69 இலட்சம் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த பொது ஜன பெரமுன கட்சியும் அதன் ஜனாதிபதியும் இன்று மக்களால் வெறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களது அரசியல் நகர்வுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.
மக்களின் பாரிய எதிர்ப்பின் காரணமாக பதவியை இராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறிய கோத்தாபய ராஜபக்ச மீண்டும் இந்த மாத ஆரம்பத்தில் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நாடு திரும்பி இங்கு தங்கியிருப்பதற்கான சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தெரிவித்துள்ளது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு உரித்தான சலுகைகளைப் பெற அவருக்கு தகுதியுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்புவதை எவரும் எதிர்க்கப் போவதில்லை. அதற்கான முழு உரிமையும் அவருக்கு உள்ளது. எனினும் அவர் தனது ஆட்சிக்காலத்தில் எடுத்த தவறான தீர்மானங்களும் நடவடிக்கைகளும் நாட்டைப் பொருளாதார ரீதியாக இவ்வளவு தூரம் பின்னடைவில் தள்ளக் காரணமாகின என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் அவரது கடந்த கால செயற்பாடுகள் சட்டத்தின் முன் சவாலுக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
இதனிடையே அவரை ஜனாதிபதியாக்கிய பொது ஜன பெரமுன, மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக அடக்கியே வாசித்தது. அக் கட்சியின் அங்கத்தவர்கள் அமைச்சரவையிலிருந்து ஒதுங்கியிருந்தனர். மஹிந்த ராஜபக்சவும் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். பொது ஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச அமைச்சுப் பதவியை துறந்ததுடன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிச் சென்றார். குறிப்பாக மக்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்த ராஜபக்ச குடும்பத்தினரும் அவருக்கு மிக நெருக்கமானவர்களும் பொது இடங்களில் தோன்றுவதிலும் அமைச்சுப் பதவிகளை வகிப்பதிலும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் தவிர்ந்திருந்தனர். எனினும் கடந்த சில நாட்களாக பொது ஜன பெரமுன மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
கடந்த வாரம் இடம்பெற்ற கட்சியின் உயர்பீடக் கூடத்தில் தமது தோல்விக்கான காரணங்கள் குறித்தும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அதேபோன்று நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கட்சியின் மற்றொரு கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.
இந்த நகர்வுகள் நாட்டில் இனவாதத்தை விதைத்து, மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்கி ஆட்சிக்கதிரைக்கு வந்த இக் கட்சி மீண்டும் தமது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதையே காண்பிக்கின்றன. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற வகையில், அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பொது ஜன பெரமுனவுக்கு பூரண அதிகாரம் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் நாட்டை இந்தளவு தூரம் பின்னடைவுக்குக் கொண்டு சென்று, பிழையான கொள்கைகள் காரணமாக பொருளாதார சீர்குலைவுக்கு வித்திட்ட இக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதுவே சுமார் 100 நாட்களுக்கும் மேலாக காலி முகத்திடலில் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களது கோரிக்கையாகும். இவர்கள் கொள்ளையிட்ட பணத்தை மீட்டுத் தாருங்கள் என்ற கோஷங்கள் நாடெங்கும் ஒலித்தன. எனினும் ஜனாதிபதி பதவி விலகியதைத் தொடர்ந்து மக்கள் இக் கோஷங்களை மறந்துவிட்டாலும், நாம் மீண்டும் அதனை வலியுறுத்த விரும்புகிறோம்.
புதிதாக பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சாக்களை பாதுகாப்பதற்கு முனைகின்றார் என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. இதனை மறுப்பதற்குமில்லை. மீண்டும் ராஜபக்சாக்களும் அவரது சகாக்களும் தமது வழக்கமான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதற்கான சாதகமான களத்தை ரணில் விக்ரமசிங்க உருவாக்கி வருகிறார் என்பதையே அண்மைய நகர்வுகள் காண்பிக்கின்றன.
அடுத்த வருட ஆரம்பத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்குச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பொது ஜன பெரமுன சக்திகள் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான காய் நகர்த்தல்களையே இப்போது முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன. அதற்கு முன்னராக அவர்கள் இந்த நாட்டுக்கு இழைத்த தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் அரசுக்கு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். அதன் பிற்பாடே அவர்கள் அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும். இன்றேல் இந்த நாடு மீண்டும் சூறையாடப்படுவதை தடுக்க முடியாது போய்விடும்.- Vidivelli