சிறுபான்மை கட்சிகளின் கூட்டு சாத்தியப்பட வேண்டும் 

0 1,095

முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பொன்று உருவாகவேண்டும் என்ற அவா நம் சமூகத்தின் மத்தியில் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என தேசிய அரசியலில் கால்பதித்த கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று இன்னும் சில கட்சிகள் நம் சமூகத்திடையே முளைத்திருக்கிறது. சமாதான ஐக்கிய முன்னணி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்பன பல உள்ளூராட்சி மன்றங்களிலும் பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளன. அத்துடன் நுஆ கட்சியும் மீண்டும் தூசுதட்டி எடுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு முஸ்லிம்கள் கட்சி ரீதியாக பல பிரிவுகளை கொண்டிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால்தான் அதிகளவான முஸ்லிம்களின் அரசியல் முதலீடான வாக்குகள் சங்கமித்திருக்கின்றன என்பது உண்மையே. இது ஒருபுறமிருக்க பிரிந்திருக்கும் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டுமென்ற முயற்சிகள் பலதடவைகள் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.

ஆனாலும் அண்மையில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட குழப்பகரமான நிலைமையின்போது மு.கா.வும், அ.இ.ம.க.வும் கருத்தொற்றுமையுடன் செயற்பட்டமை தேவையானபோது ஒற்றுமையை வெளிப்படுத்தியிருந்தமை மன ஆறுதலை தந்தது. அத்தோடு, இரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்த சமிஞ்ஞைகளையும் காட்டியிருந்தன. இது ஆரோக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் ஒன்றிணைந்த செயற்பாட்டிற்கான அத்திவாரம் இடப்படவில்லை என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைகொண்டுள்ள முஸ்லிம் கட்சிகள் தேசிய நலனுக்காக ஒன்றிணைந்து தேசப்பற்றை காட்டியிருந்த சந்தர்ப்பத்தில் அதற்கு ஒருபடி மேலே சென்று சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஆரம்பப் புள்ளி முஸ்லிம் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டிருக்கின்றமை ஒரு முன்னுதாரனமான செயற்பாடாக பார்க்கலாம்.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் ஏ.எச்.எம்.அஷ்ரபின் காலத்தில் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் என்றொரு அமைப்பிருந்தது. அதன் தலைமைப் பொறுப்பை அஷ்ரப் ஏற்று முன்னின்று நடத்தியிருந்தார். காலப்போக்கில் அவ்வமைப்பு மறைந்துவிட்டது. இன்று அதே முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தை கடந்த வாரம் குருநாகலில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின்போது வலியுறுத்தியிருந்தார். அத்தோடு, ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அழைப்பையும் விடுத்திருந்தார்.

”அரசியல் பிரச்சினை, நிர்வாகப் பிரச்சினை, இனப்பிரச்சினை போன்றவற்றுக்குத தீர்வு காண்கின்றபோது அவை யதார்த்தமாக இருக்கவேண்டுமானால் அது ஒரு புறத்திலிருந்து மாத்திரம் பெறக்கூடிய தீர்வகாக இருக்கமுடியாது. பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் விடயத்தில், கூட்டு வைத்திருக்கும் தேசியக் கட்சியுடன் உடன்பாட்டுக்கு வருகின்ற அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தேவையேற்படின் மலையக கட்சிகளுடனும் சமாந்தரமாகப் பேசவேண்டும். சிறுபான்மை மக்கள் அச்சப்படுகின்ற ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு, நாடுதழுவிய தேர்தலில் சாதிக்க வேண்டுமாயின் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்துப் பயணிக்க வேண்டும்” என முன்னாள் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உரை பல தரப்பிலும் கைத்தட்டல்களை பெற்றுக்கொண்டது. மறுதினமே இந்த விடயத்தை வரவேற்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ  கணேஷன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

”சிறுபான்மை கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என்ற கருத்தை நண்பர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். இதை நான் வரவேற்கிறேன். சிறுபான்மை கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டுமென்ற கருத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து தேர்தல் கூட்டாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாடுகள் அவ்வந்த கட்சிகளை பொறுத்தவை ஆகும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன், சிறுபான்மை கட்சிகளின் கூட்டு முயற்சி தேசிய நலன்களை அடிப்படையாக கொண்டதாகும் என்பதையும், இது சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல என்பதையும் நாம் உரக்க எடுத்து கூறவேண்டும் எனவும் மனோ நம்பிக்கை வெளியிட்டிருந்கிறார்.

உண்மையில் மஹிந்தவுக்கு எதிரான அரசியல் போராட்டத்திற்கும் ஜனநாயத்தை பாதுகாப்பதற்கான ஜனநாயகப் போராட்டத்திலும் முஸ்லிம் தமிழ் தரப்புகள் ஓரணியில் இருந்து செயற்பட்டுள்ளன. இதுதவிர மஹிந்த தரப்பில் இருக்கும் விமல், கம்மன்பில, தினேஷ் உள்ளிட்டோரும் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் சிங்கள தேசியவாத மற்றும் இனவாத அமைப்புகளும் சிறுபான்மை கூட்டு முயற்சியை சிங்கள மக்கள் மத்தியில் வித்தியாசமான முறையில் கொண்டுபோய் சேர்த்து அதில் சுயலாபமடைய முயற்சிக்கலாம். இது கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஏன் தேசிய கட்சியில் இருக்கும் சில கடும்போக்கு அரசியல்வாதிகளும் இவ்வாறு கடந்த காலங்களில் செயற்பட்டிருக்கின்றனர். வடக்கை சம்பந்தனுக்கும் கிழக்கை ஹக்கீமுக்கும் ரணில் பிரித்துக் கொடுத்துவிடுவார் என்ற பிரசாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுத்தவர்களுக்கு இது பெரிய காரியமல்ல.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மனோ கணேஷன் குறிப்பிட்டவாறு சிங்கள மக்கள் மத்தியில் சரியானதொரு தெளிவொன்றை ஏற்படுத்தவேண்டியிருக்கிறது.

இதேவேளை, பிரதான தமிழ் தரப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த முயற்சியை வரவேற்றுள்ளது. ”நாட்டின் சிறு தேசிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 40 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதுகுறித்து கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் கலந்தாலோசித்தோம். எனினும், இப்போதுதான் சரியான நேரம் கூடி வந்திருக்கிறது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான இலங்கை தமிழரக் கட்சியின் தாலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் அடுத்தவாரம் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது. இதன்போது எதிர்கால நமது செயற்பாடுகள் குறித்தும் ஒன்றிணைந்த பயணம் குறித்து ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றிணைந்து மேற்கொள்ளும் செயற்பாடுகளில்தான் வெற்றி இருக்கிறது என்று அரசியல் விமர்சகரும் சட்ட வல்லுநருமான வை.எல்.எஸ்.ஹமீட் சுட்டிக்காட்டினார். அத்தோடு, ”சிறுபான்மையின பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த செயற்பாடானது வெற்றியளிக்கவேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். ஆனாலும் எந்த முன்னேற்றமான முடிவுகளையும் சிறுபான்மையினர் காணவில்லை” என்றார்.

இலக்கு இல்லாத பயணம் வெற்றியளிப்பதில்லை என்பது யதார்த்தமே. அவ்வாறே குறித்த முயற்சிக்கான இலக்கு என்ன என்பது தெளிவாகக் கூறப்பட வேண்டும். இதை சுட்டிக்காட்டுகிறார் முன்னாள் மு.கா. செயலாளரும் சமாதான ஐக்கிய முன்னணியின் தலைவருமான எம்.ரி.ஹஸனலி, ”சிறுபான்மை சமூகங்களுக்கு வெவ்வேறான பிரச்சினைகள் இருக்கின்றன. அதிலும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு தென்னிலங்கை முஸ்லிம்களுக்கும் உள்ள பிரச்சினைகளும் வேறுபடுகின்றன. இவ்வாறானதொரு நிலையில் பொது உடன்பாட்டுக்கு வரும் காலம் குறிப்பிடப்பட்ட இலக்குகள் முக்கியமானவை”

இலக்குகளோடு பயணித்து சிறுபான்மை மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமென்பதே அனைவரதும் அவா…!
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.