வில்பத்து விவகாரத்தின் தீர்ப்புக்கு எதிராக ரிஷாத்தின் மேன்முறையீடு: விசாரிப்பதிலிருந்து நீதியரசர் அர்ஜுன விலகல்

- ஜனவரி 19 வரை மனு ஒத்தி வைப்பு

0 325

(எம்.எப்.எம்.பஸீர்)
பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து தேசிய பூங்கா காட்டுப் பகு­தியில், கல்­லாறு சர­ணா­ல­யத்தில் காட்டை அழித்­தமை தொடர்பில் முன்னாள் அமைச்­சரும் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் பொறுப்புக் கூற வேண்டும் என மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் தீர்ப்­ப­றி­வித்­தி­ருந்­தது. இதற்கு எதி­ராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் உயர் நீதி­மன்றில் விஷேட மேன் முறை­யீட்டு மனு­வினை தாக்கல் செய்­துள்ள நிலையில் அம்­மனு குறித்த பரி­சீ­ல­னை­யி­லி­ருந்து உயர் நீதி­மன்ற நீதி­யரசர் அர்­ஜுன ஒபே­சே­கர வில­கி­யுள்ளார்.

அழிக்­கப்­பட்ட வனப்­ப­கு­தியை மீள உரு­வாக்க, ரிஷாத் பதி­யுதீன் அப்­ப­கு­தியில் தனது சொந்த செலவில் மரம் நட வேண்டும் என, மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் உத்­தரவிட்ட நிலையில் அந்த தீர்ப்­பா­னது சட்­டத்­துக்கு முர­ணா­னது எனவும், அத் தீர்ப்பை வலுவிழக்கச் செய்­யு­மாறும் மேன் முறை­யீடு ஊடாக ரிஷாத் பதி­யுதீன் கோரி­யுள்ளார்.
ஆப்தீன் சட்­டத்­த­ர­ணிகள் நிறு­வனம் ஊடாக இம்­மேன்­மு­றை­யீட்­டினை தாக்கல் செய்­துள்ள ரிஷாத் பதி­யுதீன், 8 பேர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

அதன்­படி சுற்­றுச்­சூழல் நீதிக்­கான மையம், வன பாது­காப்பு திணைக்­கள பணிப்­பாளர் நாயகம், மத்­திய சுற்­றாடல் பாது­காப்பு அதி­கார சபை, வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம், தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம், மன்னார் மாவட்ட செய­லாளர், சுற்­றாடல் அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகிய 8 பேர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்ப்ட்­டுள்­ளனர்.

இந் நிலையில் இந்த விஷேட மேன் முறை­யீட்டு மனு, உயர் நீதி­மன்ற நீதி­யரசர் காமினி அம­ர­சே­கர தலை­மை­யி­லான நீதி­யரசர்களான அச்­சல வெங்­கப்­புலி மற்றும் அர்­ஜுன ஒபே­சே­கர ஆகியோர் முன்­னி­லையில் பரி­சீ­ல­னைக்கு வந்­தி­ருந்­தது.

இதன்­போதே விஷேட மேன் முறை­யீ­ட்டு மனுவின் மூல­மான, மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் நடந்த வழக்கு விசா­ர­ணையில் தனது பங்­க­ளிப்பும் இருந்­ததால் தான் மேன் முறை­யீட்டு மனுவை விசா­ரிப்­ப­தி­லி­ருந்து வில­கு­வ­தாக நீதி­யரசர் அர்­ஜுன ஒபே­சே­கர அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து இந்த மனு­வா­னது எதிர்­வரும் 2023 ஜன­வரி 19 ஆம் திக­திக்கு ஒத்திவைக்­கப்பட்­டது.

முன்­ன­தாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளுக்கு உட்­பட்ட விடயம் நடந்­த­தாக கூற­ப்படும் காலப்பகு­தியில், தான் வீட­மைப்பு அமைச்­சரோ அல்­லது வனப் பாது­காப்பு அமைச்­ச­ரா­கவோ இருக்­க­வில்லை என விஷேட மேன் முறை­யீட்டு மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள ரிஷாத் பதி­யுதீன், தான் காட­ழிப்பு மற்றும் மீள் குடி­ய­மர்த்தல் நட­வ­டிக்­கை­களை குறித்த பகு­தியில் சட்ட விரோ­த­மாக முன்­னெ­டுக்­க­வில்லை எனவும், அவ்­வாறு தான் செயற்­பட்­ட­மைக்­கான எந்த சான்­று­களும் இல்­லாத நிலையில் குறித்த மேன் முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை செல்லுபடியற்றதாக்குமாறும் அம்மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.

கடந்த 2019 நவம்பர் 19 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றம் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.