பாதுகாப்பு அமைச்சினால் தடை செய்யப்பட்டுள்ள 11 முஸ்லிம் அமைப்புகளிலிருந்து 6 அமைப்புகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகரும், ஜனாதிபதி அலுவலக பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் 6 அமைப்புகளை தடைப்பட்டியலிலிருந்து நீக்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்பு, தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லிம் அமைப்புகளின் தடையை நீக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ், இஷாக் ரஹ்மான் ஆகியோர் ஜனாதிபதியிடம் கோரியிருந்தனர். அதற்கிணங்க குறிப்பிட்ட கலந்துரையாடல் இடம் பெற்றது.
கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரிஸ், இஷாக் ரஹ்மான் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள் பங்கு கொண்டிருந்தனர்.
குறிப்பிட்ட 6 அமைப்புகளின் சொத்துகள் முடக்கப்பட்டு அதற்கான வழக்குகள் இருந்த நிலையிலே தடைநீக்கம் தாமதிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
தடை நீக்கத்துக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விரைவில் தடைநீக்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமெனவும் கலந்துரையாடலின்போது உளவுப்பிரிவின் பிரதானி சுரேஷ் சாலே தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.- Vidivelli