ஏ.ஆர்.ஏ.பரீல்
பல தசாப்த வரலாற்றினைக் கொண்ட மஹரகமயில் அமைந்துள்ள கபூரியா அரபுக்கல்லூரியும், கல்லூரியின் பொருளாதார நன்மை கருதி வக்பு செய்யப்பட்ட மத்திய கொழும்பு கிரேண்ட்பாஸில் சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த சுமார் இரண்டரை ஏக்கர் காணியும் இன்று சவால்களை எதிர்கொண்டுள்ளன.
வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கபூரியாவையும் அதன் சொத்துக்களையும் கையாடுவதற்கு வக்பு செய்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே முனைவது கவலைக்குரியதாகும். வக்பு சொத்துக்கள், அல்லாஹ்வின் சொத்துகள் அதில் கைவைப்பவர்கள் நிச்சயம் அல்லாஹ்வினால் தண்டிக்கப்படுவார்கள்.
கபூரியாவும், சுலைமான்
வைத்தியசாலை காணியும்
மர்ஹும் எம்.டீ.எச்.அப்துல் கபூரின் சிந்தனையில் 1931 இல் உருவானதே ‘மஹரகம கபூரியா கல்லூரி’. இக்கல்லூரிக்கென 17.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
இதே வேளை இக்கல்லூரியின் செயற்பாடுகளுக்காக மர்ஹூம் அப்துல் கபூர் மத்திய கொழும்பு கிரேண்ட்பாஸில் 2.5 ஏக்கர் (சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த) காணியை வக்பு செய்திருந்தார்.
1931 முதல் 1938 வரை கபூரியாவின் ஸ்தாபக அதிபராக இந்தியாவைச் சேர்ந்த அலியார் மரிக்கார் கடமையாற்றினார். 1936 முதல் மெளலானா உமர் ஹஸரத்தும், 1963 முதல் சம்சுதீன் ஹஸரத்தும், 1982 முதல் 2010 வரை அஷ்ஷெய்க் முபாரக் ஹஸரத்தும் இவர்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.எம்.மஹ்ரூப், எம்.எம்.எம்.லாபீர், எம்.எப்.எம். ஹஸன் பாரிஸ் ஆகியோர் அதிபர்களாக பணியாற்றியுள்ளனர். தற்போது எஸ்.எம்.நபார் அதிபராக பணியாற்றுகின்றார்.
1995க்குப் பிற்பட்ட காலத்தில் அதிபர் முபாரக் ஹஸரத்திற்கும் நம்பிக்கையாளர்களுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக நம்பிக்கையாளர்களால் கொழும்பு, கிரேண்ட்பாஸ் சுலைமான் வைத்தியசாலை மூலம் பெறப்பட்டு வந்த உதவித்தொகை எவ்வித முன்னறிவித்தலுமின்றி 1994-–2013 வரை இடை நிறுத்தப்பட்டது.
1980 இல் இக்கல்லூரி காணி மற்றும் உடமைகள் அரசாங்கத்தால் சுவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிரான போராட்டத்தில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் முக்கிய பங்கினை வகித்தமை குறிப்பிடத்தக்கது.
கல்லூரியை மேலும் தரமுயர்த்தும் நோக்கில் நம்பிக்கையாளர்களுக்கும், முகாமைத்துவ சபைக்குமிடையில் 2018.05.09 ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. என்றாலும் பின்பு நம்பிக்கையாளர் சபை எதுவித காரணமுமின்றி அவ் ஒப்பந்தத்தை ரத்துச் செய்தது.
இந்நிலையிலேயே நம்பிக்கையாளர்களில் ஒருவர் கபூரியாவையும் சொத்துக்களையும் குடும்பச் சொத்தாக கருதி செயற்பட்டு வருகிறார்.
”கபூரியாவுக்கு சொந்தமான காணிகள் வக்பு செய்யப்படவில்லை. அது எமது தனியார் உடமை. பழைய மாணவர்கள் இதனை அத்துமீறி கையகப்படுத்திக் கொண்டுள்ளனர்” என அவர் தெரிவித்து வருவதுடன் பல சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார். நம்பிக்கையாளர்களால் பழைய மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வக்பு நியாய சபையில் வழக்கு
கபூரியா அரபுக்கல்லூரி அதன் நம்பிக்கையாளர்களால் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்வதற்காக பழைய மாணவர் சங்கம் (முகாமைத்துவ சபை) வக்பு நியாய சபையில் வழக்கு தாக்கல் செய்தது. கபூரியா அரபுக்கல்லூரிக்கு கிடைக்க வேண்டிய வருமானங்கள் கிடைக்காமை, வக்பு சொத்து தனியார் நிறுவனத்துக்கு (கிரேணட்பாஸ் காணி) குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமை என்பனவற்றுக்கு எதிராகவே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் வக்பு நியாய சபை கல்லூரியை நிர்வகிப்பதற்கு 11 பேர் கொண்ட முகாமைத்துவக் குழுவொன்றை நியமித்தது. இதனையடுத்து கல்லூரியின் நம்பிக்கையாளர் சபை பழைய மாணவர் சங்கம் தாக்கல் செய்துள்ள வழக்குகளுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் (Appeal Court) மனுதாக்கல் செய்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் கல்லூரி நம்பிக்கையாளர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கபூரியா கல்லூரியும், சொத்துக்களும் தர்ம நம்பிக்கை நிதியத்தின் கீழ் உள்ளடங்காது. இது குடும்ப நம்பிக்கை நிதியமாகும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வக்பு நியாய சபையினால் நியமிக்கப்பட்ட பழைய மாணவர்களை உள்ளடக்கிய முகாமைத்துவ குழுவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவினை விதித்துள்ளது. அவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவ் ஏற்பாடுகள் கல்லூரி நம்பிக்கையாளர்களின் இலக்கு என்ன என்பதை தெளிவுபடுத்துகிறது. இத்தடையுத்தரவுக்கு எதிராக முகாமைத்துவக்குழு உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
கபூரியாவையும் அதன் வக்பு சொத்துக்களையும்
பாதுகாக்க போராட்டம்
கபூரியா அரபுக் கல்லூரியையும், அதன் வக்பு சொத்துக்களான கிரேண்ட்பாஸிலுள்ள 2.5 ஏக்கர் காணி உட்பட ஏனையவற்றையும் பாதுகாத்துக் கொள்வதற்காக கொழும்பு பகுதியில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கபூரியாவின் நடவடிக்கைக்குழு (Action Committee) என குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு கடந்த வியாழக்கிழமை கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஊடக மாநாடொன்றினை நடாத்தியது. இதில் அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டு விடயங்களை தெளிவுபடுத்தினர்.
குழு தலைவர் என்.எம்.அமீன்
மர்ஹூம் அப்துல் கபூரின் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் கபூரியா அரபுக்கல்லூரி சொத்து தனக்குச் சொந்தமானது எனக்கூறி வழக்குத்தாக்கல் செய்து வாதாடி வருகிறார். வக்பு செய்யப்பட்ட சொத்தினை அவரால் ஒருபோதும் அபகரிக்க முடியாது.
வக்பு செய்யப்பட்டுள்ள சுலைமான் வைத்தியசாலை இருந்த காணியை தனது குடும்ப சொத்தெனக் கூறுகிறார். அத்தோடு அதன் வருமானத்தையும் அனுபவிக்கிறார். சுலைமான் வைத்தியசாலை இருந்த காணி தற்போது தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த வக்பு சொத்தைப் பாதுகாக்க நாமனைவரும் அணிதிரள வேண்டும் என்றார்.
முன்னாள் ஆளுநர்
அசாத் சாலி
அப்துல் கபூரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வக்பு சொத்தை உரிமை கொண்டாடுகிறார். கிரேணட்பாஸிலுள்ள காணியில் இருந்த சுலைமான் வைத்தியசாலை கட்டிடம் இடிக்கப்பட்டு அக்காணி கபூரியா நம்பிக்கைப் பொறுப்பாளர்களினால் ஆசியன் ஜெம்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் சொப்ட் லொஜிக் நிறுவனத்துக்கு 20 வருட ஒப்பந்தத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்படுகிறது.
கபூரியா நாட்டின் சொத்து. இதனை ஒரு தனிநபர் உரிமை கொண்டாட முடியாது. நீதிமன்றின் மூலமே அவர்கள் இதற்கு தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்திரவினைப் பெற்றுக் கொண்டதன் பின்பே கிரேணட்பாஸில் கட்டிட நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளுங்கள் என நாம் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு கூறுகிறோம்.
மஹரகம கபூரியா அரபுக்கல்லூரி வளாகத்தில் உள்ள பள்ளிவாசலில் கடந்த 2022.08.12 ஆம் திகதி ஜும்ஆ தொழுகையை நடத்துவதற்கு கூட சம்பந்தப்பட்ட நபர் தடைகளை ஏற்படுத்தியுள்ளார். என்றாலும் ஊர் மக்களின் அழுத்தத்தின் காரணமாக நம்பிக்கைப் பொறுப்பாளர்களால் ஜும்ஆவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பள்ளிக்குள் மாணவர்கள் தவிர எவரும் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. இது மக்களின் சொத்தாகும். எனவே கபூரியா வக்பு சொத்து விடயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபடுமாறு வேண்டுகிறோம். வக்பு சொத்தை கையாடி குடும்பப்பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாமென கூறுகிறோம் என்றார்.
முஜிபுர் ரஜ்மான் எம்.பி.
மர்ஹூம் அப்துல் கபூர் வக்பு செய்த கிரேண்ட்பாஸ் காணியில் இயங்கிய சுலைமான் வைத்தியசாலை சட்டவிரோதமாக இடித்து அகற்றப்பட்டுள்ளது. தற்போது புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்திலிருந்து வெளியேறுங்கள், இதில் செயற்பட வேண்டாம், இது முஸ்லிம்களின் சொத்து.
‘4 ஆவது பரம்பரையில் வந்தவர். வக்பு சொத்தை பலாத்காரமாக தனது வர்த்தகத்துக்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். நீங்கள் செய்துள்ள சட்டவிரோத ஒப்பந்தத்தை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்களது செயற்பாடுகளை சிவில் சமூகம், புத்திஜீவிகள், உலமாக்கள், அரசியல்வாதிகள் எதிர்க்கிறார்கள். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதில் தலையிட வேண்டும் என்றார்.
சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்
கபூரியா அரபுக்கல்லூரி காணி, கிரேண்ட்பாஸ் காணி என்பன மர்ஹூம் அப்துல் கபூரினால் வக்பு செய்யப்பட்டபோது இவற்றிலிருந்து பெறப்படும் அனைத்து வருமானமும் கல்லூரிக்கே வழங்கப்படவேண்டுமென உறுதியில் எழுதப்பட்டுள்ளது. இதனை தனிநபர் ஒருவரினால் அபகரிக்க முடியாது.
சம்பந்தப்பட்ட நபர் இது தர்ம நிதியம் அல்ல, குடும்ப நிதியம் என்று கூறிவருகிறார். இவ்வாறு தெரிவித்தே கிரேண்ட்பாஸ் காணி குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. எமது வக்பு சொத்துகளைப் பாதுகாப்பது சமூகத்தின் கடமையாகும். இது விடயத்தில் அரசும் தலையிடவேண்டும்.
இவ்வாறான வக்பு சொத்துக்களில் தனிநபர் உரிமை கொண்டாட வேண்டாமென நாம் சமூகத்திடம் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.
வக்பு சபையின் முன்னாள்
பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப்
வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான வக்பு சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகின்றன. கொழும்பு பெரிய பள்ளிவாசலின் சொத்துக்கள், காசிமியா சொத்துக்கள், புத்தளம் கே.கே. பள்ளிவாசல் சொத்துக்கள், மாத்தளை காட்டுப் பள்ளி சொத்துக்கள் என்று பட்டியல் நீள்கிறது. இவற்றுக்கு வக்பு சபையும், திணைக்களமும் சமூகமும் பொறுப்புக்கூற வேண்டும். அல்லாஹ்விடத்தில் தப்ப முடியாது. இதற்குக் காரணம் வக்பு சட்டம் சரியாக நடைமுறைப்படுத்துவதில் காட்டப்படும் அசிரத்தையே. குறிப்பாக அரசியல்மயப்படுத்தல் இதற்கு பிரதான காரணமாகும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபையின் முன்னாள் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது, ‘கபூரியா 1956 இல் வக்பு சட்டம் அமுலுக்கு வர முன்பு ஆங்கில சட்டத்தின்படி நம்பிக்கை சொத்தாக (Trust) 1931இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. கபூரியா நம்பிக்கையாளர்களால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது. வக்பு நியாயாதிக்க சபை கபூரியா சொத்துகள் வக்பு சொத்துகள் எனத் தீர்ப்பளித்துள்ளது. காஸிமியா வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதன் குடும்ப நம்பிக்கையாளர்கள் நீக்கப்பட்டு புதிய நம்பிக்கையாளர்களை வக்பு நியாயாதிக்க சபை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகையால் காஸிமியா சொத்துகள் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன.
குடும்ப சொத்தாக, குடும்ப வக்பு ஆக பதிவு செய்யப்பட்டிருப்பின் வக்பு சட்டத்தின் படி அது வக்பு சொத்தே. தனிப்பட்ட சொத்தாகாது.
நழீமியா உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம் பொதுச் சொத்துகள் வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். சுமார் 500 அரபு/ ஹிப்ழ் மத்ரஸாக்களும் வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை.
பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் அறக்கட்டளைகள் விடயத்தில் வக்பு சபை எடுக்கின்ற தீர்மானங்களை கேள்விக்குட்படுத்துவதற்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கோ, மஜிஸ்திரேட் நீதி மன்றங்களுக்கோ அதிகாரமில்லை. அவற்றை வக்பு சட்டத்தின் 1982ஆம் ஆண்டின் திருத்தங்களின்படி உருவாக்கப்பட்டுள்ள வக்பு நியாயாதிக்க சபைகளிலே கேள்விக்குட்படுத்த முடியும்.
வக்பு நியாயாதிக்க சபை மாவட்ட நீதிமன்றுக்கு நிகரான அதிகாரங்களைக் கொண்டுள்ளது. வக்பு சபை உறுப்பினர்கள் மத விவகார அமைச்சரினால் நியமிக்கப்பட்டாலும் நியாயாதிக்க சபை உறுப்பினர்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவினாலே நியமிக்கப்படுகிறார்கள்.
வக்பு சொத்துகளை வாடகைக்கு விடுவதாயின் அல்லது விற்பதாயின் வக்பு சபையின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கபூரியா கல்லூரிக்கு ஆபத்து
தற்போது கபூரியா அரபுக்கல்லூரி வளாகத்தினுள் சுமார் 500 மீற்றர்களுக்கும் மேலான நீளமான மதில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இச் சொத்துக்கு உரிமை கோரும் நம்பிக்கையாளர்களே இதனை முன்னெடுக்கின்றனர். இது கல்லூரி கட்டிடங்களையும் ஏனைய வெற்றுக் காணியையும் பிரிக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது. அத்தோடு இச்செயற்பாடானது கல்லூரி கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியைத் தவிர ஏனைய பகுதியை விற்பதற்கு அல்லது குத்தகைக்கு விடுவதற்கான முயற்சி என்று தெரிவிக்கப்படுகிறது.
எனவே நூற்றாண்டை அண்மித்துக் கொண்டிருக்கும் இக்கல்லூரியைப் பாதுகாப்பது சமூகத்தின் பொறுப்பாகும்.
கபூரியா அரபுக்கல்லூரி சொத்துகள் தர்ம நம்பிக்கை நிதியத்தின் கீழ் உள்ளடங்குகிறதா? இன்றேல் அவை குடும்ப நிதியமா? என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இச்சூழ்நிலையில் வக்பு செய்யப்பட்டுள்ள கபூரியாவுக்கே இந்நிலையென்றால் நாடெங்கும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பொதுச் சொத்துகள் வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் அவற்றுக்கும் எதிர்காலத்தில் ஆபத்துகள் காத்திருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கபூரியாவைக் காப்பாற்றிக்கொள்ளவும் நாடெங்கும் பரந்துள்ள வக்பு சொத்துக்களை பாதுகாக்கவும் அனைத்து தரப்புகளும் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்.- Vidivelli