முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜெனீவா பயணம் : உயிர்த்த ஞாயிறு தாக்குதல், பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து எடுத்துரைக்க திட்டம்
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்தும் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவர முஸ்தீபு
(எஸ்.என்.என்.சுஹைல்)
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 51வது அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணையொன்று குறித்த தொடரில் கொண்டுவரப்படவுள்ள நிலையில் அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று விஜயம் செய்துள்ளது. இதனிடையே, நாளை மறுதினம் கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆகியோர் ஜெனீவா செல்லவுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் விவகாரம் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்த வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெறுவதுடன் இவ்விடயத்தில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த தாக்குதலுக்கு பின்னரான முஸ்லிம்கள் மீதான நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் விடயமாகவும் பேசப்படவிருப்பதாக அவர் விடிவெள்ளிக்கு மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்தி முறையற்ற விதத்தில் இடம்பெறும் கைது நடவடிக்கைகள் மற்றும் சிவில் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் குறித்தும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அண்மைக்காலமாக அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த பலரும் அத்துமீறி கைது செய்யப்படுவது குறித்தும் அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் எடுத்துரைக்கவுள்ளோம்.
ஜெனீவா கூட்டத் தொடர் இடம்பெறுகின்றவேளையில் அங்கு இடம்பெறும் இணை அமர்வுகளில் கலந்துகொண்டு மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேசவுள்ளோம். அத்தோடு, சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்து இலங்கை மக்களின் நிலைமை குறித்து எடுத்துரைக்க எதிர்பார்ப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார். – Vidivelli