ஒரு தசாப்தத்தின் பின் பாகிஸ்தான் சந்தித்துள்ள பெரு வெள்ளம்
ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி, 33 மில்லியன் பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானோர் உதவி கோரி வருவதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபையினால் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, பருவமழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,136 ஐ எட்டியுள்ளது.
அத்தோடு பாகிஸ்தானின் தென் பிராந்தியங்களிலுள்ள சில கிராமங்களுடனான தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளமையால் அப்பிரதேசத்தின் தகவல்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரலாறு காணாத மழைக்காலம் பாகிஸ்தானில் நான்கு மாகாணங்களை பெருவாரியாக பாதித்துள்ளது. ஏறக்குறைய ஒரு மில்லியன் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது மோசமாக சேதமடைந்துள்ளன. குறித்த மாகாணங்களிலுள்ள பெருந்தெருக்கள் மற்றும் வீதிப் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 33 மில்லியன் மக்களை இந்த வெள்ள அனர்த்தம் வெகுவாக பாதிக்கிறது.
உணவு, குடிநீர் மற்றும் தங்குமிடத்திற்காக லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், இந்த துண்டிக்கப்பட்ட சமூகங்களை அடைய மீட்புக் குழுக்கள் போராடி வருகின்றன.
வீதி இணைப்புகள் சேதமடைந்துள்ளதால், ஹெலிகொப்டர்கள் மட்டுமே பெரும்பாலான சமூகங்களைச் சென்றடைய ஒரே வழியாக உள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் செல்வதற்கு உதவி நிறுவனங்களுக்கு உதவ பாகிஸ்தான் இராணுவமும் அழைக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சார்சடாவில் இருந்து 180,000 பேரும், நவ்ஷேரா மாவட்டத்தில் இருந்து 150,000 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று பாக். அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலுசிஸ்தான் மாகாணத்திற்கு 45 மில்லியன் டொலர் நிவாரண நிதியை பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அத்தோடு, வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு வீடு வழங்கும் என்றார்.
அத்தோடு, தெற்கு சிந்து மாகாணத்தின் பல பகுதிகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால் அங்கு நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் கிராமங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் பயிர்ச் செய்கைகளும் கிராமிய மற்றும் சிறு கைத்தொழிலிடங்களும் அழிவடைந்துள்ளன. இந்நிலையில், படையினரும் மற்றும் மீட்புப் பணியாளர்களும் வெள்ளத்தில் சிக்குண்டு தவிக்கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் 2010 இன் அனர்த்தத்துடன் ஒப்பிடப்படுகிறது. அப்போது 2,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததோடு நாட்டின் ஐந்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. இந்நிலையில் தற்போது பல வாரங்களாக இடைவிடாமல் பெய்துவரும் அடை மழையால் மில்லியன் கணக்கான ஏக்கர் பயிர் நிலங்கள் மூழ்கியுள்ளன.
இதனிடையே பாகிஸ்தான் அரசாங்கம், தேசிய அவசரநிலையை அறிவித்து சர்வதேச உதவியை நாடியுள்ளது. முதற்கட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கூடாரங்கள், உணவு மற்றும் பிற அத்தியவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு விமானங்கள் வந்தன. கத்தார் செஞ்சிலுவைச் சங்கமும் அவசர உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
இதனிடையே, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் சர்வதேசத்திடம் கோரியுள்ளது. அத்தோடு, பாகிஸ்தான் அரசாங்கம், இந்தப் பேரழிவைச் சமாளிக்க, நட்பு நாடுகள், நன்கொடையாளர்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியை நாடி வேண்டுகோள் விடுத்துள்ளது.- Vidivelli