புதிய அரசியலமைப்பில் சிறுபான்மை சமூகத்தின் காப்பீடுகள் மற்றும் உரிமைகள்!

0 2,950

அப்ரா அன்ஸார்

சிறுபான்மையினர் ஒரு நாட்டின் இன, மொழி, பண்பாட்டு அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலோ, விகிதாசார அடிப்படையிலோ குறைந்த அளவில் வாழ்பவர்களாகும். உலகின் பெரும்பாலான நாடுகளில் சிறுபான்மையினர் வாழ்ந்து வருகின்றனர். வெகுசில நாடுகளே தங்கள் நாட்டில் ஒரே இனத்தை, பண்பாட்டை, மொழியைப் பாவிக்கின்ற மக்களை கொண்டுள்ளன. சிறுபான்மையினர் பூர்வகுடிகளாகவோ, குடிபெயர்ந்தோராக இருக்க முடிகின்றது. எண்ணிக்கையில் சிறுபான்மையினராய் இருந்தாலும் அவர்கள் தங்கள் வாழும் பகுதியின் குடிமக்கள் என்பதால் பல நாடுகள் இவர்களுக்கு சம உரிமையை வழங்கியுள்ளன. மேலும் சில நாடுகள் அவர்களை ஒடுக்குகின்றனர்.இலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களும், தமிழர்களும் பிரதான சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். உலக சிறுபான்மையினர் தினம் வருடா வருடம் டிசம்பர் 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.எனினும் உண்மையிலே இவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதா என்ற என்ற கேள்வியை எழுப்பினால் அதற்கு சீக்கிரம் விடை கிடைக்காது என்பதே உண்மை.

டொனமூர் யாப்பு ஜனநாயக பாரம்பரியங்களை இலங்கையில் நிலைபெற செய்யக் கூடியதாக இருந்தாலும் தேசாதிபதியினதும் அரசாங்க ஊழியர்களினதும் அதிகாரமும் அவர்கள் செயற்பட்ட விதமும் காரணமாக இந்த யாப்பு நடைமுறைக்கு வந்த காலகட்டத்திலிருந்தே இலங்கையரது எதிர்ப்பினை பெற்று வந்தது. இதனால் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமான வேளையில் இலங்கை பிரதிநிதிகள் இச் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக்கி பிரித்தானியருக்கு பிரதிநிதிகள் இச் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக்கி பிரித்தானியருக்கு எதிராக அரசியல் சீர்திருத்த கோரிக்கைகளை முன் வைத்தனர். இதன டிப்படையில் பல முன்னெடுப்புகளை முன்னெடுத்து தோல்வியில் முடிந்தாலும் பின்னர் சோல்பரி பிரபு தலைமையில் ஓர் குழுவினர் இலங்கை வந்து விசாரணைகளை நடத்தி 1945ல் ஓர் யாப்பு ஒன்றினை வரைந்து 1947 இல் நடைமுறைப்படுத்தினர். இதுவே சோல்பரி அரசியல் யாப்பாகும்.

இந்த யாப்பினை மனித உரிமைகளோடு இணைத்து பார்க்கும் போது சோல்பரி அரசியல் யாப்பில் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயம் இடம்பெறவில்லை. எனினும் 29(2) உறுப்புரை சேர்க்கப்பட்டது.இது சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர்களுடைய உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் என்றும் கூறப்பட்டு யாப்பில் உள்வாங்கப்பட்டிருந்தது. ஆனால் இது நடைமுறையில் வெறும் கானல் நீராகவே போயுள்ளது .சிறுபான்மையினர் காப்பீடு மட்டுமன்றி இன்னும் பல ஏற்பாடுகளும் இதில் இடம்பெற்றுள்ளது. ஆனாலும் அவை ஒவ்வொன்றும் நடைமுறையில் செயற்பட்ட விதம் பற்றி நோக்கும் போது பயனளிக்காத ஒன்றாகவே அடையாளம் காணப்பட்டுள்ளது.1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்டுடைய முதலாம் இரண்டாம் குடியரசு யாப்புகளில் உரிமைகள் பற்றிய ஏற்பாடுகள் உள்வாங்க சோல்பரி திட்டத்தில் இடம்பெற்ற சிறுபான்மையினர் காப்பீடு முன்னோட்டமாக காணப்பட்டதாகும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க செய்யப்பட்ட காப்பீடுகள் சோல்பரி அரசியல் திட்டத்தில் இருந்தாலும் அவற்றை உரிமைகள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அது காப்பீடுகள் மாத்திரமே. மேலும் அவற்றின் நடைமுறைப் பயன்பாட்டினையும் நோக்கும் போது அவற்றினால் எந்த வித நன்மைகளையும் சுதேசிய மக்கள் பெறவில்லை என்பது தெளிவாகியுள்ளது. சோல்பரி காப்பீடுகளாக பிரதிநிதிகள் தொகை அதிகரிக்கப்பட்டமை அதாவது டொனமூர் திட்டத்தில் சட்டசபை உறுப்பினர்கள் 61 பேர் காணப்பட்டதானது சோல்பரி திட்டத்தில் 101 ஆக அதிகரிக்கப்பட்டது. இரட்டை அங்கத்தவர் தொகுதி காணப்பட்டமை, மகாதேசாதிபதியால் 6 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டமை, அரச சேவை ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டமை, மகாதேசாதிபதிக்கு சில விசேட சிறப்புரிமைகள் வழங்கப்பட்டமை, முக்கியமான விடயமாகவும், நடைமுறையில் ஓர் அளவில் பயன்பாடுகளையும் மற்றும் சோல்பரி திட்டத்தில் முதன்மை விடயமாகவும் பாராளுமன்றத்தின் இறைமையினை கட்டுப்படுத்திய ஓர் அம்சமாக காணப்பட்டது யாப்பின் 29 ஆவது பிரிவாகும்.இத்தகைய விடயங்களை உள்ளடக்கியதாக சோல்பரி திட்ட காப்பீடுகள் அமைந்தன.பிற்பட்ட அரசியல் யாப்புகளிலே சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் சேர்க்கப்பட்டது போன்று சோல்பரி யாப்பில் இடம்பெற்ற உரிமைகள் பற்றி மிகக் குறைந்த மட்டுப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளாகவே உள்ளது.

சோல்பரி அரசியல் திட்டத்தில் சிறுபான்மையினர் நலன் பேணும் ஏற்பாடுகளில் பிரதான ஏற்பாடாக 29 ஆவது பிரிவு காணப்படுகின்றது. இதன் படி ஓர் இனத்தையோ அல்லது சமூகத்தையோ பாதிக்கக்கூடிய எந்த சட்டங்களையும் பாராளுமன்றம் இயற்றக்கூடாது என விதித்தது. பாராளுமன்றத்தின் இரைமையினை கட்டுப்படுத்தும் ஒரு அம்சமாகவும் இதனை பார்க்க முடியும். எந்த மத சமூகப் பிரிவினர்களினதும் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு இடையூறுகளை விளைவிக்கக் கூடிய சட்டங்கள் எதையும் இயற்றக்கூடாது, பிற சமூக பிரிவு மக்களுக்கு வழங்கப்படாத ஒன்று வேறு எந்த சமூக பிரிவு மக்களுக்கும் வழங்கக் கூடாது, பிற மதப் பிரிவு மக்களுக்கு விதிக்கப்படாத தடைகளை வேறு எந்த சமூக பிரிவு மக்களுக்கும் விதிக்க கூடாது, அரசியல் யாப்பில் மத சம்பந்தமான சட்ட விதிகளை திருத்துவதாக அல்லது மாற்றியமைப்பதாக இருந்தால் அந்த மதத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தலைவர்களின் ஆலோசனையை பெற்ற பின்பே மாற்ற வேண்டும். இத்தகைய விதிகள் அனைத்தும் சிறுபான்மையினரினை பாதிக்கும் இன,மத வேறுபாடுகள் பாரபட்சங்களை தடை செய்வதாக அமைந்தது. அதனால் இவ் ஏற்பாடு பிரதானமான ஏற்பாடாக கருதப்பட்ட போதும் நடைமுறையில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக அமையவில்லை.இவ் ஏற்பாடு நடைமுறையில் இருக்கும் போதே சிறுபான்மை இனத்திற்கு எதிரான பல சட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன. அதாவது 1948 பிரஜா உரிமைச் சட்டம், 1949 பாராளுமன்ற தேர்தல் திருத்தச் சட்டம் ,1956 தனிச் சிங்கள மொழிச் சட்டம், 1967 சிறிமா சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் போன்ற பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட இந்த 29 ஆவது உருப்புரையினால் எதனையும் தடுக்க முடியாது போனது. இவ்வாறு சிறுபான்மையினர் நலன் நலன் பாதிக்கப்படும் சட்டங்கள் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டால் அவற்றுக்கு சிறுபான்மையினர்கள் நலன்களை காரணம் காட்டி மகாதேசாதிபதி இறுதி கையொப்பமிட மறுக்கலாம் ஆனால் நடைமுறையில் இவருமே மேற்கூறப்பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் அனைத்திற்கும் இறுதி ஒப்பமிட்டு சட்டமாக அங்கீகரித்தார். பிரஜா உரிமை சட்டம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் சட்டம் என்பன சுதந்திர இலங்கையில் சுதேசிகளால் 1820 களிலிருந்து பெருந்தோட்ட தொழில்களை செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து வந்த குடியமர்ந்த இந்திய தமிழ் மக்களை வெகுவாக பாதிப்பதாக அமைந்தது. 1987 ஆம் ஆண்டு வரை அம் மக்கள் பாதிப்படையை இச் சட்டமே காரணமாக அமைந்தது. அடுத்த தனிச் சிங்கள மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டமையால் இலங்கை வாழ்பூர்வீக தமிழர்கள் பாதிப்புற்று இன்றுவரையான இன முரண்பாட்டுக்கு அது காரணியாக அமைந்துள்ளது.

தற்போது புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் காப்பீடுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பது பிரதானமானது. இலங்கையை பொறுத்தவரை இது பல்லின சமூகத்தவர்கள் வாழக்கூடிய நாடாக உள்ளது. எனவே இங்கு பல்லின சமூகங்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே தவிர சிறுபான்மையினர் என்று பிரித்து அவர்களுக்கு என்று தனியான உரிமைகள் வழங்கப்படுவது பொருத்தமற்றது. சிறுபான்மை காப்பீடு என்பது சோல்பறியாப்பில் கொண்டுவரப்பட்டது. அங்கு மாத்திரம் தான் சிறுபான்மை என்று குறிப்பிடப்படுகின்றது. அதன் பின்னர் 1972 ஆம் ஆண்டு சிறுபான்மை காப்பீடு என்ற விடயம் அடிப்படை உரிமைகளாக மாற்றப்படுகின்றது. எனினும் அதனை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற வழிமுறைகள் உள்வாங்கப்படவில்லை என்பதை உண்மை 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினாலே போதுமாகின்றது. தற்போதைய சீர்திருத்தங்கள் தேவையில்லை. ஏனெனில் 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம் மிக வலுவான ஒரு சீர்திருத்தமாகவும் தற்போதுள்ள இருபதாவது சீர்திருத்தமானது சிறுபான்மையினுக்கு மாத்திரம் அல்ல அனைத்து மக்களுக்கும் அது பயங்கரமாக உள்ளது .நாட்டின் பிரதான துறைகளானது சுயாதீனமாய் இயங்க வேண்டும். ஆனால் இங்கு ஜனாதிபதிக்கு மாத்திரமே அனைத்து பலத்தையும் வழங்கியுள்ளது. அதாவது சட்டத்துறையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கொலையாளி ஜனாதிபதியின் பொதுமனிப்பின் கீழ் விடுதலை ஆகினார். இங்க ஜனாதிபதி நீதித்துறையில் நேரடியாக தலையீடு செய்கின்றார். இதைத்தான் தடைகள் சமன்பாட்டு முறை என்கின்றோம். எனவே இங்கு பிரதான துறைகள் தனித்தனியாக காணப்பட வேண்டும். தேவைக்கு ஒன்றினைந்து செயல்பட வேண்டும். மாறாக இங்கு தலையீடு இருக்கக் கூடாது.

சிறுபான்மையினருடன் தொடர்புடைய தனியார் சட்டங்களை பொருத்தவரை அதிலும் குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டங்களில் பாரிய பிரச்சினைகள் கடந்த காலங்களில் பேசப்பட்டது .இவற்றினை நிவர்த்தி செய்து கொள்ள அரசியல் ரீதியான முன்னேற்பாடுகள் போதாமையே காரணமாக உள்ளது. வல்லுனர்கள் இருந்தாலும் அரசியல் ரீதியாக அதனை நடைமுறைப்படுத்துவதில் தான் அதிக பாரதூரம் இருக்கின்றது. மொழி பிரச்சினையை பொறுத்தவரையில் அது சிறுபான்மையினருக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது. தமிழ் மொழி, சிங்கள மொழி என்பன அரச கரும மொழியாக இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாரிய சிக்கல் உள்ளது. 1956 காலப்பகுதியில் எவ்வாறு மொழிப்பிரச்சினை பரவலாக இருந்ததோ அதேபோன்று தற்போது சட்டம் நடைமுறையில் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமல் உள்ளது. சோல்பரி யாப்பானது சிறுபான்மையினரின் உரிமையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. மூன்றில் இரண்டு பெரும் பான்மையைக் கொண்டு யாப்பினை திருத்து அமைக்க முடியும் ஆனால் இரண்டாவது சரத்திலே மாற்ற முடியாது ஏனெனில் அதிலே சிறுபான்மை காப்பீடு குறிப்பிடப்படுகின்றது. எனவே இன்று வரை எழுத்து மூலம் இருக்கின்றதே தவிர அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே பாரிய குறைபாடாக உள்ளது. எனவே இதனை தான் அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னும் அகதிகளாக வாழக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். புத்தளத்தில் அகதிகளாக குடிப்பெயர்வு, பொத்துவில் காணி பிரச்சினை, வடகிழக்கிலே காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது, எனவே இவற்றுக்கான சரியான தீர்வினை இன்று வரை அரசியல்வாதிகளினால் பெற்றுக் கொடுக்கப்படவில்லை எனவே இங்கு முழுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது சிறுபான்மையினர் தான். எனவே இவர்களுக்கான சரியான தீர்வு அரசியலமைப்பின் ஊடாக வரவேண்டும் என்பதை அனைவரினதும் கோரிக்கையாக உள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.