ஏ.ஆர்.ஏ.பரீல்
பாகிஸ்தான் என்றுமில்லாதவாறு வரலாறு காணாத வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டுள்ளது. இவ் அனர்த்தம் பூமி அதிர்ச்சியை விடவும் பயங்கரமானதாகும். நாட்டின் மூன்றிலொரு பாகம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. எமக்கு நிவாரண பொருளுதவிகளைவிட நிதி உதவியே தேவைப்படுகிறது என பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் உமர் பாரூக் புர்கி வேண்டுகோள் விடுத்தார்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு நிவாரண உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புகளை தெளிவுபடுத்துகையிலேயே பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இது தொடர்பான கூட்டமொன்று கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம் பெற்றது. வர்த்தக சமூக பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்களின் உரிமையாளர்களுடனான இந்த சந்திப்பில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேலும் உரையாற்றுகையில்,
சர்வதேச சமூகம் பாகிஸ்தானுக்கு தொடர்ந்தும் உதவிகளைச் செய்து வருகிறது. எமக்கு பொருள் உதவியினைவிட பண உதவியே தேவைப்படுகிறது. ஏனென்றால் பொருளுதவிகளை தற்போதைய சூழலில் பகிர்ந்தளிப்பதில் சிக்கல் நிலவுகிறது. நாட்டில் மூன்றிலொரு பகுதி தண்ணீரில் மூழ்கியுள்ளது. இலங்கை அரசாங்கம் ஒரு தொகுதி தேயிலையை எமக்கு நிவாரண உதவியாக வழங்கியுள்ளது என்றார்.
நிகழ்வுக்கு வர்த்தக பிரமுகர்கள், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள். சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், நிறுவனங்களின் தலைவர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள், கொழும்பு மற்றும் கண்டி பள்ளிவாசல் சம்மேளனங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இங்கு வழங்கப்பட்டுள்ள வங்கி கணக்குகள் ஊடாக நிதி உதவிகளை வழங்க முடியும்.
வெள்ள அனர்த்தம் தொடர்பான புள்ளிவிபரங்களும் இச் சந்திப்பில் வெளியிடப்பட்டன. பாகிஸ்தானில் பருவமழை மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் இதுவரை 1325 பேர் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளனர். இவர்களில் 350க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளடங்குவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்துள்ள பல பகுதிகளை மீட்புக்குழுவினரால் அணுக முடியாத நிலைமை உள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இயற்கை அனர்த்தத்தினால் 12703 பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பாகிஸ்தானின் 225 மில்லியன் சனத்தொகையில் சுமார் 33 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சனத்தொகையில் 15 வீதமாகும். தொடர்ந்தும் கணக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (NDMA) தரவுகளின்படி 1,688,005 வீடுகள் வெள்ளத்தினால் அழிக்கப்பட்டு சிதைந்து போயுள்ளன. மில்லியன் கணக்கான மக்கள் திறந்த வெளியில் கூடாரங்களில் உறங்கும் அவல நிலைமையைக் காணக்கூடியதாகவுள்ளது. 4 இலட்சத்து 70 ஆயிரம் பேர் தங்கள் இடங்களிலிருந்து வீடுகளையும் உடமைகளையும் இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
5 735 கிலோ மீற்றர் வீதிகள் சிதைவடைந்துள்ளதுடன் சுமார் 246 பாலங்கள் சிதைந்து உருக்குலைந்து போயுள்ளன. இதனால் போக்குவரத்து கட்டமைப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை 3.6 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழிவுக்குள்ளாகியுள்ளன. சுமார் 750481 கால்நடைகள் வெள்ள அனர்த்தத்தினால் இறந்துள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தைபோயிட், வயிற்றோட்டம், டெங்கு காய்ச்சல், தோல் சம்பந்தமான நோய்களுக்குள்ளாகியுள்ளனர். பெரும் எண்ணிக்கையானோர் சிகிச்சை பெற்றுக்கொள்ள இயலாத துர்ப்பாக்கிய நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுவரை பாகிஸ்தானில் 160க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஏறத்தாழ 3 பகுதி தண்ணீரில் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன. பலுசிஸ்தான் சிந்து, கைபர் மற்றும் பக்துன்க்வா மாகாணங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.- Vidivelli