நாட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் எண்ணிக்கை சுமார் 2544 ஆகும். அத்தோடு நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பதிவின்றியே இயங்கி வருகின்றன.
நாம் அல்லாஹ்வின் மாளிகையாகக் கருதும் பள்ளிவாசல்களில் பெரும் எண்ணிக்கையானவை நிர்வாகச் சீர்கேடுகளும், ஊழல்களும் நிறைந்து காணப்படுவதை அண்மைக்கால சம்பவங்கள் உறுதி செய்துள்ளமை கவலை தருகிறது.
அண்மையில் அநுராதபுரம் அசரிகம ஜும்ஆ பள்ளிவாசலில் நடந்தேறிய கொடூர சம்பவம் முஸ்லிம் சமூகத்தை தலை குனியச் செய்துள்ளது. அல்லாஹ்வின் மாளிகையான பள்ளிவாசலை நிர்வகிக்கும் நிர்வாகியொருவரே சக நிர்வாகியொருவரைக் கொலை செய்துள்ளார். அதுவும் உழ்ஹிய்யா இறைச்சி பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்ட முரண்பாடுகளே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் அறிக்கை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினது கள உத்தியோகத்தரின் அறிக்கைகள் பள்ளிவாசல் நிர்வாகிகளே இதற்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளன.
இவ்வாறான ஒரு கொலைச் சம்பவத்தின் பின்பேனும் பள்ளிவாசல் தொடர்பான விவகாரங்களில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பள்ளிவாசல்களில் பல்வேறு குழப்பங்கள் பதிவாகி வருவதற்கு முறையான யாப்பு இன்றி அவை இயங்கி வருவதே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந் நிலையில் பள்ளிவாசல்களை சீராக இயங்கச் செய்வதற்கு திணைக்களம் மாதிரி யாப்பொன்றினை வடிவமைத்துள்ளது. மாதிரியாப்பு அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் குறிப்பிட்ட யாப்பினை மீறிச் செயற்படும் பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்சார் தெரிவித்துள்ளார்.
ஏலவே தமக்கென பிரத்தியேக யாப்புகளைக் கொண்டுள்ள பள்ளிவாசல்கள் கூட அவற்றைப் பின்பற்றுவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவான யாப்பு முறைமை பள்ளி வாசல்களில் இன்மையால் 60 முதல் 70 வீதமான பள்ளிவாசல்களில் நிர்வாக சபைத் தெரிவுகள் தொடர்பில் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திணைக்களம் உறுதி செய்துள்ளது.
பள்ளிவாசல் நிர்வாகங்களில் அரசியல் தலையீடுகளும், ஊழல்களும் மலிந்திருப்பதாக தொடராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. தற்காலிக அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்ட கல்முனை முஹைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையின் பதவிக்காலம் கடந்த 2008 ஆம் ஆண்டு நிறைவடைந்து விட்டாலும் அரசியல் தலையீடுகள் காரணமாக புதிய நிர்வாகசபை கடந்த 14 வருட காலமாக நியமிக்கப்படவில்லை. பலகோடி ரூபாய் சொத்துக்களை கொண்ட இப்பள்ளிவாசல் தனி நபரொருவரினாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
வக்பு சபை புதிய நிர்வாக சபையொன்றினை நியமிக்க நடவடிக்கை எடுத்தும் அரசியல் பின்புலம் காரணமாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சினால் அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடுகளுக்கான சிறந்த உதாரணம் இதுவாகும்.
இதுமாத்திரமல்ல பள்ளிவாசல்கள் மற்றும் அரபு மத்ரஸாக்கள், சமய ஸ்தலங்களின் வக்பு சொத்துக்களுக்கும் இன்று சவால்கள் மேலோங்கியுள்ளன.
வக்பு சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்களில் ஒரு சிலவே தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான வக்பு சொத்துக்கள், கபூரிய்யா அரபுக் கல்லூரிக்கான வக்பு சொத்துக்கள் போன்ற குறிப்பிட்டுக் கூறக்கூடிய சவால்கள் குறித்தே சமூகம் அறிந்து வைத்துள்ளது. ஆனால் நூற்றுக்கணக்கான வக்பு சொத்துக்கள் தனிநபர்களால், திட்டமிட்ட குழுவினரால் கையகப்படுத்தி அனுபவிக்கப்பட்டு வருகின்றன.
வக்பு சபை இது விடயத்தில் அதிக கரிசனை கொள்ள வேண்டும். பள்ளிவாசல்களுக்கு நிர்வாகிகளை நியமிப்பதில் மாத்திரம் கவனம் செலுத்தாது வக்பு சொத்துக்கள் தொடர்பிலும் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும். குறித்த சொத்துக்கள் மூலம் கிடைக்கப் பெறும் கோடிக்கணக்கான ரூபா வருமானத்தை சமூக நலன்களுக்காக பயன்படுத்த முன்வர வேண்டும்.
இதற்காக வக்பு சபை நாட்டில் அமுலிலுள்ள வக்பு சட்டத்தை கடுமையாக அமுல் நடத்துவதற்கு முன்வரவேண்டும். நாட்டிலுள்ள வக்பு சொத்துக்களை பட்டியலிட்டு, அச்சொத்துக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காணவேண்டும். இச்செயற்திட்டங்கள் உடனடியாக தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும். இதனையே சமூகம் வக்பு சபையிடமிருந்தும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடமிருந்தும் எதிர்பார்க்கிறது.
அத்தோடு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் சுயநலன்களுக்காகப் பள்ளிவாசல்களைப் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறான அரசியல்வாதிகளை சமூகம் இனங்கண்டு நிராகரிக்க வேண்டும்.
ஐவேளை பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழுவதுடன் மாத்திரம் எமது கடமை பூர்த்தியாகிவிட்டதாக கருதக்கூடாது. பள்ளிவாசல்களையும், பள்ளிவாசல் வக்பு சொத்துக்களையும் பாதுகாப்பது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். இவ்விடயத்தில் நாம் வேறுபாடுகளின்றி ஒன்றுபட வேண்டும்.- Vidivelli