உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 5 கிலோ வெடிபொருட்களே பயன்படுத்தப்பட்டன
வணாத்தவில்லுவில் கண்டுபிடிக்கப்பட்டதோ 1200 கிலோ
(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது, மொத்தமாகவே சுமார் 5 கிலோ வெடிபொருட்களே பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும், எனினும் அதற்கு முன்னர் சி.ஐ.டி.யினரின் விசாரணை ஊடாக வணாத்துவில்லு லக்டோவத்தையில் சுமார் 1200 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதன் ஊடாக மிகப் பெரும் அழிவு தடுக்கப்பட்டதாக சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க சாட்சியமளித்தார். இது தொடர்பில் நீதிமன்றம் விஷேடமாக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரினார்.
புத்தளம் – வணாத்தவில்லு, லக்டோஸ் தோட்டத்தில், வெடிபொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் இடமொன்றினை முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கு நேற்று (24) புத்தளம் மேல் நீதிமன்றில் சிறப்பு ட்ரயல் அட் பார் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே இந்த வெடிபொருள் விவகாரத்தை விசாரணை செய்த அதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க மேலுள்ள விடயத்தை வெளிப்படுத்தினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், ‘வணாத்துவில்லுவில் வெடிபொருள் மீட்கப்பட்ட பின்னர் முன்னெடுத்த விசாரணைகளில் சஹ்ரான் ஹஷீம் மற்றும் மொஹம்மட் எனும் இருவரின் தொடர்புகள் வெளிப்படுத்தப்பட்டன. மொஹம்மட் எனும் பெயரால் அறியப்பட்ட நபர் கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த ஹஸ்தூன் என உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரே தெரியவந்தது.
சஹ்ரானை கைது செய்ய கடந்த 2019 ஜனவரி 23 முதல் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அவரை கைது செய்ய முடியவில்லை. அவருக்கு எதிராக நாம் வெளிநாட்டு பயணத் தடையையும் பெற்றிருந்தோம்.
சஹ்ரான் சாதாரண தொலைபேசி அழைப்புக்களைக் கூட முன்னெடுக்கவில்லை. அவர் திரிமா எனும் செயலியை பயன்படுத்தியதால் அவரை நெருங்க முடியவில்லை. அந்த செயலியை எந்த தொலைபேசி சேவைகள் நிறுவனத்தினாலும் ஹெக் செய்ய முடியவில்லை.
சஹ்ரானை தேடி நாம் அவரது வீட்டுக்கு சென்றோம். அவரது மனைவியான பாத்திமா ஹாதியாவின் கெக்குனுகொல்ல வீட்டுக்கும் சென்றோம். அங்கு சென்ற எல்லா சத்தர்ப்பத்திலும், கட்டுவாபிட்டி தேவாலய குண்டுதாரி ஹஸ்தூனின் மனைவி சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேத்திரன் சஹ்ரானின் மனைவியுடனேயே தங்கியிருந்தார்.
நாம் வணாத்துவிலுவில் வெடிபொருட்களை மீட்டதால் மிகப் பெரும் அழிவு தவிர்க்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் , வணாத்துவில்லுவில் மீட்கப்பட்ட வெடிபொருட்களுக்கு சமமானவை. அங்கு வைத்து இரசாயன கலவை தொடர்பிலான விடயங்கள் அடங்கிய ஒரு கடிதம் பிரதிவாதி ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டது.
இதனைவிட இரசாயன கலவைகள் செயும் வகையிலான உபகரணங்களும் மீட்கப்பட்டன. (உபகரணங்களையும் அடையாளம் காட்டினார்)
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் பெரும்பாலும் அனைத்து குண்டுதாரிகளும் பயன்படுத்திய வெடிபொருளின் அளவு தலா 500 கிராமாகும். ஒரே ஒரு தாக்குதல்தாரி மட்டும் 800 கிராம் நிறையுடைய வெடிபொருளை பயன்படுத்தியிருந்தார்.
அதன்படி அத்தாக்குதலுக்கு பயன்படுத்திய மொத்த வெடிபொருளின் அளவு 5 கிலோவாகும். எனினும் வனாத்துவில்லுவில் நாம் கைப்பற்றிய வெடிபொருள் சுமார் 1200 கிலோ எடை கொண்டது. அப்படியானால் மிகப் பெரும் அழிவு இதனூடாக தவிர்க்கப்பட்டது என்பதை நீதிமன்றம் அவதானிக்க வேண்டும்.’ என மாரசிங்க சாட்சியமளித்தார். குறித்த சாட்சியம் தொடர்பிலான குறுக்கு விசாரணைகள் இன்று 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.– Vidivelli