கல்முனை நீதிமன்றில் நடந்தது என்ன? சாராவை மன்றின் முன் நிறுத்துங்கள்
- சஹ்ரானின் மனைவி ஹாதியா சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் வாதம்
எம்.எப்.எம்.பஸீர்
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியாக சஹ்ரான் ஹஷீம் அறியப்படும் நிலையில் , அவரது மனைவி பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில், கட்டுவாபிட்டி தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த மொஹம்மது ஹஸ்தூனின் மனைவியான தற்போதும் மர்மமாக உள்ள சாரா ஜெஸ்மின் அல்லது புலஸ்தினி மகேந்ரன் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கல்முனை மேல் நீதிமன்றில் வாதிட்டார்.
பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கில், அவர் சார்பில் ஆஜராகி வாதங்களை முன் வைக்கும் போதே சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இதனை நீதிமன்றின் அவதானத்துக்கு கொண்டு வந்தார்.
‘சாரா ஜெஸ்மின் என்பவர் எனது சேவை பெறுநரிடம் கூறியதாக கூறப்படும் ஒரு விடயத்தை மையப்படுத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருக்கின்றது. அதற்காக ஒரே ஒரு ஒப்புதல் வாக்கு மூலத்தை மட்டும் வழக்கு தொடுநர் சாட்சியாக குறிப்பிட்டுள்ளார்.
அப்படியானால் குறித்த தகவலை கூறியதாக தெரிவிக்கப்படும் சாரா ஜெஸ்மினை ஏன் சாட்சியாளராக இணைக்கவில்லை. அவரை கண்டிப்பாக மன்றுக்கு அழைத்து வர வேண்டும். நாம் ஒப்புதல் வாக்கு மூலத்தின் சுயாதீன தன்மையை சவாலுக்கு உட்படுத்துகின்றோம்.
சாரா ஜெஸ்மினை மன்றில் முன்னிறுத்த உள்ள இயலுமை தொடர்பில் சட்ட மா அதிபர் குறிப்பிட வேண்டும். அவர் இறந்துவிட்டாரா இல்லையா என்பதை அவர் கூற வேண்டும். ஏனெனில் நியாயமான வழக்கு விசாரணைக்கு அவரது சாட்சியம் நெறிப்படுத்தப்படல் வேண்டும். அது மிக முக்கியமானது.’ என இதன்போது சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில், 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடை முறை சட்டக் கோவைக்கு கொண்டுவரப்பட்ட 2022 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் விதி விதானங்களை விளக்கி வாதங்களை முன் வைக்கும் போது கூறினார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாரா ஜஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் நிந்தவூரில் வைத்து சாரா ஜெஸ்மின் தெரிவித்தன் ஊடாக அதனை அறிந்திருந்தும் , அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எச்.சி. 653/ 21 எனும் குறித்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த குற்றப் பகிர்வுப் பத்திரத்தில், கோட்டை முன்னாள் நீதிவான் ரங்க திஸாநாயக்க, சி.ஐ.டி. அதிகாரிகள், ஒரு இராணுவ வீரர் உள்ளடங்கலாக 30 சாட்சியாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், சான்றாவணமாக ஒரே ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் மட்டும் நிரலிடப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே குறித்த வழக்கு நேற்று முன் தினம் ( ஆகஸ்ட் 30) கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது கொழும்பிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாத்திமா ஹாதியா சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டு மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில், கல்முனை மேல் நீதிமன்ற வளாகத்தை சூழ கடும் பொலிஸ் பாதுகாப்பு உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் ஜயவீர தலைமையில், அரச சட்டவாதிகளான சத்துரி விஜேசூரிய மற்றும் மாதினி விக்னேஸ்வரன் ஆகியோரைக் கொண்ட குழு ஆஜரானது.
பிரதிவாதியான பாத்திமா ஹாதியாவுக்காக, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைரின் ஆலோசனைக்கு அமைய, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் தலைமையில் சட்டத்தரணிகளான ரிஸ்வான் உவைஸ், வசீமுல் அக்ரம், லியாகத் அலி, சப்ரின் சலாஹுதீன் ஆகியோரைக் கொண்ட சட்டத்தரணிகள் குழாம் ஆஜரானது.
இந் நிலையில், மன்றில் முதலில் பிரதிவாதி ஹாதியாவுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் சமர்ப்பணங்களை முன் வைத்தார்.
‘இன்று (நேற்று முன் தினம் ஆகஸ்ட் 30) குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள பிரதிவாதியை இதற்கு முன்னர் எனது கனிஷ்ட சட்டத்தரணி சிறைச்சாலையில் வைத்து சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றிருந்தார். நியாயமான வழக்கு விசாரணைகளுக்காக, அவரிடம் மேலும் சில ஆலோசனைகளைப் பெற வேண்டி உள்ளது.
குற்றவியல் நடை முறை சட்டக் கோவைக்கு கடந்த 2022 இல் கொண்டுவரப்பட்ட திருத்தம் ஊடாக எந்த வகையிலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு இருக்கும் உரிமைகள் குறைக்கப்படவில்லை. அதன்படி கண்டிப்பாக ஒரு விடயத்தை குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்க வேண்டும் என எதுவும் கிடையாது. எனது சேவை பெறுநரான குற்றம் சுமத்தப்பட்டுள்ளவருடன் நான் நீதிமன்றில் வைத்து சில நிமிடங்கள் வரை பேசி சில அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொண்டேன். எனினும் எனக்கு மேலதிக அறிவுறுத்தல்கலைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருப்பதால், முன்விளக்க மாநாட்டை நடாத்த வேறு ஒரு திகதியை வழங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.
ஏனெனில் 2022 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க திருத்தச் சட்டம் பிரகாரம், அதன் 7 (பி) பிரிவில் வழக்கின் பிரதான விசாரணை அதிகாரி அல்லது அவரது பிரதிநிதி மன்றில் முன் விளக்கமாநாட்டின் போது ஆஜராகியிருக்க வேண்டும்.
அதன்போது, குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிரான சாட்சிகள் தொடர்பில் மன்றின் கவனத்தை ஈர்க்க முடியும்.
உண்மையிலேயே, வழக்குக்கு அவசியமான சாட்சிகள் நிரலிடப்பட்டுள்ளனவா என இங்கு ஆராயும் போது அதில் ஒரு முரண்பாட்டு நிலைமையை அவதானிக்க முடிகிறது.
குற்றப் பத்திரிகையின் பிரகாரம், சாரா ஜெஸ்மின் கூறிய ஒரு விடயத்தை எனது சேவை பெறுநர் பொலிஸாரிடம் கூறவில்லை எனக் கூறி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் சாரா ஜெஸ்மினை வழக்குத் தொடுநர் சாட்சியாளராக நிரல்படுத்தவில்லை. இது ஒரு முரண்பாட்டு நிலைமையாகும். எனவே குறித்த சாட்சியை நிரல்படுத்துவதற்கான இயலுமை தொடர்பில் வழக்குத் தொடுநர் அவதானம் செலுத்த வேண்டும்.
இதே பெண் அதாவது, சாரா ஜெஸ்மின் தப்பிச் செல்ல உதவியதாக இதே நீதிமன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக சட்ட மா அதிபர் வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்குக் கோவையையும் இந்த வழக்கில் உள்ளீர்க்க நாம் எதிர்பார்க்கின்றோம்.
அப்படி இருக்கையில், சாராவை சாட்சியாளராக நிரல் படுத்தாது, ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றினை மட்டும் சான்றாக முன் வைக்கப்பட்டுள்ளமையை ஏற்க முடியது.
ஒப்புதல் வாக்கு மூலத்தின் சுயாதீனத் தனமை குறித்து எமக்கு பிரச்சினை உள்ளது.
எனது சேவை பெறுநர் கோட்டை நீதிவான் முன்னிலையில், 4 ஒப்புதல் வாக்கு மூலங்களை வழங்கியுள்ளார். இதில் நீதிவான் தொடர்பில் எமக்கு பிரச்சினை இல்லை.
எனினும் அந்த வாக்கு மூலங்களை வழங்கிய எல்லா சந்தர்ப்பங்களிலும் எனது சேவை பெறுநர் சி.ஐ.டி.யிலிருந்தே நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த எல்லா சந்தர்ப்பத்திலும் அவர் மீண்டும் சி.ஐ.டி.க்கே அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அந்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் சுட்யாதீனத் தன்மை தொடர்பில் எமக்கு கேள்விகள் உள்ளன.
இதனைவிட எனது சேவை பெறுநருக்கு எதிராக , பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனை சாதாரண தண்டனைச் சட்டக் கோவையின் கீழான குற்றச்சாட்டாக மாற்றிக்கொள்ள முடியுமா அப்படி மார்றியமைத்தால், அது தொடர்பில் எடுக்க முடியுமான தீர்மானம் என்ன என்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சேவை பெறுநரிடம் அறிவுறுத்தலை அவரை சந்தித்து பெற வேண்டியுள்ளது.
அத்துடன் எனது சேவை பெறுநர், கடந்த 3 வருடங்களும் 5 மாதங்களுமாக கட்டுக் காவலிலும், விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளார். சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டால் , அதிக பட்சமாக 7 வருடங்களே சிறைத் தண்டனை அளிக்க முடியுமாக இருக்கும் நிலையில், விளக்கமறியல் காலம் தண்டனையாக அமையக் கூடாது. அவர் பிணையின்றி இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்காக பிணை விண்ணப்பம் செய்ய நான் எதிர்பார்க்கின்றேன்.
பிரதிவாதியைப் பொறுத்தவரை சாரா ஜெஸ்மின் எனும் பெண் மிக முக்கியமான சாட்சி. சுயாதீனத் தன்மை குறித்து கேள்விகள் உள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தை மட்டும் வைத்து வழக்குத் தொடரப்பட்டுள்ள பின்னணியில், சாராவை சாட்சியாக சேர்க்க கோருவதற்கான எல்லா உரிமையும் பிரதிவாதிக்கு இருக்கின்றது.’ என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் வாதிட்டார்.
இதன்போது நீதிபதி தலையீடு செய்து பிரதிவாதிக்கு எதிராக வேறு ஏதும் வழக்குகள் உள்ளனவா என வினவினார்.
அதற்கு வழக்குத் தொடுநர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் ஜயவீர, வேறு வழக்குகள் இல்லை என பதிலளித்தார்.
தொடர்ந்து சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் வாதங்களை முன் வைத்தார்.
அதில் சஹ்ரான் ஹசீமின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கை, இவ்வழக்கில் சான்றாக முன் வைக்கப்படல் வேண்டும் எனவும், அவ்வாறு முன் வைக்கப்பட்டிராவிட்டால் அது குறித்து நீதிமன்றம் தலையீடு செய்து அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.
இதனைவிட, வழக்குத் தொடுநர் வழங்கியுள்ள 24 அம்ச பரிந்துரை, வழக்கு விசாரணைக்கு முன்பாகவே கிடைத்ததால், அது தொடர்பில் தனது சேவை பெறுநருடன் கலந்தாலோசித்தே முடிவினை கூறமுடியுமென தெரிவித்த சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், நியாயமான வழக்கு விசாரணையின் உரிமை பிரதிவாதிக்கும் இருக்கும் நிலையில், அதற்காக முன் விளக்க மாநாட்டை நடாத்த வேறு ஒரு திகதியை குறிக்குமாறு கோரினார்.
இதனையடுத்து அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் ஜயவீர, ஹாதியாவின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் வாதங்களுக்கு பதிலளித்து பின்வருமாறு விடயங்களை முன் வைத்தார்.
‘கனம் நீதிபதி அவர்களே, பிரதிவாதியின் (ஹாதியா) சட்டத்தரணியின் வாதங்களின் படி, குற்றப் பகிர்வுப் பத்திரிகையில் சான்றுப் பொருட்கள் தொடர்பிலான நிரலில் உள்ள குறைப்பாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தார். உண்மையில் குற்றப் பகிர்வுப் பத்திரிகையில் கடந்த 2019 ஆகஸ்ட் 15 ஆம் திகதி, அப்போதைய கோட்டை நீதிவானுக்கு பிரதிவாதி, பயங்கரவாத தடை சட்டத்தின் 8 ஆவது அத்தியாயம் பிரகாரம் வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலம் மட்டுமே நிரல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் 2019 ஆகஸ்ட் 20, செப்டம்பர் 4, ஒக்டோபர் 2 ஆகிய திகதிகளிலும் பிரதிவாதியால் மேலும் மூன்று ஒப்புதல் வாக்கு மூலங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை குற்றப் பகிர்வுப் பத்திரிகையில் நிரல்படுத்தப்பட்டிராத போதும், பிரதிவாதி தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளன. எனினும் சான்றுப் பொருள் பட்டியலை திருத்தவும், ஏனைய மூன்று ஒப்புதல் வாக்கு மூலங்களையும் நிரல் படுத்தவும் அனுமதி கோருகின்றேன்.
(அதற்கான அனுமதி நீதிபதியால் வழங்கப்பட்டது)
இன்றைய தினம் (நேற்று முன் தினம் 30) இவ்வழக்கு முன்விளக்க மாநாடு தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாம் 24 விடயங்களை மையப்படுத்திய முன் மொழிவுகளை பிரதிவாதியின் சட்டத்தரணிக்கு இன்று திறந்த நீதிமன்றில் வைத்து கையளித்துள்ளோம். அதன் தமிழ் மொழி மூல மொழி பெயர்ப்பையும் நாம் கொடுத்துள்ளோம்.
அத்துடன் பிரதிவாதியின் சட்டத்தரணி மிக நீளமான சமர்ப்பணங்களை மன்றில் முன் வைத்தார். வழக்கில் அழைக்கப்படவுள்ள சாட்சியாளர்கள், எதிர்வாதம் தொடர்பிலான விடயங்களை மையப்படுத்தி அவர் வாதங்களை முன் வைத்தார்.
அந்த சமர்ப்பணங்கள் முன்விளக்க மாநாட்டின் ஒரு அங்கமாக அமைய வேண்டியவையாகும்.
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடை முறை சட்டக் கோவைக்கு கொண்டுவரப்பட்ட 2022 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் 7 ( பி) அத்தியாம் பிரகாரம் சமர்ப்பணம் பிரதிவாதியின் சட்டத்தரணியால் முன் வைக்கப்பட்டிருந்தது. அதாவது முன்விளக்க மாநாட்டின் போது விசாரணை பொறுப்பதிகாரி அல்லது அவரது பிரதி நிதி ஒருவர் ஆஜராவது தொடர்பிலான வாதம் அது. இன்று ( நேற்று முன் தினம் 30) சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரி மன்றில் மன்றில் முன்னிலையாகின்றார் என்பதை நான் பதிவு செய்கின்றேன்.
இன்னொரு விடயம், சஹ்ரானின் தொலைபேசி தொடர்பிலான பகுப்பாய்வு அறிக்கை மன்றில் முன் வைக்கப்படவில்லை என்பதும், அது சான்றாக முன் வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் பிரதிவாதி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே அத்தகைய அறிக்கையை பெற நீதிமன்றம் தலையீடு செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது.
எனினும் சஹ்ரானின் தொலைபேசி தொடர்பிலான அறிக்கை குறித்து நான் சி.ஐ.டி.யின் அதிகாரிகளிடம் வினவினேன்.
அதன்படி பிரதிவாதி அல்லது சஹ்ரான் தொடர்பில் எந்த தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளும் பெறப்படவில்லை என புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சஹ்ரானின் தொலைபேசி கைப்பற்றப்படவில்லை. மாற்றமாக, பல பாகங்களாக உடைந்த தொலைபேசி பாகங்களே கைப்பற்றப்பட்டுள்ளன. அவை சாட்சிகள் கட்டளை சட்டத்தின் 27 (1) ஆம் அத்தியாயத்துக்கு அமைய அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பட்டன. அதிலிருந்து எந்த உள்ளடக்கத்தையும் பெற முடியாது என அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிவித்துள்ளார். எனவே அத்தகைய தொலைபேசி பாகங்களை வைத்து மேலதிக அறிக்கை பெற எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது.
இதனைவிட, பிரதிவாதி பயன்படுத்திய தொலைபேசி தொடர்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அவ்வாறு அவரின் தொலைபேசி குறித்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதை குற்றவியல் சட்டக் கோவையின் பிரிவுகள் தடுக்கின்றன.
எனவே தனியாக வேறு அறிக்கைகள் பெற இம்மன்றினால் உத்தரவிட முடியாது.
இந்த மேல் நீதிமன்ற வழக்கின் ஆரம்பம் கோட்டை நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்காகும். அவ்வழக்கில் இந்த வழக்கின் பிரதிவாதி ஒரு சந்தேக நபராக இருந்தார். தற்போதும் அவ்வழக்கு ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராக நடக்கின்றது. அவ்வழக்கு கோவையிலிருந்து பிரித்தெடுத்தே பிரதிவாதிக்கு எதிராக இந்த குற்றப் பத்திரிகையின் கீழான வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அப்படி இருக்கையில் பிரதிவாதி சார்பில் கோட்டை நீதிமன்றில் இந்த விடயங்கள் குறித்து எதுவும் சமர்ப்பணங்கள் முன் வைக்கப்படவில்லை. அவ்வாறான நிலையில் இங்கு வந்து அவற்றை கோருவது நியாயமற்றது.
இன்னொரு விடயமும் பிரதிவாதியின் சட்டத்தரணியால் முன் வைக்கப்பட்டது. அதாவது, பிரதிவாதிக்கு சில தகவல்களை வெளிப்படுத்திய ஒரு பெண் தொடர்பில் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கை முன் கொண்டு செல்ல குறித்த பெண்ணை சாட்சியாக அழைப்பதிலோ அல்லது, அவரது வாக்கு மூலத்தை மையப்படுத்தியதாக இருக்கவோ அவசியமில்லை. இவ்வழக்கை முன் கொண்டு செல்ல நாம் அப்பெண்ணின் சாட்சியத்தில் தங்கியிருக்கவில்லை.
எனவே முன்விளக்க மாநாட்டை ஆரம்பிக்க முடியுமான சூழலே நிலவுகின்றது. எனவே அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். ‘ என வாதங்களை முன் வைத்தார்.
இந் நிலையில் தொடர்ச்சியாக வழக்குத் தொடுநர் தரப்பின் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் வழக்கின் முன் விளக்க மாநாட்டை விரைவுபடுத்த வேண்டும் என வாதிட்டுக்கொண்டிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவருக்காக ஆஜரான சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், அப்படியானால் ‘நாளைக்கே (ஆகஸ்ட் 31) அதனை நடாத்துங்கள். நான் தயார்.’ என கூறினார்.
இதனையடுத்து பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் சற்று அமைதியானார்.
எவ்வாறாயினும், பயங்கரவாத தடை சட்டத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய திருத்தங்களில், குற்றப் பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் வழக்கு விசாரணை நடக்கவில்லையாயின், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணையளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், அந்த விடயத்தை சாதகமாக பயன்படுத்தி பிணை பெறவே முன் விளக்க மாநாட்டை தாமதப்படுத்த பிரதிவாதி தரப்பு முனைவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த சிரேஷ்ட சட்டத்தரணி, குற்றம் சாட்டப்பட்டவரை தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்க வழக்குத் தொடுநர் தரப்பு அதே விடயத்தை தமக்கு சாதகமாக்கிக்கொள்ள முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.
இந் நிலையில் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயரான் ட்ரொஸ்கி, வழக்கின் பாரதூரத் தன்மை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய முன் விளக்க மாநாட்டை வேறு திகதியொன்றில் நடாத்துவதற்கு திகதி குறிப்பதாக அறிவித்தார்.
சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகள் காரணமாக, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் குற்றம் சாட்டப்பட்டவரை சந்தித்து அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்வதில் சட்டத்தரணிகளுக்கு இருந்த இடையூறுகள் தொடர்பில் இதன்போது நீதிபதி திறந்த மன்றில் விபரித்தார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதல்கலின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக இருந்த தடங்கல்கள் தொடர்பில் தான் அறிவதாக கூறிய நீதிபதி, நியாயமான வழக்கு விசாரணை ஒன்றினை முன்னெடுக்க தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ள பிரதிவாதி தரப்புக்கும் அவகாசமளித்து வழக்கை முன் விளக்க மாநாட்டுக்காக எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதிவரை ஒத்தி வைத்தார்.
அத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாத்திமா ஹாதியாவின் பிணைக் கோரிக்கை தொடர்பில் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன் வைக்கவும் நீதிபதி சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுக்கு அனுமதியளித்தார். எழுத்து மூல பிணைக் கோரிக்கை சமர்ப்பணத்தின் ஒரு பிரதியை அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கும் கையளிக்க அவர் ஆலோசனை வழங்கினார்.
இதன்போது, நீதிபதி ஜயராம் ட்ரொஸ்கி, தான் அட்டன் நீதிவானாக இருந்த போது நடந்த சம்பவம் ஒன்றினையும் மன்றில் விபரித்தார்.
2019 இல் தான் அட்டன் நீதிவானாக இருந்த போது, நபர் ஒருவரை சமயலறையிலிருந்த கத்தியை மையப்படுத்தி ஐ.எஸ். ஐ. எஸ். சந்தேக நபராக சித்திரித்து பொலிசார் தன் முன் ஆஜர் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது எந்த சட்டத்தரணியும் அப்போதைய சூழலில் அவருக்காக ஆஜராகவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி, அப்போது சந்தேக நபருக்கு எதிராக எந்த அடிப்படைகளும், சான்றுகளும் இல்லாமையால் தான் பிணையளித்ததாக கூறினார்.
எனினும் மறுநாள் பத்திரிகையொன்றில் ‘ இரு மாங்காய்களை திருடியவர் விளக்கமறியலில்; ஐ.எஸ். ஐ.எஸ். நபருக்கு பிணை ‘ என தலைபிட்டு செய்தி வெளியானதாக நீதிபதி குறிப்பிட்டார்.
எனினும் அச்செய்தியை திருத்தி வெளியிட தேவையான ஆலோசனைகளை தான் உரிய நிருபருக்கு பொலிஸார் ஊடாக வழங்கிய போதும், திருத்திய செய்தியானது ஒரு உள் பக்கம் ஒன்றில் மூலையில் சிறிய அளவில் பிரசுரிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டு, 2019 இன் பின்னர் சந்தேக நபர்கள் சட்டத்தரணிகளின் சேவையை பெற்றுக்கொள்வதில் இருந்த நடைமுறை சிக்கல்களை விளக்கியமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2019 ஏப்ரல் 21 தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து, 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவினுடனான பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து காயமடைந்த நிலையில், பாத்திமா ஹாதியாவும் அவரது 4 வயது மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் ஹாதியா சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு பின்னர், கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஷெங்ரில்லா ஹோட்டல் குண்டுவெடிப்பு தொடர்பிலான வழக்குக் கோவையின் கீழ் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையிலேயே தற்போது ஹாதியாவுக்கு எதிராக கல்முனை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli