இலங்கையினுடைய அரசியலமைப்பு வரலாறு என்பது 1833 ஆம் ஆண்டு கோல்புரூக் கமரன் சீர்திருத்தத்துடன் அரம்பமாகின்றது. குறித்த அரசியலமைப்பில் ஆங்கிலம் அரச கரும மொழியாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் அரச கரும மொழியாக ஆங்கிலம் இருக்கும் நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் மேலோங்கியது. டொனமூர் சீர்திருத்தத்தின் ஊடாக சிங்களம் மற்றும் தமிழ் அரசகரும மொழியாக பயன்படுத்த முடியும் என்று சொல்லப்பட்டபோதும் அது பாரிய அளவில் நடைமுறையில் இருக்கவில்லை.
1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் சிங்கள மொழி மற்றும் பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோஷங்கள் மேலோங்கின. எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி தனியான அரசியல் பாதை ஒன்றில் பயணிக்கும்போது சுதேச வாதம் என்ற ஒரு தனிப்பட்ட கொள்கையை அவர் முன்னெடுத்து வந்தார். அதன் அடிப்படையில் சிங்களத்தை மட்டும் அரசகரும மொழியாகக்கொண்ட ஒரு நாட்டினை தான் உருவாக்கவுள்ளதாக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சி பீடமேறிய அவர் 1956 இல் தனிச்சிங்களச் சட்டம் என்றவொரு சட்டத்தை கொண்டு வந்தார்.
இதில் இருந்துதான் இலங்கையினுடைய இனப்பிரச்சினை ஆரம்பித்தது. இலங்கையினுடைய இனப்பிரச்சினைகளுக்கான காரணம் எது என்று தேடும்போது அதன் ஆணி வேராக மொழி தொடர்பான பிரச்சினைதான் இருக்கிறது. இலங்கையினுடைய சிறுபான்மையினராக உள்ள தமிழர்களின் மொழி உரிமைகள் இதன் மூலம் மறுக்கப்பட்டது. அப்போது அரச சேவைகளில் சிங்களமே பயன்பாட்டில் இருந்தது. அரசியலமைப்பு ரீதியாகவும் இந்தச்சட்டம் வலுப்பெற்றதின் விளைவினால் தமிழ் மொழிக்கான சமவுரிமைப் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியது.
ஆயுதப் போராட்டங்கள் மற்றும் ஆயுதங்களற்ற அரசியல் போராட்டங்கள் என்பவற்றின் விளைவாக யாப்பின் பதிமூன்றாவது சீர்திருத்தத்தின் பதினெட்டாவது சரத்தில் சிங்களம் அரச கரும மொழியாக இருக்கும் என்றும் அதற்கு அடுத்த வரியில் தமிழும் அரச கரும மொழியாக இருக்கும் என்றும் பிரகடனம் செய்யப்பட்டது.
இலங்கையில் தற்போது ஏதோ ஒரு வகையில் சிங்களம் மற்றும் தமிழ் என்ற இரண்டு மொழிகளும் அரச கரும மொழிகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. என்றாலும் தமது தாய்மொழியினை நிர்வாக ரீதியாக பயன்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்களும் முரண்பாடுகளும் குடிமக்களுக்கு இருக்கின்றன.
மொழி தொடர்பாக உள்ள உரிமைகளை வழங்குவதில் குழப்பமான திட்டமிடல்களே இருக்கின்றன. எந்தவொரு பிரஜைக்கும் தனது தாய்மொழியில் சேவையினைப் பெறுவதற்கு உரிமை இருக்கின்றது. என்றாலும் வடக்கு கிழக்கில் தமிழ் மொழியில் மாத்திரமே ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதேபோன்று வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. என்றாலும் ஜனாதிபதி விரும்புகின்ற பிரதேச செயலகங்களை மாத்திரம் இரட்டை மொழி ஆவணப்பதிவு செய்யும் அலுவலகங்களாக மாற்ற முடியும்.
ஒரு குடிமகனின் உரிமை என்பது குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட நிலைமைக்கும் அரசியலமைப்பில் குடிமக்களுக்கு என்று உள்ள சலுகைகளுக்கும் முரண்பாடுகள் இருக்கின்றன. இதற்கு தீர்வாக இலங்கையில் உள்ள எல்லா அரசாங்க அலுவலகங்களிலும் இரட்டை மொழிப்பயன்பாடு இருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதில் நிர்வாக ரீதியான சிக்கல்கள் இருக்கின்றதுதான். ஆனால் ஒரு குடிமகனின் உரிமையை மீறுவதற்கு அது ஏற்ற காரணம் கிடையாது.
அரசாங்க அலுவலகங்களில் இரு மொழிப்பயன்பாடு இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இதனை ஒரு இரவில் செய்து முடிக்க முடியாது என்பது நிதர்சனம். என்றாலும் இப்படி ஒரு விடயத்தை செய்வதற்கு ‘அரசியல் விருப்பம்” இருக்கின்றதா என்பது மிகப்பெரிய கேள்வி. அரசாங்க நிறுவனங்களில் இரண்டு மொழிகளும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை கட்டளை ஒன்றாக பிறப்பித்து அவ்வாறு குடிமக்களின் மொழி உரிமை பாதிக்கப்படும்போது அதை மனித உரிமை மீறலாக கணக்கெடுப்பது என்பது இதற்கு தீர்வாக அமையும்.
இலங்கை அரசியலமைப்பில் உள்ள பல்வேறு விடயங்கள் நடைமுறையில் இல்லை. இலங்கை நீதிமன்றங்களில் வழங்கப்படும் சேவைகளை எந்தவொரு குடிமகனும் தான் விரும்பிய மொழியில் பெறுவதற்கான உரிமை அரசியலமைப்பில் உள்ளது. என்றாலும் நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உள்ள குறைபாட்டின் விளைவாக குறித்த விடயம் நடைமுறையில் இல்லை.
அரசாங்க அலுவலகங்கள் அனைத்திலும் இரண்டு மொழிகளையும் பயன்படுத்தும் நிலைமை இலங்கையில் உருவாக வேண்டும். அதாவது அனைவரும் இரண்டு மொழிகளையும் கற்பது சிறந்த தீர்வாக அமையும். இரண்டு மொழிகளை ஒருவர் கற்பது என்பது பெரியதொரு விடயம் கிடையாது. ஏனைய நாடுகளில் இவ்வாறு பலர் பல மொழிகளை கற்கிறார்கள். சிங்களப் பாடசாலைகளில் தமிழ் அசிரியர்கள் இல்லை அல்லது தமிழ் பாடசாலைகளில் சிங்கள ஆசிரியர்கள் இல்லை என்பது பெரிய குறைபாடாக வலம் வருகின்றது. இதற்கு அராசாங்கம் தீர்வினை மேற்கொள்ள வேண்டும்.
பாடசாலைகளில் சமயத்தினை அரசாங்கம் கட்டாயப்படுத்திதான் கற்பிக்கிறது. அப்படியிருக்கும்போது இரு மொழிக்கல்வி அல்லது மும்மொழிக்கல்வியினை வழங்குவது பெரியதொரு விடயமாக அரசாங்கத்திற்கு இருக்கப்போவதில்லை. என்றாலும் அதை ஒரு முக்கியமான விடயமாக அரசாங்கம் கருதாதன் விளைவாக அதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்யாமல் இருக்கிறது. சட்டங்கள் அல்லது ஆணைக்குழுக்கள் அமைப்பதை விட அரசியல் விருப்பத்துடன் நாடு முழுவதும் இரு மொழிக்கல்வியை அறிமுகம் செய்தால் குறைந்தது பத்து வருடங்களில் இந்த நடைமுறைகளை மாற்றத்துக்கு கொண்டு வர முடியும்.- Vidivelli