கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
இலங்கையின் இன்றைய நிலையோ பரிதாபத்துக்குரியது. இந்த நாட்டின் வரலாற்றில் என்றுமே ஏற்படாத ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டு மற்ற நாடுகளிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்துகிற அளவுக்கு சீரழிந்துள்ளது. அதைப்பற்றி பல உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் அவதானிகளும் விமர்சகர்களும் பொருளியலாளர்களும் அறிவாளிகளும் தமது கருத்துக்களை விபரமாகப் பதிவு செய்துள்ளனர். எனவே அவற்றை மேலும் இங்கே விபரிக்காது, இந்த நிலையைப் போக்குவதற்கு இலங்கையின் முஸ்லிம் தலைவர்கள் இதுவரை என்ன ஆலோசனைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளனர் என்ற ஒரே கேள்வியைமட்டும் முன்வைத்து அதன் முக்கியத்துவத்தைப்பற்றிய சில கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். இதை காலத்தின் கட்டாயம் எனவும் கருதுகிறேன்.
புதிய ஜனாதிபதியின் அமைச்சர் சபைக்குள் எவ்வாறு நுழையலாம் என்ற சிந்தனையில் முஸ்லிம் பிரபலங்கள் மூழ்கியுள்ளார்களே ஒழிய நாடாளுமன்றத்துக்கு வெளியே முன்வைக்கப்படுகின்ற மாற்றுக் கருத்துக் களில் கவனம் செலுத்துபவர்களாக அவர்கள் காணப் படாதது முஸ்லிம் சமூகத்துக்கே ஆபத்தானது என்பதை அவர்கள் உணர்வார்களா?
இலங்கையில் நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை ஆரம்பமாகிய காலம் தொடக்கம் இன்றுவரை எத்தனையோ முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் கடமையாற்றியுள்ளனர். அவர்களுள் ஒரு சிலர் முஸ்லிம் சமூகத்தின் ஒப்பற்ற தலைவர்களாகவும் உயர்ந்து இன்றும் சிறப்பிக்கப்படுகின்றனர். ஆனால், கடந்த ஏழு தசாப்தங்களாக எத்தனையோ பிரச்சினைகள் தனிப்பட்ட சமூகங்களுக்கும் அப்பால் நாடளாவிய ரீதியில் தேசியப் பிரச்சினைகளாக எழுந்துள்ளன. அவற்றுள் நாட்டின் இைறமையும் அதன் பாதுகாப்பும், பொருளாதாரம், பயங்கரவாதம், என்பனவும் அடங்கும். அவ்வாறான பிரச்சினைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்போது அந்த விவாதங்களில் முஸ்லிம் பிரதிநிதிகளின் பங்களிப்பு மிகவும் குறைவானது என்ற உண்மையை அரசியல் அவதானிகள் உணர்வர்.
இந்த நிலைக்கு இரண்டு காரணங்களை முன்வைக்கலாம். ஒன்று, நாடாளுமன்றத்துக்குள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்டவர்களின் தகைமை. இரண்டாவது, உலக விவகாரங்களைப்பற்றிய மத ரீதியான சிந்தனை.
1950கள் தொடக்கம் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த முஸ்லிம் பிரதிநிதிகளுள் பெரும்பாலானோர் ஒன்றில் செல்வந்தர்களாக இருந்தனர், அல்லது மதக்கடமைகளை தவறாதுபேணி சமூகத்தின் நற்பெயரைப் பெற்றவர்களாக இருந்தனர். அதனால் அவர்களின் கல்வித்தகைமையோ விவாதத்திறனோ ஒரு பொருட்டாகக் கருதப்படவில்லை. பொதுவாகவே உலகியல் கல்வியை துச்சமாக மதித்த அன்றைய சமூகச் சூழலில் அந்தத்தகைமைகள் முஸ்லிம் தலைவர்களிடம் குறைவாக இருந்ததில் வியப்பில்லை. ஆகவே அவர்கள் நாடாளுமன்ற விவாதங்களில் ஆர்வம் காட்டாதிருந்தாலும் ஆச்சரியமில்லை.
மத ரீதியான ஒரு காரணமும் இந்த நிலைக்கு ஒரு காரணமாய் அமைந்தது. இகலோக வாழ்வு அனிச்சயம், பரலோக வாழ்வே நிச்சயம் என்ற அடிப்படையில் மதபோதனைகள் அமைந்ததால் உலக விவகாரங்களைப்பற்றிய சிந்தனைகளுக்கு மதமே ஒரு தடையாக அமைந்தது. தொழில், குடும்பம், பள்ளிவாசல் ஆகிய மூன்றையும் சுற்றியே ஒரு முஸ்லிமின் வாழ்வு சுழன்றோடியதால் அரசியல், நாடு, பொருளாதாரம், இனநல்லுறவு, கலை, கலாசாரம் என்பனவெல்லாம் பரலோக வாழ்வுக்கு இடைஞ்சல்கள் என்ற ஒரு அபிப்பிராயத்தை மார்க்க உபதேசிகள் மக்களிடையே விதைத்தனர். அதனால் இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்ற ஒரு போக்கு முஸ்லிம் சமூகத்தை ஆட்கொண்டிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் காலஞ்சென்ற கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா முஸ்லிம்களுக்கும் இந்த நாட்டுக்கும் இடையேயுள்ள உறவைப்பற்றிப் பேசும்போது அது மாட்டுக்கும் புல்லுக்கும் உள்ள உறவு என வருணித்தார். இது எவ்வளவு பாரதூரமான குற்றச்சாட்டு என்பதை கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவரது தினக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.
இந்தக்காரணங்களால் அன்றைய நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் வரவுசெலவு அறிக்கையைப்பற்றியோ, மொழிக் கொள்கையைப்பற்றியோ, சமவுடமைக் கொள்கைகளைப்பற்றியோ விவாதங்கள் நடைபெறும்போது முஸ்லிம் பிரதிநிதிகள் பெரும்பாலும் பார்வையாளர்களாகவே இருந்து வாக்கெடுப்பு நடைபெற்றபோது மட்டும் பெரும்பான்மையுடன் சேர்ந்து தமது ஆதரவை காட்டுவதுடன் அமைதி கண்டனர்.
துரதிஷ்டவசமாக அதே போக்கு முஸ்லிம்களிடையே உலகியற்கல்வி வளர்ச்சியடைந்துள்ள நிலையிலும் தமக்கென அவர்கள் தனிப்பட்ட அரசியல் கட்சிகளை உருவாக்கிய பின்பும் தொடர்வதை அவதானிக்க முடிகின்றது. இதற்கு மதரீதியான காரணத்தை தொடர்ந்தும் முன்வைக்க முடியாது. ஏனெனில், முஸ்லிம்களிடையே இப்போது வளர்ச்சிபெற்றுள்ள ஆண் பெண் இணைந்த ஒரு புத்திஜீவி வர்க்கம் உலக வாழ்வில் மற்ற இனங்களுடன் போட்டிபோட்டு முன்னேறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதில் வெற்றியும் ஈட்டுகின்றனர். ஆகவே அவர்களின் முயற்சிக்கும் வெற்றிக்கும் தடைகளாக விளங்கும் எந்தப் போதனைகளையோ அவற்றின் போதகர்களையோ உதாசீனஞ்செய்ய அவர்கள் தயங்குவதில்லை. சுருக்கமாகக் கூறுவதாயின் மதத்தின் செல்வாக்கு வலுவிழந்து வருகின்றது. இது பூகோள ரீதியான ஓர் உண்மை.
ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவமோ இன்னும் முஸ்லிம்களின் நிலைபற்றி நாடாளுமன்றத்துக்குள் ஓயாது ஒப்பாரி வைப்பவர்களாக இருக்கிறார்களே ஒழிய நாட்டைப்பற்றியோ அதன் வளர்ச்சிபற்றியோ ஆக்கபூர்வமான திட்டங்களையோ கருத்துக்களையோ முன்வைக்கக்கூடிய திறமையற்றவர்களாகக் காணப்படுகின்றனர். கல்வித் தகைமை அவர்களிடம் இருந்தாலும் அவர்களது புலன் வேறுதிசையில் செலுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது. அது என்ன திசை? அதனால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினை என்ன?
சுதந்திர இலங்கையின் வரலாற்றில் நெற்றி வியர்வை நிலத்திற் சிந்தாது சொற்ப காலத்துக்குள் செல்வந்தராகக்கூடிய ஒரேயொரு தொழில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்தான் என்ற அளவுக்கு அரசியல் ஒரு வியாபாரமாக மாறியுள்ளது. அதற்குப் புறனடையாகச் சிலர் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் நாடாளுமன்றத்துக்குள் பிரதிநிதிகளாக நுழைவது உழைப்பதற்கே. தேர்தல் என்பதே ஒரு சூதாட்டமாக மாறிவிட்டது. கோடிக்கணக்கான பணத்தை அந்தச் சூதிலே முடக்கி வெற்றிபெறுவது அந்தப் பணத்தை பன்மடங்காகப் பெருக்குவதற்கே என்பதை இன்றைய நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பலரின் வரலாறு தெளிவாக்கும். உதாரணமாக, ராஜபக்சாக்களின் கோடிக்கணக்கான சொத்துகள் கடின உழைப்பினால் குவிந்தவையா? அதேபோன்று சில முஸ்லிம் அரசியல் தலைவர்களின் சொத்துக்களெல்லாம் எவ்வாறு பெருகின? ஊழல் மலிந்த இலங்கை அரசியலில் அமைச்சர்களாகவும் ஆளுனர்களாகவும் பதவிகள் வகித்துப் பணம் திரட்டியோரின் பட்டியல் ஒரு நாள் வெளிவரத்தான் போகிறது. அதற்கான காலமும் விரைந்துகொண்டிருக்கிறது.
இவ்வாறு அமைச்சர்களாகியும் ஆளுனர்களாகியும் எப்படியெல்லாம் செல்வம் பெருக்கலாம் என்ற திசையிலே தமது புலனைத் திருப்பும் முஸ்லிம் தலைவர்கள் ஏன் நாட்டின் பொதுப் பிரச்சினைகளைப்பற்றிய விவாதங்களில் ஆர்வம் காட்ட வேண்டும்? இன்றுவரை எந்த ஒரு முஸ்லிம் பிரதிநிதியாவது எந்த ஒரு நாடாளுமன்ற விவாதத்திலாவது நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் பொருள் நிறைந்த வாதங்களுடன் பங்குபற்றிய வரலாறுண்டா? அவ்வாறான பங்குபற்றலையும் விவாதத் திறமையையும் இன்றைய இலங்கையின் பொருளாதார நிலைமை பெரிதும் வேண்டி நிற்கிறது என்பதையும் வலியுறுத்த வேண்டியுள்ளது.
நாட்டின் கடன் சுமை, திறைசேரியின் வங்குரோத்து, பொருள்களின் பற்றாக்குறை, விலைவாசிகளின் ஏற்றம், தொழிலின்மை, உணவுப் பஞ்சம் என்றவாறு பொருளாதார நெருக்கடிகள் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டுசெல்ல அவற்றைத் தீர்ப்பதற்கு என்ன பரிகாரம் என்பதைப்பற்றி முஸ்லிம்களல்லாத அங்கத்தவர்களே விவாதிக்கும்போது முஸ்லிம் பிரதிநிதிகள் பேசாமடந்தைகள்போன்று இருந்துகொண்டு தமது இனத்தின் பிரச்சினையை மட்டும் சதா தூக்கிப்பிடித்துப் பேசுவது எவ்வாறு பொருந்தும்? ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் பிரதிநிதி அண்மையில் தனது சொத்துகளுக்கு ஏற்பட்ட அழிவுகளைப்பற்றியே தனது நாடாளுமன்ற உரையில் ஒப்பாரி வைத்ததையும் காணக்கூடியதாக இருந்தது. இது என்ன கேவலம்? கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது முஸ்லிம்களுக்கெதிரான எத்தனையோ செயற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் அவரின் அதிகார பலத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் பிரபலங்கள் அவர்களின் ஆதரவுதான் அச்செயற்பாடுகளுள் ஒன்றிரண்டு கைவிடப்படக் காரணமாய் இருந்தன என்று இப்போது இராகம் பாடுகிறார்கள். இது காகம் குந்தப் பனம் பழம் விழுந்த மாதிரியான கதை. அச்செயற்பாடுகள் கைவிடப்படவேண்டிய முக்கிய காரணம் சர்வதேச அழுத்தங்கள் என்பதை அவர்கள் மூடி மறைக்கின்றனர்.
இன்றைய முஸ்லிம் புத்திஜீவிகளிடையே பல்கலைக்கழக மட்டத்தில் பலதுறைகளிற் பாடம் கற்றுத் தேர்ச்சிபெற்றவர்கள் இல்லையா? ஏன் அவர்களை அழைத்து அவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று நாடாளுமன்ற விவாதங்களில் ஆக்கபூர்வமாகப் பங்குகொள்ள முடியாது? காரணம் அந்த நாட்டம் இந்தப் பிரதிநிதிகளிடம் இல்லை என்பதே. இப்பொழுதுகூட புதிய ஜனாதிபதியின் அமைச்சர் சபைக்குள் எவ்வாறு நுழையலாம் என்ற சிந்தனையில் முஸ்லிம் பிரபலங்கள் மூழ்கியுள்ளார்களே ஒழிய நாடாளுமன்றத்துக்கு வெளியே முன்வைக்கப்படுகின்ற மாற்றுக் கருத்துக்களில் கவனம் செலுத்துபவர்களாக அவர்கள் காணப்படாதது முஸ்லிம் சமூகத்துக்கே ஆபத்தானது என்பதை அவர்கள் உணர்வார்களா? பதவி மோகமும் பணந்திரட்டலும் ஆட்கொண்டிருக்கும் தலைவர்களிடமிருந்து நாடு எதைத்தான் எதிர்பார்க்கலாம்?
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியின் ஆலோசனைகளுடன் முன்வைக்கப்படும் தீர்வுகள் தற்காலிகமான நிவாரணியேயன்றி நிரந்தரமான பயனைத் தரமாட்டா என்ற குரல்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியேயிருந்து ஒலிக்கின்றன. அந்த ஒலியின் ஓர் அலைதான் நான்கு மாதங்களுக்குமுன் காலிமுகத்திடலில் இளைஞர்களால் தொடக்கிவிடப்பட்ட அறப்போராட்டம். அவர்களது முக்கிய கோரிக்கை அடிப்படை மாற்றம் தேவை என்பதாகும். நாட்டின் அரசியல், சமூக அமைப்புகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ள சிந்தனைச் சட்டகத்தை மாற்றாமல் பொருளாதாரப் பிணிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியாது என்பதே அவர்களின் கோரிக்கையின் அடிநாதம். இந்த அடிப்படை மாற்றமே தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இனங்களுக்கும் விமோசனம் அளிக்கும் என்பதிலே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதைப்பற்றி இதற்கு முன்னும் இப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் விளக்கியுள்ளன. இந்தக் கோரிக்கையை முன்வைத்தும் அந்த இளைஞர்களுக்கு ஆதரவாகவும் ஏன் எந்தவொரு முஸ்லிம் அரசியல் தலைவனும் இதுவரை நாடாளுமன்றத்தினுள் குரல் எழுப்பவில்லை? அதுவே இத்தலைவர்களின் வங்குறோத்து அரசியலை வெளிப்படுத்துகிறது.
பல்லினங்களையும் கலாசாரங்களையும் கொண்ட இந்த நாட்டில் ஓர் இனம்மட்டும் எண்ணிக்கையில் பெரும்பான்மை என்பதற்காக நாட்டையே சொந்தம் கொண்டாட எண்ணி அந்த நோக்கத்தைச் சாத்தியமாக்க நினைக்கும் சக்திகளுக்கு அவை என்ன குற்றங்களை இழைத்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாது அந்தச் சக்திகளை ஆட்சிசெய்ய விட்டதே இந்த நாடு செய்த மிகப்பெரும் தவறு. அதுவே இன்றைய சீரழிவுக்குக் காரணம் என்பதை உணர்ந்தவர்களே அந்தப் போராட்ட இளைஞர்கள். அவர்களுடைய விழிப்புணர்வையும் அவர்களின் போராட்டத்தின் யதார்த்தத்தையும் உணர்ந்தால் அவர்களை அைனத்து இயங்கும் அரசியல் சக்திகளுடன் இணைப்பதே சிறுபான்மை இனங்களுக்கு உள்ள ஒரே வழி என்பதை ஏற்காமலிருக்க முடியாது. அவ்வாறு இணையக்கூடியவர்களையே தலைவர்களாக முஸ்லிம் சமூகம் தெரிந்தெடுக்கவும் வேண்டும்.
அண்மையில் அறப்போராளிகள் முஸ்லிம்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதாவது மதில்மேல் குந்தி இருக்கும் பூனையைப்போன்று எந்தப் பக்கம் இரை கிடைக்கிறதோ அந்தப்பக்கம் சாயும் போக்கினை தவிர்க்க வேண்டும் என்பதாக அந்த எச்சரிக்கை அமைந்திருந்தது. அது உண்மையிலேயே முஸ்லிம் தலைவர்களுக்கு விடுக்கப்படவேண்டிய எச்சரிக்கை. ஆனாலும் அந்தத் தலைவர்களை தெரிவுசெய்தது முஸ்லிம் சமூகம்தானே.
எதிர்வரும் காலம் இலங்கைக்கு ஒரு சோதனைக் காலமாக அமையப்போகிறது. ஒன்றில் இனவாதச் சக்திகளே மீண்டும் வலுவடைந்து, சிறுபான்மை இனங்களை அந்நியரெனப் பட்டஞ்சூட்டி, பொருளாதார அழிவிற்கும் அந்த இனங்களே காரணமெனக் குற்றஞ்சாட்டி ஓர் இனச்சுத்திகரிப்பு இயக்கத்தையே உருவாக்குவதற்கு அடித்தளமிடலாம். சிங்கள பௌத்த இனவாத சக்திகள் மீண்டும் கோத்தாபயவை நாடாளுமன்றத்துக்குள் நுழைத்து அவரைப் பிரதமராக்கி ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்ற முனைகின்றது. அதற்கு மாற்றமாக, அறப்போராளிகளின் அடிப்படை மாற்றத்தை வரவேற்கும் முற்போக்குச் சக்திகள் ஒன்று திரண்டு அனைத்து இனங்களையும் உள்ளடக்கி சர்வ மக்களையும் சமமாக மதிக்கும் ஆட்சியொன்றை நிறுவி உண்மையான ஜனநாயக அரசியலை உருவாக்கலாம். இதில் எது உகந்தது என்பதை நன்குணர்ந்து அதற்கேற்ப முஸ்லிம் சமூகம் தனது அரசியற் காய்களை நகர்த்த வேண்டும். அதற்கான தலைவர்களை உருவாக்குவதில் இப்போதிருந்தே களத்தில் இறங்க வேண்டும்.- Vidivelli