உள்ளுராட்சி நிர்வாகத்திற்கு மதிப்பளிக்குமாறும் அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம்’ என்று புதிய பிரேரணையில் இணையனுசரணை நாடுகள் தெரிவித்துள்ளன.
மேலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அடையப்பட்டுள்ள மிகச்சொற்பளவிலான முன்னேற்றம் அவை தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளன.
இதேவேளை, இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்று நோய் பரவ ஆரம்பித்தபோது, மத நம்பிக்கைகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் அரசாங்கம் எடுத்த தீர்மானம் முஸ்லிம் சமூகத்தை ஓரங்கட்டுவதாகவும் அவர்கள் மீதான பாகுபாடுகளை அதிகரிப்பதாகவும் அமைந்திருந்தது. தற்போது கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் முஸ்லிம்களும் ஏனைய மதத்தவர்களும் தமது சமய உரிமைகளை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துமாறு வலியுத்தப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்வதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பன தொடர்பிலான கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் ஆகியவற்றை விரிவுபடுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தைக் கேட்டுக்கொள்வதுடன் அதுகுறித்து எதிர்வரும் 53 ஆவது மற்றும் 55 ஆவது கூட்டத்தொடர்களில் வாய்மொழிமூல அறிக்கையையும் 54 ஆவது கூட்டத்தொடரில் எழுத்துமூல அறிக்கையும் 57 ஆவது கூட்டத்தொடரில் விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு கோருகின்றோம்’ என்று இணையனுசரணை நாடுகள் அப்புதிய பிரேரணையில் குறிப்பிட்டுள்ளன.- Vidivelli