அசரிகம பள்ளி நிர்வாகி படுகொலை: சம்பவம் தொடர்பிலான அறிக்கை இதுவரை வக்பு சபைக்கு கிடைக்கப்பெறவில்லை
நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை என்கிறார் சப்ரி ஹலீம்தீன்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அனுராதபுரம் அசரிகம ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகியொருவர் அண்மையில் சக நிர்வாகியொருவரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இதுவரை வக்பு சபைக்கு கிடைக்க பெறவில்லை. அறிக்கைகள் சம்பவத்தை உறுதிப்படுத்தினால் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் நிர்வாகிகள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலதிக நடவடிக்கைகள் நீதிமன்றம் மூலம் முன்னெடுக்கப்படும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் இச்சம்பவம் தொடர்பில் சம்பவம் இடம்பெற்ற பிராந்தியத்துக்குப் பொறுப்பான திணைக்களத்தின் கள உத்தியோகத்தர் மற்றும் அனுராதபுரம் பரசன்கஸ்வெவ பொலிஸ் நிலையத்திலிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது. அறிக்கைகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றதும் திணைக்களம் வக்பு சபைக்கு அனுப்பி வைக்கும்.
வக்பு சபை தனது அமர்வில் இது தொடர்பாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் என்றார்.
ஹஜ்ஜுப் பெருநாள் உழ்ஹிய்யாவுடன் தொடர்புபட்ட முரண்பாட்டையடுத்து பள்ளி நிர்வாகிகளில் ஒருவரான கட்டுத்தம்பி ஷரீப் எனும் 67 வயதான நபர் தாக்கி கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் பள்ளிவாசல் நிர்வாகியாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஒருவரே பிரதான சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ளார்.- Vidivelli