சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சாய்ந்தமருது விலங்கறுமனை: வாக்குறுதியை நிறைவேற்றுமா கல்முனை மாநகர சபை?
றிப்தி அலி
சாய்ந்தமருது – வொலிவேரியன் கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான விலங்கறுமனை (மடுவம்) மூலம் சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கப்படுகின்ற அதேநேரம் குறித்த விலங்கறுமனை எந்தவித அனுமதிப் பத்திரங்களுமின்றி கடந்த பல வருடங்களாக இயங்கி வருகின்றமை தகவலறியும் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த விலங்கறுமனையிலிருந்து சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வகையிலான துர்நாற்றம் கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி ஆகிய பகுதிகளில் வீசுவதாக பொதுமக்களினால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.
உள்ளூராட்சி மன்றங்களினால் விலங்கறுமனைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என 1893ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க இறைச்சிக் கடைக்காரர் சட்டம் மற்றும் 1947ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மாநகர சபை கட்டளைச் சட்டம் போன்ற பல சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், கல்முனை மாநகர சபையினால் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக எந்தவொரு விலங்கறுமனையும் செயற்படுத்தப்படவில்லை. “மக்களின் எதிர்ப்பு, இடப்பற்றாக்குறை, பொருளாதாரப் பிரச்சினை போன்றவற்றின் காரணமாகவே விலங்கறுமனை நிர்மாணிக்கப்படவில்லை” என கல்முனை மாநகர சபை தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக கல்முனை மாநகரத்தில் மாடறுப்பு என்பது பாரிய பிரச்சினையாக மாறியது. இதற்கு தீர்வு காண்பதற்காக விலங்கறுமனை நடத்துவதற்கு `அபீபா குறூப் ஒப் கம்பனி` எனும் தனியார் நிறுவனத்திற்கு கல்முனை மாநகர சபை அனுமதி வழங்கியது.
கடந்த 2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கம்பனியின் விலங்கறுமனை பொதுமக்கள் செறிந்து வாழும் சாய்ந்தமருது – வொலிவேரியன் கிராமத்தில் சுமார் ஒன்றரை ஏக்கர் காணிப் பகுதியில் அமைந்துள்ளது.
“கல்முனை மாநகர சபையுடன் 30 வருட காலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரமே இந்த விலங்கறுமனை நடத்தப்படுகின்றது” என இக்கம்பனியின் பணிப்பாளர் எம். அஷ்ரப் தெரிவித்தார்.
அனுமதிப்பத்திரம்
தினசரி சுமார் 15 – 20 மாடுகளும் வெள்ளிக்கிழமைகளில் அதிக எண்ணிக்கையிலான மாடுகளும் அறுக்கப்படும் இந்த விலங்கறுமனைக்கு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் சிபாரிசுடன் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள விடயம் தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரியவந்தது.
இறுதியாக KMC/05/TL/2013/40 எனும் இலக்க அனுமதிப்பத்திரம் கல்முனை மாநகர சபையினால் கடந்த 2019 இல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பணமாக 2 இலட்சம் ரூபாவும் அனுமதிப்பத்திர கட்டணமாக வருடாந்தம் 5 ஆயிரத்து நூறு ரூபாவும் மாநகர சபையினால் அறவிடப்பட்டுள்ளது.
எனினும், 01.01.2020 இலிருந்து இன்று வரை குறித்த விலங்கறுமனைக்கு கல்முனை மாநகர சபையினால் எந்தவித அனுமதிப்பத்திரமும் வழங்கப்படவில்லை என்பதும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அது மாத்திரமல்லாமல் 1980ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இந்த விலங்கறுமனைக்கு வருடாந்தம் வழங்கப்பட வேண்டிய சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
“இங்கு மேற்கொள்ளப்படும் நீர் சுத்திகரிப்பு முறை, கழிவுகள் வெளியேற்றம் போன்றன ஒழுங்குமுறையாக முன்னெடுக்கப்படவில்லை. அதுபோன்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் நியமங்கள் தொடர்பில் எம்மால் வழங்கப்பட்ட ஆலோசனைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. இவ்வாறான காரணங்களினால் இந்த விலங்கறுமனைக்கான சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளது” என அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கட்டணம்
விலங்கறுமனைக்கான கூலியாக ஒரு மாட்டுக்கு 1,500 ரூபாவும், மாநகர சபைக்கு 500 ரூபாவும் அறவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், 2 ஆயிரம் ரூபாவிற்கு மேற்பட்ட தொகை இங்கு அறவிடப்படுகின்ற விடயம் கல்முனை மேயர் ஏ.எம். றகீபின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் ஒரு மாட்டுக்கு ஆயிரத்து தொள்ளாயிரம் ரூபா மாத்திரமே அறவிடுமாறு மிகக் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமுல்படுத்தப்படுகின்றது.
இதேவேளை, 2011ஆம் ஆண்டு முதல் செயற்படுகின்ற இந்த விலங்கறுமனையினால் கல்முனை மாநகர சபைக்கான வருமானம் 2021 ஆம் ஆண்டிலிருந்தே வழங்கப்படுகின்றது.
இதற்கமைய 2021 இல் 40 இலட்சத்து 52ஆயிரத்து அறுநூற்று 50 ரூபாவும், 2022ஆம் ஆண்டுக்காக கடந்த ஜூன் 09ஆம் திகதி வரை 17 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாவும் குறித்த விலங்கறுமனையினால் மாநகர சபைக்கு செலுத்தப்பட்டுள்ளது.
ஏனைய தொழிற்பாடுகள்
இந்த விலங்கறுமனையில் தோல்கள் சேமிக்கப்பட்டு பதனிடல், எலும்புகள் சேமிக்கப்பட்டு தூள்களாக்கப்படல் மற்றும் கொழுப்புக்கள் சேமிக்கப்பட்டு உருக்குதல் போன்ற செயற்பாடுகள் கடந்த பல வருடங்களாக இடம்பெற்றுள்ளன.
இது மூன்றும் வெவ்வேறு துறைகள் என்பதனால் இவற்றுக்கு தனித்தனியாக பல்வேறு திணைக்களங்களிடமிருந்து அனுமதிப்பத்திரங்கள் பெறப்பட வேண்டும். எனினும் இவற்றுக்கான அனுமதிப்பத்திரங்கள் எதுவுமின்றியே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், குறித்த தொழிற்பாடுகளை தற்போது இடைநிறுத்தியுள்ளதாக விலங்கறுமனையின் உரிமையாளர் எம். அஷ்ரப் கூறுகின்றார். இதனை கல்முனை மேயர் ஏ.எம். றகீப் உறுதிப்படுத்தியதுடன், “குறித்த விலங்கறுமனையின் கழிவுகள் அனைத்தும் கடந்த ஒரு மாத காலமாக பள்ளக்காட்டிலுள்ள குப்பை மேட்டிற்கு நாளாந்தம் கொண்டு செல்லப்படுகின்றன” என்றும் தெரிவித்தார்.
கழிவுநீர் சுத்திகரிப்பு செயற்திட்டமொன்றே இல்லாத இக்கம்பனியினால் கழிவுநீர் சேகரிப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் உரிமையாளர் அஷ்ரபிடம் வினவியதற்கு, “கழிநீர் சேகரிப்பு நடவடிக்கையினையும் தற்போது நிறுத்திவிட்டோம். எனினும், சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள இரண்டு உணவகங்களில் மாத்திரமே கழிவுநீர் சேகரிக்கப்படுகின்றது” என்றார்.
எனினும் ஹோட்டல் கழிவுநீர், விலங்கறுமனையின் கழிவுநீர் ஆகியன எவ்வாறு சுத்திகரிக்கப்படுகின்றன என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது.
சுகாதாரத் துறையின் செயற்பாடு
இந்த விலங்கறுமனை தொடர்பில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரிக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்து மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சாய்ந்தமருது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கள விஜயம் மேற்கொண்ட போது இங்கு சூழலை மாசுபடுத்தக் கூடிய வகையிலான சில குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS) அலுவலகம் தெரிவித்தது.
இதனை துரித கதியில் நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இப்பிரச்சினை தொடர்பில் பல்வேறு தரப்பினரின் பங்குபற்றலுடன் கடந்த மே 17ஆம் திகதி நடைபெற்ற விசேட கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒரிரு தீர்மானங்கள் மாத்திரமே விலங்கறுமனையினால் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக RDHS அலுவலகம் கூறுகின்றது. “உரிய அதிகாரிகளின் ஆலோசனைப் படி தரமான முறையில் இக்கழிவுகளை அகற்றுதல் அல்லது மீள் சுழற்சி செய்வதன் மூலம் சூழல் மாசடைவதைத் தடுக்கலாம்” என RDHS அலுவலகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வாறில்லாத பட்சத்தில் சுவாச நோய்கள், மன உளைச்சல், சுகாதார சீர்கேடுகள் இப்பிராந்தியத்தில் ஏற்படும் என RDHS அலுவலகம் குறிப்பிட்டது.
சட்ட நடவடிக்கை
இதேவேளை, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றுக்கமைய, கடந்த 2021 ஜூலையில் குறித்த விலங்கறுமனைக்கு கல்முனை நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கமைய விலங்கறுமனை பேணப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், கல்முனை பிரதேசத்தில் வீசிய துர்நாற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் கல்முனை RDHS, வைத்திய அதிகாரிகள், பிராந்திய ஊடகவியலாளர் உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிராக மாநகர சபையின் சுகாதாரக் குழுவின் தலைவர் ரோஷன் அக்தாரினால் பொதுநல வழக்கொன்று கல்முனை நீதிமன்றில் கடந்த மே 23ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சில நாட்களில் இப்பிரதேசத்தில் வீசிய துர்நாற்றம் இல்லாமல் போனமை குறிப்பிடத்தக்கதாகும். எவ்வாறாயினும் இந்த விலங்கறுமனை எந்தவித அனுமதியுமின்றி செயற்படுகின்ற விடயம் நீதவானின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டது.
இதனையடுத்து குறித்த விலங்கறுமனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஜூலை 18ஆம் திகதி கல்முனை நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.
எனினும், கல்முனை மாநகர சபை இன்று வரை குறித்த விலங்கறுமனைக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பில் கல்முனை மேயர் ஏ.எம். றகீபினை தொடர்புகொண்டு வினவிய போது,
“இப்பிரதேசத்தில் வீசிய தூர்நாற்றம் தற்போது இல்லாமல் போயுள்ளது. இது தொடர்பில் செப்டம்பர் 13ஆம் திகதி இடம்பெறவுள்ள இவ்வழக்கு மீதான விசாரணையின் போது நீதிமன்றில் ஆஜராகி தெளிவுபடுத்தவுள்ளேன். எவ்வாறாயினும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் பொதுமக்களுக்கும், சூழலுக்கும் தீங்குவிளைவிக்காத வகையிலான பொது விலங்கறுமனையொன்றினை சாய்ந்தமருதில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இதற்கு தேவையான இரண்டு கோடி ரூபா பணத்தினை கடனடிப்படையில் பெறுவதற்கான நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளேன். இதனால் தனியார் விலங்கறுமனையினை மூன்று மாதத்திற்கு மாத்திரமே நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளேன்” என்றார்.
கிழக்கு மாகாணத்தில் சனத்தொகை அடர்த்திமிக்க நகரங்களில் ஒன்றாக விளங்கும் கல்முனை மற்றும் அதன் சுற்றயல் பிரதேசங்களின் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலான இவ்வாறான நடவடிக்கைகளுக்கு கல்முனை மாநகர சபை ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது. வாக்குறுதியளித்தவாறு பொது விலங்கறுமனையை நிர்மாணித்து, பொது மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பற்ற வகையில் இயங்கச் செய்வது மாநகர சபையின் பொறுப்பாகும்.– Vidivelli