மஹர பள்ளிவாசல் மையவாடிக்கும் சவால்
முஸ்லிம் சமய திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தது நிர்வாகம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மஹர சிறைச்சாலை வளாகத்தில் இயங்கிவந்த ஜும்ஆ பள்ளிவாசல் மூடப்பட்டு 3 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் பள்ளிவாசலுக்கு சொந்தமான மையவாடிக்கும் தற்போது சவால்கள் எழுந்துள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
40 பேர்ச்சஸ் பரப்பளவைக் கொண்ட சுமார் 52 வருடகாலம் வரலாறு கொண்ட மையவாடியும் சிறைச்சாலை நிர்வாகத்தினால் எதிர்காலத்தில் கையேற்கப்பட்டால் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு முஸ்லிம்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என மஹர சிறைச்சாலை வளாக பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் ஹபீல் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலையடுத்து குறிப்பிட்ட பள்ளிவாசல் முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்டது. முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்குள் பிரவேசிப்பது முற்றாக மறுக்கப்பட்டது. அத்தோடு 2020 ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி பள்ளிவாசல் சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வறையாக மாற்றப்பட்டதுடன் அங்கு புத்தர் சிலையும் வைக்கப்பட்டு பெளத்தமத வழிபாடுகள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் ஹபீல் இது தொடர்பில் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில், இப்பள்ளிவாசலுக்கு 40 பர்ச்சஸ் காணி மையவாடியாக உபயோகப்படுத்துவதற்கு 1970 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்ட அபிவிருத்திக்குழு (District Development Council) அதிகாரியினால் வழங்கப்பட்டது. அதற்கான ஆவணமுள்ளது. தற்போது பள்ளிவாசலை சிறைச்சாலை நிர்வாகம் கையேற்றுள்ள நிலையில் இம்மையவாடி காணிக்கும் சவால் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் பள்ளிவாசல் ஜமாஅத்தாக சுமார் 500 குடும்பங்கள் வாழ்கின்றன. இம்மையவாடி காணியை சட்ட ரீதியாக பெற்றுக்கொள்வதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற 3 வருடங்களுக்கு முன்பிருந்தே பள்ளிவாசல் நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோதும் இது பலனளிக்கவில்லை.
இக்காணி துறைமுக அதிகார சபைக்கு சொந்தமாக இருந்துள்ளது. இக்காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பெடுத்து பிரதேச சபைக்கு வழங்க வேண்டும். பிரதேச சபை இக்காணியை பள்ளிவாசலுக்கு கையளிக்க வேண்டும்.
பள்ளிவாசலை தற்போது சிறைச்சாலை நிர்வாகம் பொறுப்பேற்று சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வறையாக மாற்றியுள்ள நிலையில் பள்ளிவாசலின் கீழ் இயங்கி வந்த மையவாடி காணிக்கு சவால் ஏற்பட்டுள்ளது. இது விடயத்தில் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை தலையிட்டு பள்ளிவாசலையும் மையவாடியையும் மீட்டுத்தரவேண்டும் என்றார்.
திணைக்களத்தின் பணிப்பாளர்
இவ்விவகாரம் தொடர்பில் விடிவெள்ளி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸாரிடம் வினவியது. அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
மஹர பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாக சபையும், திணைக்களமும் நீதி,சிறைச்சாலைகள் மற்றும் அரசியல் யாப்பு திருத்தம் அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளது. சந்திப்புக்கான திகதியொன்றினைக் கோரியுள்ளோம். பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம். சிறைச்சாலை நிர்வாகத்தினால் பொறுப்பேற்றுள்ள பள்ளிவாசலை மீளப் பெற்றுக்கொள்வதே எமது இலக்கு. பள்ளிவாசல் மீள கையளிக்கப்படாவிட்டால் அப்பகுதி சுற்றாடலில் பள்ளிவாசலுக்கென காணி அல்லது கட்டிடமொன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிப்போம். பள்ளிவாசலை மீளப்பெற்றுக்கொண்டால் மையவாடிக்கும் சவால் ஏற்படமாட்டாது என்றார்.- Vidivelli