சட்ட மா அதிபர், சி.ஐ.டி.யின் பொறுப்பற்ற செயற்பாடு இழுத்தடிக்கப்படும் ஹிஜாஸின் வழக்கு விசாரணை

0 428

எம்.எப்.எம்.பஸீர்

‘இவ்­வ­ழக்கை துரி­த­மாக விசா­ரித்து முடிப்­ப­தற்­கா­கவே நீதி­மன்ற விடு­முறை காலத்தில் கூட அதனை விசா­ர­ணைக்கு இரு தரப்பின் ஒப்­பு­த­லுடன் அழைத்தேன். ஆகஸ்ட் 22, 23 ஆம் திக­தி­களில் வழக்கை விசா­ரிக்­கவே திட்­ட­மி­டப்­பட்­டது. எனினும் சாட்சி விசா­ர­ணை­க­ளுக்கு அரச தரப்­பி­னரின் சட்­டத்­த­ர­ணிகள் தயா­ரில்லை என தெரி­வித்­துள்­ளதால் என்னால் வழக்கை விசா­ரணை செய்ய முடி­ய­வில்லை. அதன் கார­ண­மா­கவே இந்த வழக்கு பிற்­போ­டாப்­ப­டு­கின்­றது.’

‘சி.ஐ.டியி­னரின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் நான் கடும் அதி­ருப்தி அடை­கிறேன். அவர்­களை எச்­ச­ரிக்­கிறேன். இந்த (ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா குறித்த) வழக்கு விசா­ர­ணைகள் சி.ஐ.டியி­னரின் செயற்­பா­டுகள் கார­ண­மாக தொடர்ச்­சி­யாக இவ்­வாறு இழுத்­த­டிக்­கப்­ப­டு­கி­றது, அதன் பிர­தி­பலன் பூரண கட்­ட­மைப்­பி­னையும் பாதிக்கும். மக்கள் நீதி­மன்­றையே குறை கூறுவர். கடந்த தவ­ணை­யின்­போதும் ( மே மாதம் ) சி.ஐ.டியினர் மூல ஆவ­ண­மொன்­றினை எடுத்­து­வ­ரா­ததன் கார­ண­மாகக் குறுக்கு விசா­ர­ணைகள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இம்­முறை வழக்­கின்­போதும் ( ஜூன் 10 ஆம் திகதி)சி.ஐ.டியினர் அதே தவறைச் செய்­துள்­ளனர். வழக்கு விசா­ர­ணைக்கு வரும்­போது மூல ஆவ­ணத்தை எடுத்­து­வ­ர­வேண்டும் என்ற அடிப்­படை அறி­வு­கூட சி.ஐ.டியி­ன­ருக்கு இல்­லையா? சி.ஐ.டியி­னரை விட சாதா­ரண பொலிஸார் திற­மை­யாக செயற்­ப­டு­கின்­றனர்.’

மேலுள்ள இந்த இரு கருத்­துக்­களும் புத்­தளம் மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி நதி அபர்ணா சுவந்­து­ரு­கொ­ட­வினால் திறந்த நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்ட கருத்­துக்­க­ளாகும்.
முதலில் உள்ள கருத்து, நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 23) வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது குறிப்­பிட்ட விட­ய­மாகும்.

மற்­றை­யது, கடந்த ஜூன் 10 ஆம் திகதி வழக்கு விசா­ர­ணை­க­ளி­டையே, இரண்­டா­வது பிர­தி­வாதி ஷகீல் மெள­லவி சார்பில் மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள குறுக்கு விசா­ர­ணை­களை ஆரம்­பித்து, அர­ச­த­ரப்பின் பிர­தான சாட்­சி­யாளர் மலிக், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி குற்­றப்­பு­ல­னாய்­வுத்­தி­ணைக்­க­ளத்­திற்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில் கூறிய முன்­னுக்­குப்பின் முர­ணான விட­யங்­களை சுட்­டிக்­காட்ட அவ்­வாக்­கு­மூ­லத்தின் மூலப்­பி­ர­தியை சாட்­சி­யா­ள­ருக்குக் காண்­பிக்­கு­மாறு கோரி­யி­ருந்தார். அச் சந்­தர்ப்­பத்தில் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சி.ஐ.டியின் பொலிஸ் பரி­சோ­தகர் துஷார தான் கொண்­டு­வந்­தி­ருந்த சில கோவை­களைக் காண்­பித்­த­போ­திலும், குறித்த வாக்­கு­மூலம் அதில் இருக்­க­வில்லை. இத­னை­ய­டுத்து வழக்கை ஒத்தி வைத்து நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட தெரி­வித்த விட­ய­மாகும். இதன்­போது வழக்கில் ஆஜ­ராகும் சி.ஐ.டி பொலிஸ் பரி­சோ­தகர் துஷா­ர­விற்கு எதி­ராக பொருத்­த­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு நீதி­பதி குற்­றப்­பு­ல­னாய்­வுத்­தி­ணைக்­க­ளத்தின் பிர­திப்­பொ­லிஸ்மா அதி­ப­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்த போதும் அதுவும் நடந்­த­தாக தெரி­ய­வில்லை.

அடிப்­ப­டை­வாதப் போத­னை­களை செய்­த­தாக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா, புத்­தளம் அல்-­சு­ஹை­ரியா அர­புக்­கல்­லூ­ரியின் அதிபர் ஷகீல் கான் ஆகி­யோ­ருக்கு எதி­ராக சட்­டமா அதிபர் புத்­தளம் மேல் நீதி­மன்றில் வழக்குத் தொடர்ந்­துள்ளார்.
சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுப்புக் காவலின் கீழும், விளக்­க­ம­றி­ய­லிலும் நீண்ட நாட்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்­ன­ணி­யிலும், சர்­வ­தேச அழுத்­தங்கள், கரி­ச­னை­களை அடுத்தே, இந்த வழக்கு உண்­மையில் பதிவு செய்­யப்­பட்­டது.

கைதின் போது, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரியை கைது செய்­து­விட்டோம் என்ற அள­வுக்கு பொலிஸ் திணைக்­ளத்தின் நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருந்­தன. எனினும் நீதி­மன்றில் முன் வைக்­கப்­பட்­டுள்ள குற்றப் பத்­தி­ரி­கையை பார்க்கும் போதும், சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக பலரை அச்­சு­றுத்தி (அஹ்னாப் ஜஸீம், வஸீர் மெள­லவி , ஷகீல் மெள­லவி உள்­ளிட்டோர் – வெவ்­வேறு வழக்­கு­களில் இது தொடர்பில் நீதி­மன்­றங்­களில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன) சி.ஐ.டி.யினர் சாட்­சியம் பெற முயன்­ற­மையை அவ­தா­னிக்கும் போதும் வழக்கின் பின்­னணி தெளி­வாக தெரி­கி­றது.

எவ்­வா­றா­யினும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திக­திக்கும் 31 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையில் கல்வி பயின்ற மாண­வர்­க­ளுக்கு, கற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட சொற்கள் ஊடா­கவோ, தவ­றான பிரதி நிதித்­துவம் ஊடா­கவோ பல்­வேறு மதங்­க­ளுக்கு இடையில் மோதல் ஏற்­படும் வண்ணம் எதிர் உணர்­வு­களை தூண்டும் வித­மாக சொற் பொழி­வினை நடாத்­தி­யமை, அதற்­காக சதி செய்­தமை தொடர்பில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து கூறப்­படும் அச்­சட்­டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்­டனைக் குறிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தொடர்பில், ‘இஸ்­ரே­லி­யர்கள் கைப்­பற்­றி­யி­ருப்­பது, எமது பள்­ளி­வா­சல்கள். இலங்­கையில் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­தி­னா­லேயே அவர்கள் அச்­சப்­ப­டுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடி­யோக்­களை கண்­பித்­தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலை­மையை ஏற்­ப­டுத்தும் வண்ணம் உணர்­வு­களை தூண்­டி­ய­தாக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து நோக்­கப்­படும் அச்­சட்­டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்­டனைக் குறிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

குறித்த இரு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்­க­ர­வாத தடை சட்ட ஏற்­பா­டுகள் பிர­காரம் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்­பி­லான யுத்த வீடியோ காட்­சி­களை காண்­பித்து ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் கூறி­ய­தாக கூறப்­படும் வச­னங்கள் ஊடாக வெறுப்­பு­ணர்­வு­களை விதைத்­தாக குற்றம் சுமத்தி சிவில் அர­சியல் உரி­மைகள் குறித்­தான சர்­வ­தேச இணைக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 (1) ஆம் உறுப்­பு­ரை­யுடன் இணைத்து பார்க்­கப்­படும் அச்­சட்­டத்தின் 3 (3) ஆம் உறுப்­பு­ரையின் கீழ் குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ரா­கவும், அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை தொடர்பில் மத்­ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீ­லுக்கு எதி­ரா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அப்­ப­டி­யானால், இவ்­வ­ழக்கின் சாட்சி விசா­ர­ணை­களை துரி­த­மாக முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுப்­பது, வழக்குத் தொடுநர் சட்ட மா அதி­பரின் கட­மை­யாகும். எனினும் இந்த வழக்கு, தொடர்ச்­சி­யாக இழுத்­த­டிக்கும் ஒரு போக்கை அவ­தா­னிக்க முடி­கி­றது.
வழக்கின் முதல் பிர­தி­வாதி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் ஒரு பிர­பல மனித உரி­மைகள் குறித்த சட்­டத்­த­ர­ணி­யாவார். இவ்­வ­ழக்கு தொடர்ச்­சி­யாக இழுத்­த­டிக்­கப்­ப­டு­வது, மனித உரி­ஐகள் விவ­கா­ரங்­க­ளையும், அவ­ரது ஏனைய வழக்­கு­க­ளையும் கூட பாதிக்கக் கூடி­யது.

2 ஆ பிர­தி­வாதி ஷகீல் மெள­லவி மற்றும் அவ­ரது முழு வாழ்­வி­ய­லையும் இவ்­வ­ழக்கு பாதித்­துள்­ளது.

அப்­ப­டி­யானால் உண்­மையில் இவ்­வ­ழக்கு அவ­ச­ர­மாக விசா­ரிக்­கப்­பட வேண்­டி­யது. எனினும் இவ்­வ­ழக்கின் போக்கில் அவ்­வா­றான எந்த நகர்­வு­க­ளையும் அவ­தா­னிக்க முடி­ய­வில்லை.

இந்த இழுத்­த­டிப்பு நிலை­மை­யா­னது, இலங்­கையின் குற்­ற­வியல் நீதிப் பொறி­மு­றையில் உள்ள மிகப் பெரும் குறை­பா­டாகும். இதனால் பெரும்­பா­லான அப்­பா­விகள், குற்­ற­மி­ழைக்­காமல், பல ஆண்­டுகள் அலைக்­க­ழிக்­கப்­ப­டு­கின்­றனர் என்­பது யாரும் மறுக்க முடி­யாத ஓர் உண்மை எனலாம்.

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­விற்கு எதி­ராக சி.ஐ.டி.யின­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்­திலோ, நீதி­வா­னுக்கு வழங்­கிய இர­க­சிய வாக்­கு­மூ­லத்­திலோ தான் எத­னையும் தெரி­விக்­க­வில்­லை­யென அரச தரப்பின் பிர­தான சாட்­சி­யாளர் மொஹமட் மலிக் கடந்த ஜூன் 10 ஆம் திகதி நீதி­மன்றில் ஒப்­புக்­கொண்­டி­ருந்தார்.

வழக்கில் குறுக்கு விசா­ர­ணை­க­ளின்­போது ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்­காக ஆஜ­ராகும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­தி­ர­திஸ்­ஸவின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து பிர­தான சாட்­சி­யாளர் மேற்­படி விட­யத்தை ஒப்­புக்­கொண்­டி­ருந்தார். ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாவைப் பெயர் குறிப்­பிட்டோ அல்­லது அவ­ரது ஆள் அடை­யா­ளங்­களைக் குறிப்­பிட்டோ எந்­த­வி­த­மான வாக்­கு­மூ­லங்­க­ளையும் தான் வழங்­க­வில்லை என்­பதை இதன்­போது அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். இவ்­வா­றான நிலையில், இந்த வழக்கு இழுத்­த­டிக்­கப்­ப­டு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

சரி, ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் விவ­கார வழக்கில் கடந்த 22,23 ஆம் திக­தி­களில் என்ன நடந்­தது என்­பதை பார்ப்போம். நேர­டி­யாக சொல்­வ­தானால், திட்­ட­மிட்­ட­படி எது­வுமே நடக்­க­வில்லை என்­பதே உண்மை, 22 ஆம் திகதி வழக்கு விசா­ர­ணைக்கு தயா­ராக இல்லை என (சாட்சி நெறிப்­ப­டுத்­தலை முன்­னெ­டுக்க) சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ராகும் சட்ட வாதி, பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு அறி­வித்து, வேறு ஒரு திக­தியை பரிந்­து­ரைத்து அதில் சாட்சி விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க கோரி­யுள்ளார்.

அரச சட்­ட­வாதி இல்­லாமல், குறித்த வழக்கின் சாட்சி நெறிப்­ப­டுத்தல் சாத்­தி­ய­மில்லை என்ற ரீதியில், அத்­த­கைய பரிந்­து­ரை­களை செயற்­ப­டுத்­து­வதை தவிர வேறு சிறந்த நகர்­வுகள் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை என்­பதால் பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணிகள் வேறு வழி­யின்றி இணங்­கி­யுள்­ளனர். அதன்­படி அன்று திறந்த மன்றில் வழக்கு விசா­ர­ணைக்கு கூட அழைக்­கப்­ப­ட­வில்லை.

எனினும் புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பஹி நதீ அபர்ணா சுவந்­து­ரு­கொட, ஆகஸ்ட் 23 ஆம் திகதி வழக்கை கண்­டிப்­பாக

திறந்த மன்றில் அழைப்­ப­தாக இரு தரப்­பி­ன­ருக்கும் அறி­வித்­தி­ருந்த நிலையில், அன்­றைய தினம் வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது.

சட்­டமா அதிபர் தொடர்ந்­துள்ள வழக்கை துரி­த­மாக விசா­ரணை செய்­வ­தற்­கா­கவே தான், நீதி­மன்ற விடு­முறை காலப்­ப­கு­தி­யிலும் அவ்­வ­ழக்கை விசா­ர­ணைக்கு அழைத்­த­தா­கவும், சட்­ட­வா­தி­களும் சட்­டத்­த­ர­ணி­களும் விசா­ர­ணைக்கு தயா­ரின்­மையால் இவ்­வ­ழக்கு தொடர்ந்து ஒத்தி வைக்­கப்­ப­டு­வ­தாக புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பதி நஹீ அபர்னா சுவந்­து­ரு­கொட இதன்­போது ( ஆலஸ்ட் 23 )திறந்த நீதி­மன்றில் அறி­வித்தார்.
சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா உள்­ளிட்­டோ­ருக்கு எதி­ரான வழக்கு கடந்த 23 ஆம் திகதி புத்­தளம் மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி நதி அபர்ணா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது பிர­தி­வா­தி­க­ளாகப் பெய­ரி­டப்­பட்­டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா, அர­புக்­கல்­லூ­ரியின் அதிபர் ஷகீல் கான் ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­விற்­கா­கவும், மத்­ரசா அதி­ப­ருக்­கா­கவும் சட்­டத்­த­ரணி ஷெனால் பெரேரா மன்றில் ஆஜ­ரானார். வழக்­குத்­தொ­டுனர் சட்­டமா அதிபர் சார்பில் வழக்கை நெறிப்­ப­டுத்த வழ­மை­யாக பிரதி சொலி­ஸிட்டர் ஜென­ரல்­க­ளான சுதர்­ஷன டி சில்வா, லக்­மினி கிரி­ஹா­கம ஆகியோர் ஆஜ­ராகும் நிலையில், அரச சட்­ட­வாதி நிமேஷா டி அல்விஸ் முன்­னி­லை­யானார். இந்­நி­லையில் கடந்த 23 ஆம் திகதி அர­ச­த­ரப்பின் பிர­தான சாட்­சி­யா­ள­ரிடம் மேல­திக குறுக்கு விசா­ர­ணைகள் தொடர இருந்­தன. எனினும் பிர­தான சாட்­சி­யாளர் மலிக் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருக்­க­வில்லை.

இதன் போது மன்றில் விட­யங்­களை முன் வைத்த அரச சட்­ட­வாதி நிமேஷா டி அல்விஸ், பிர­தான சாட்­சி­யா­ளரை அடுத்த தவ­ணையின் போது மன்­றுக்கு அழைத்து வரும் பொறுப்பை வழக்குத் தொடு­ந­ரான முறைப்­பாட்­டாளர் தரப்பு ஏற்­ப­தாக கூறினார். அத்­துடன் வழக்கின் அடுத்த தவணை விசாரணைகளை ஒக்டோபர் 4 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடாத்துமாறும் அன்றைய தினம் மன்றில் ஆஜராக முறைப்பாட்டாளர் தரப்பின் 2,3 ஆம் சாட்சியாளர்களை மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிக்குமாறும் கோரினார்.

எனினும் ஒக்டோபர் 11 ஆம் திகதி தனக்கு வேறு வழக்கொன்று பட்டியலிடப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்த நிலையில், 4 ஆம் திகதி விசாரணை செய்ய முடியும் என குறிப்பிட்டார்.

இதன்போது ஒக்டோபர் 4 ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுக்க பிரதிவாதிகளுக்கு ஆட்சேபனை உள்ளதா என நீதிபதி வினவினார். எனினும் பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜரான சட்டத்தரணி ஷெனால் பெரேரா அதற்கு ஆட்சேபனை இல்லை என கூறினார்.
இதனையடுத்து திறந்த மன்றில் நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட ‘ இவ்வழக்கை துரிதமாக விசாரித்து முடிப்பதற்காகவே நீதிமன்ற விடுமுறை காலத்தில் கூட அதனை விசாரணைக்கு இரு தரப்பின் ஒப்புதலுடன் அழைத்தேன். எனினும் சாட்சி விசாரணைகளுக்கு இரு தரப்பின் சட்டத்தரணிகளும் தயாரில்லை என தெரிவித்துள்ளதால் என்னால் வழக்கை விசாரணை செய முடியவில்லை. அதன் காரணமாகவே இந்த வழக்கு பிற்போடப்படுகின்றது.’ எனக் கூறி வழக்கை ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் 2,3 ஆம் இலக்க அரச சாட்சியாளர்களுக்கும் மன்றில் ஆஜராக நீதிபதி அறிவித்தல் அனுப்பினார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.