வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு உதவி செய்யுங்கள்
முஸ்லிம் சமூகத்திடம் ஜம்இய்யதுல் உலமா, பள்ளிவாசல்கள் சம்மேளனம் கோரிக்கை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பாகிஸ்தானில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா, கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்பன முஸ்லிம் சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு உதவும் வகையில் நாளை 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும், எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும், ஜும்ஆ தொழுகையின் பின்பு பள்ளிவாசல்களில் நிதி சேகரிக்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ.சித்திக் முஸ்லிம்கள் நிர்க்கதியாகியுள்ள பாகிஸ்தான் மக்களுக்காக தங்களால் இயன்ற நிதியுதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் உதவிகள் நிவாரணப்பொருட்களாக இல்லாது, நிதியுதவியாக வழங்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளதால் நிதி உதவி மாத்திரமே வழங்கப்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது.- Vidivelli