சிறுபான்மை மக்கள் தாம் சிறுபான்மையினர் என்ற மனோநிலையிலிருந்து விடுபட வேண்டும்
ஜமாஅதே இஸ்லாமி மாநாட்டில் ஏரான் விக்கிரமரத்ன எம்.பி.
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘இந்நாட்டு மக்கள் அனைவரும் சமமானவர்களே. எங்களுக்குள் ஏற்றத்தாழ்வு மற்றும் வேறுபாடுகள் கூடாது. சிறுபான்மை மக்கள் தாம் சிறுபான்மையினர் என்ற மனோ நிலையிலிருந்தும் விடுபடவேண்டும். நாங்கள் எம்மை இனம், மதம், குலம் என்ற ரீதியில் வேறுபடுத்திக் கொள்கிறோம். இது தவறு. பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையுடன் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும். இவ்வாறான நிலைமை மூலமே எமது நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்’ என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஜமா அத்தே இஸ்லாமியின் வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, 67 வருடகால வரலாற்றினைக் கொண்ட ஸ்ரீலங்கா ஜமா அத்தே இஸ்லாமியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றக்கிடைத்தமையையிட்டு பெருமைப்படுகிறேன். இவ்வியக்கம் சமூகப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வறுமைக்கோட்டில் வாழும் மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறது. இந்நாட்டில் பிறந்த மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும். சிறுபான்மை அல்லது பெரும்பான்மை என்ற வேறுபாடு காட்டக்கூடாது. நாட்டு மக்கள் அனைவரும் இந்நாடு அனைவருக்கும் சொந்தமானது என்ற மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடியினை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் தீர்த்துக்கொள்ள முடியும். நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் பொருளாதார நெருக்கடிக்கு என்ன தீர்வு? எனக் கேள்வியெழுப்புகிறார்கள். இதற்கு குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்டகால தீர்வுகள் என வகைப்படுத்தலாம். யார் ஆட்சியில் இருக்கிறார்கள் யார் எதிர்கட்சியில் இருக்கிறார்கள் என்பது பிரச்சினையல்ல. யார் பதவியில் இருந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு நாம் உட்பட்டே ஆக வேண்டும். வரிகள் அதிகரிக்கப்படலாம். ஊழல்கள் ஒழிக்கப்படவேண்டும். பாதுகாப்புக்கென செலவிடும் நிதியில் குறைப்பு செய்யப்படலாம். இதேவேளை கல்விக்கும் சுகாதாரத்துக்கும் பெருமளவில் நிதி ஒதுக்கப்படவேண்டும்.
அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வெளிநாட்டுக்கொள்கை கடைப்பிடிக்கவேண்டும்.அனைத்து நாடுகளுடன் நட்புறவைப் பேணும் வெளிநாட்டுக்கொள்கையே எமக்குத் தேவை. இது ஒரு அரசியல் கட்சியின் வெளிநாட்டுக்கொள்கையாக இருக்கக்கூடாது. இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையாக அமைய வேண்டும்.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்க நான் பிரார்த்திக்கிறேன் என்றார்.
ஜமா அத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி பிரதம அதிதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார்.
மாநாட்டில் அடுத்த இரண்டு ஆண்டு காலத்துக்கான இரண்டு உதவித் தலைவர்களும் மத்திய ஆலோசனை சபைக்கான (ஷுரா) 16 உறுப்பினர்களும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.- Vidivelli