வணாத்தவில்லு விவகார வழக்கு : தஸ்லீம் அழைப்பெடுத்தது யாருக்கு?
சஹ்ரான், ஹஸ்தூன் வணாத்துவில்லுவுக்கு அடிக்கடி சென்றனரா?
எம்.எப்.எம்.பஸீர்
புத்தளம் – வணாத்தவில்லு, பகுதியில் வெடிபொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் இடமொன்றினை முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணைகள் கடந்த ஆகஸ்ட் 24, 25, 26 ஆம் திகதிகளில் இவ்வழக்கை விசாரணை செய்யவென விஷேடமாக அமைக்கப்பட்டுள்ள மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய ட்ரயல் அட் பார் சிறப்பு நீதிமன்ற அமர்வு முன்னிலையில், புத்தளம் மேல் நீதிமன்றில் நடந்தது. நீதிபதிகளான ஹசித்த பொன்னம்பெரும, நிசாந்த ஹப்பு ஆரச்சி மற்றும் நயோமி விக்ரமசிங்க ஆகியோர் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட் பார் நீதிமன்ற அமர்வு முன்னிலையிலேயே இவ்விசாரணைகள் நடந்தன.
அதன்படி 4 சாட்சியாளர்களின் சாட்சியங்கள் இதுவரையில் இவ்வழக்கில் நெறிப்படுத்தப்பட்டு, குறுக்கு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கானது 14 குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த 2021 ஏப்ரல் 28 ஆம் திகதி சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தற்போதும் மரணமடைந்துள்ள மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அச்சு மொஹம்மது அஹமது ஹஸ்தூன் ஆகியோருடன் இணைந்து, வணாத்தவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரிக்கும் மற்றும் தயாரிக்கும் இடமொன்றினை முன்னெடுத்து சென்றதாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 6 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அபூ தஹ்தா எனும் மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும் அமீன் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ், கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை, அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ், அபூ செய்த் எனும் நெளபர் மெளலவி அல்லது மொஹம்மட் இப்ராஹீம் நெளபர், அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி ஆகிய 6 பேருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்தவாரம் விடிவெள்ளி பிரசுரித்த வழக்கு விசாரணைகளின் தொடர்ச்சியே இது.
முதல் சாட்சியாளராக சாட்சியம் அளித்த பிரதான விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மாரசிங்கவிடம், 1,2,4 ஆம் பிரதிவாதிகளுக்காக சட்டத்தரணிகளான வஸீமுல் அக்ரம், சஜாத், நதீஹா அப்பாஸ் ஆகியோருடன் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் குறுக்கு விசாரணைகளை தொடர்ந்தார்.
இதன்போது வெடிபொருள் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட, வணாத்துவில்லு தோட்டம் தொடர்பில் (குற்றப் பத்திரிகையில் லக்டோ தோட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது) குறுக்கு விசாரணைகள் செய்யப்பட்டன.
அந்த தோட்டம், குற்றம் சாட்டப்பட்டுள்ள 1, 2 ஆம் பிரதிவாதிகளுக்கு சொந்தமாவதற்கு முன்னர், யாருக்கு சொந்தமாக இருந்தது என முதலில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரதான விசாரணை அதிகாரி, அது குறித்த முழுமையான விசாரணைகளை பொலிஸ் அதிகாரி பாலித்தவே முன்னெடுத்ததாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து, குறித்த காணியின் 1615 எனும் இலக்கத்தை உடைய காணி உறுதிப் பத்திரத்தை மையப்படுத்தி குறுக்கு விசாரணைகள் நடந்தன.
Q: நீங்கள் வெடிபொருள் மீட்டதாக கூறும் குறித்த தோட்டப் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது ?
A: லக்டோ தோட்டம்
Q: அந்த தோட்டத்தை தவிர வேறு தோட்டங்கள் அங்கு இருந்தனவா?
A: ஆம்.. அதனை அண்மித்து வேறு தோட்டங்கள் இருந்தன.
Q: வெடிபொருள் மீட்கப்பட்ட காணிக்கு வேறு பெயர்கள் இருந்தனவா?
A: இல்லை… லக்டோ தோட்டம் என்றே அழைத்தனர்.
Q: ராசமடு காணி அல்லது காடு என ஒரு பெயர் இருந்ததா?
A: இல்லை… லக்டோ தோட்டம் என்றே அறிவேன்
Q: காணி உறுதிப் பத்திரத்தை பரிசீலித்து பதில் தாருங்கள்… அந்த காணியின் பெயர் லக்டோ தோட்டம் தானா?
A: (அதனை பரிசீலித்தவாறு) ஆம்… காணி உறுதியில் காணியின் பெயர் ராசமடு காணி என குறிப்பிடப்பட்டுள்ளது. லக்டோ தோட்டம் என அதில் இல்லை.
Q: நீர், வெடிபொருள் மீட்கப்பட்டதாக கூறும் தினத்தில் குறித்த இடத்தை அடையும் போது எத்தனை மணி இருக்கும்?
A: பிற்பகல் 3.05 மணி இருக்கும்
Q: அப்போது முதல் பிரதிவாதிக்கு தொலைபேசியில் அழைத்தீரா?
A: இல்லை
Q: உங்கள் குழுவில் யாரேனும் அழைத்தார்களா?
A: இல்லை… நான் அறிந்து அப்படி ஒருவரும் அழைக்கவில்லை.
Q: தஸ்லீம் எனும் ஒருவர் உங்கள் குழுவில் இருந்தாரா?
A: ஆம்… எனது தனிப்பட்ட உளவாளி
Q: தஸ்லீம் ஏதும் அழைப்பெடுத்தாரா?
A: தெரியாது
Q: நீர் பிரதான விசாரணை அதிகாரி. தஸ்லீம் என்பவர் உங்கள் தனிப்பட்ட உளவாளி. அப்படி இருக்கையில் உங்கள் அனுமதியில்லாமல் அவர் அழைப்பெடுத்திருக்க முடியாது அல்லவா? தஸ்லீம் ஏதும் அழைப்பினை மேற்கொண்டாரா?
A: சரியாக கூற முடியாது.
Q: நீங்கள் குறித்த இடத்தை அடையும் போது, 1,2 ஆம் பிரதிவாதிகள் அங்கிருந்ததாக வழங்கிய சாட்சியம் முற்றிலும் பொய்யானதாகும் என நான் பரிந்துரைக்கின்றேன் ?
A: இல்லை… நான் அதனை மறுக்கின்றேன்.
Q: நீர் அங்கு செல்லும் போது அங்கு யாரும் இருக்கவில்லை. ?
A: மறுக்கின்றேன்…1,2 ஆம் பிரதிவாதிகள் இருந்தனர்.
Q: 1,2 ஆம் பிரதிவாதிகள் இருந்ததாக நீர் சாட்சிகளை சோடித்துள்ளீர் ?
A: இல்லை… சாட்சிகளை சோடிக்க எனக்கு எந்த தேவையும் இல்லை.
Q: 1,2 ஆம் பிரதிவாதிகளை தஸ்லீம் ஊடாக அழைப்பெடுத்து குறித்த குற்றப் பகுதிக்கு நீரே வரவழைத்துள்ளீர்?
A: மறுக்கின்றேன்… நாம் லக்டோ தோட்டத்துக்கு சாதிக், சாஹித்தை தேடியே சென்றோம்.
Q: 2019 ஜனவரி 16 ஆம் திகதி பிற்பகல் 3.05 மணிக்கு குறித்த தோட்டத்தின் பிரதான வாயிலை அடைந்ததாக நீர் சாட்சியம் அளித்தீர். அப்படியானால் 1,2 ஆம் பிரதிவாதிகளை எப்போது நீர் முதன் முதலாக கண்டீர் ?
A: முதலில் அந்த வாயிலை அடைந்த போதே அவர்களின் தலைப் பகுதியை மட்டும் தூரத்தில் வைத்து கண்டேன். பின்னர் அரை மணி நேரத்துக்குள் அவர்களை நெருங்க முடிந்தது.
Q: முதல் பிரதிவாதி குறித்து சந்தேகம் எப்படி வந்தது ?
A: பயாஸின் தொலைபேசி அழைப்பிலிருந்து அந்த சந்தேகம் எழுந்தது. முதல் பிரதிவாதியான முபீஸ், பொலன்னறுவை பயாஸுடன் தொடர்பில் இருந்தமை தொலைபேசி பகுப்பாய்வில் தெரியவந்தது. பொலன்னறுவை பயாஸ் சாதிக்குடன் தொடர்பில் இருந்தார்.
Q: 0777616737 எனும் தொலைபேசி இலக்கம் ஞாபகமா?
A: (அறிக்கையை பரிசீலித்து) ஆம்… அது முதலாவது பிரதிவாதியின் தொலைபேசி இலக்கம்.
Q: அந்த இலக்கம் தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பு பகுப்பாய்வு அறிக்கை உள்ளதா?
A: ஆம்.. அது குறித்த அறிக்கையை பெற்று நீதிவான் நீதிமன்ற வழக்குக் கோவையில் சேர்த்தோம்.
Q: தஸ்லீமின் தொலைபேசி இலக்கம் ஞாபகமா?
A: இல்லை..
Q: நீங்கள் குறித்த தினம் தஸ்லீம் ஊடாக அழைப்பெடுத்து, 1,2 ஆம் பிரதிவாதிகளை அவ்விடத்துக்கு அழைத்துள்ளீர்கள் ?
A: இல்லை… நான் மறுக்கின்றேன்.
Q: 1,2 ஆம் பிரதிவாதிகளை அவர்கள் வேலை செய்த கோழிக் கூட்டில் வைத்து கைது செய்துள்ளீர்கள்… பின்னர் அவர்களை வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக கூறும் பகுதிக்கு அழைத்துச்சென்று புகைப்படம் எடுத்துள்ளீர்கள் ?
A: இல்லை… அப்படிச் செய்ய எனக்கு எந்த தேவையும் இல்லை.
Q: சஹ்ரான், ஹஸ்தூன் ஆகியோர் அங்கு அடிக்கடி வந்து சென்றதாக உமக்கு தகவல் கிடைத்ததாக சாட்சியம் அளித்தீர்கள் அல்லவா?
A: அடிக்கடி இல்லை… வந்து சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது.
Q: சஹ்ரான் அங்கு வந்ததாக உங்களுக்கு கூறியவர் யார் ?
A: பரீசீலனை செய்து சொல்கிறேன்.
Q: நீர் பொய்யுரைக்கின்றீர்… அப்படி யாரும் உங்களுக்கு கூறவே இல்லை… சஹ்ரான், ஹஸ்தூன் அங்கு வந்து சென்றதாக கூறப்படுவது பொய்?
A: இல்லை… நான் மறுக்கின்றேன்.
Q: முதல் பிரதிவாதியை கைது செய்த பின்னர் அவரது பணப் பையை கைப்பற்றினீரா?
A: ஆம்
Q: அந்த பணப் பையிலிருந்து ஏதேனும் ஆவணம் ஒன்றினை மீட்டிரா?
A: ஆம்… ஒரு இரசாயன கலவை தொடர்பிலான சமன்பாடுகள் என நம்ப முடியுமான குறிப்புகள் அடங்கிய தாள் அது
Q: சரி… அந்த குறிப்பு அடங்கிய தாள் மீது அவதனம் செலுத்துங்கள்…. அதில் முதல் பந்தியில் சில இரசாயன பொருட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன…. அதில் ‘ பிளக் பவ்டர் ‘ என கூறப்பட்டுள்ளது…. அதன் பின்னர் KNo 3 + S + சா சோல்ட் என கூறப்பட்டுள்ளது .
அப்படியானால் அந்த இடத்திலிருந்து பிளக் பவ்டர் கைப்பற்றினீரா?
A: இல்லை
Q: KNo3 என்றால் என்ன?
A: பொற்றாசியம் நைற்றேற்று
Q: அதனை அவ்விடத்தில் வைத்து கைப்பற்றினீரா?
A: நைற்றிக் அமிலத்தையே கைப்பற்றினோம்… அது தொடர்பில் எனக்கு தெரியாது
Q: S என குறிப்பிடப்பட்டுள்ளது சல்பர் என கூறினீர்கள்… சல்பர் எனும் இரசாயனத்தை அவ்விடத்தில் கைப்பற்றினீரா?
A: அது குறித்து எனக்கு சரியாக தெரியாது
Q: சா சோல்ட் என குறிப்பிடப்பட்டுள்ள இரசாயனத்தைக் கைப்பற்றினீரா?
A: அது தொடர்பில் எனக்கு தெரியாது
Q: சரி…குறித்த இரசாயன கலவை படிமுறை என நீர் கூறும் அந்த தாளின் 2 ஆவது பந்தியை பாருங்கள்…
A: ஆம்…
Q: அது தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது என்றால் சரியா?
A: ஆம்…
Q: அப்படியானால், அதன் உள்ளடக்கத்தை தெரிய மொழி பெயர்ப்பாளர் ஒருவரின் உதவியை நாடினீரா?
A: அதனை இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அவர்கள் ஊடாகவே அறிக்கை பெறப்பட்டது.
Q: 3 ஆவது பந்தியில் பிளக் பவ்டர் என கூறப்பட்டுள்ளது.
A: ஆம்
Q: நான்காவது பந்தியில் கடிகாரம் ஒன்று உள்ளது. அதன் கீழ் ஒரு கையெழுத்து உள்ளதல்லவா? அது யருடைய கையெழுத்து?
A: சரியாக கூற முடியாது
Q: அதன் கீழ் 2019.01.16 என திகதியிடப்பட்டு ஒரு கையெழுத்துள்ளது… அது உங்கள் கையெழுதுத்து தானே?
A: ஆம்…
Q: முதல் பிரதிவாதியின் பணப் பையிலிருந்து நீங்கள் அந்த குறிப்புத் தாளை எடுக்கவில்லை என நான் பரிந்துரைக்கின்றேன்
A: இல்லை… நான் மறுக்கின்றேன்..
Q: அந்த குறிப்பில் காணப்பட்ட கையெழுத்து தொடர்பில் கையெழுத்து பரிசோதனைகளை முன்னெடுத்தீரா?
A: ஆம்… நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரச இரசாயன பகுப்பாய்வாளரின் ஊடாக கையெழுத்து பரிசோதனை அறிக்கை பெறப்பட்டது.
Q: சரி.. அந்த கையெழுத்து பரிசோதனை அறிக்கையில் 2 ஆம் பிரதிவாதியின் கையெழுத்து ஒத்துப் போனதா?
A: ஆம்
Q: ஆனால் இந்த குறிப்புத் தாளை நீங்கள் 2 ஆம் பிரதிவாதியின் உடமையிலிருந்து கைப்பற்றவில்லை அல்லவா?
A: ஆம்…அப்படித்தான்…அவரிடம் இருந்து கைப்பற்றவில்லை
Q: கையெழுத்து பரிசோதனைகளுக்கான மாதிரிகளைப் பெற்றுக்கொண்டீரா?
A: ஆம்… அது தொடர்பில் பாலித்த எனும் அதிகாரியே செயற்பட்டார்.
Q: 2019 ஜனவரி 31 முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல ஆவணங்களை இதற்காக பெற்றுள்ளீர்கள் ?
A: இல்லை… நான் மறுக்கின்றேன்.
Q: இதன்போது பிரதிவாதிகளிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெற முயற்சித்துள்ளீர்கள்?
A: இல்லை… மறுக்கின்றேன்.
Q: கையெழுத்து பரிசோதனைக்கு மாதிரியொன்றினை பெற வேண்டிய சட்ட ரீதியிலான வழிமுறைகள் இங்கு பின்பற்றப்படவில்லை என நான் பரிந்துரைக்கின்றேன்?
A: இல்லை நான் மறுக்கின்றேன்…
Q: கையெழுத்து மாதிரியை பெற்றுக்கொண்டமை குறித்து தெரியுமா?
A: தெரியும்.
Q: எங்கு வைத்து மாதிரியைப் பெற்றுக்கொண்டார்கள் ?
A: நீதிமன்றில் வைத்து பெற்றுக்கொண்டார்களா அல்லது விசாரணையாளர்கள் முன் பெறப்பட்டதா என எனக்கு தெரியாது.
இந் நிலையில், இதன்போது மன்றில் விடயங்களை முன் வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், முதல் பிரதிவாதியின் பணப் பையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் குறிப்பு 2 ஆம் பிரதிவாதியின் கையெழுத்துடன் கூடியது என்பதை சவாலுக்கு உட்படுத்துவதாகவும், குறித்த கையெழுத்து தொடர்பிலான இரசாயன பகுப்பாய்வு அறிக்கையையும் சவாலுக்கு உட்படுத்துவதாகவும் அறிவித்தார். அது தொடர்பில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் வாதங்களை முன் வைப்பதற்கான அனுமதியையும் நீதிபதிகளிடம் பெற்றுக்கொண்டார்.
(குறுக்கு விசாரணைகள் தொடரும் ….)