கபூரியாவுக்குரிய வக்பு சொத்துகளை யாரும் உரிமை கொண்டாட முடியாது
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா திட்டவட்டமாக தெரிவிப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கபூரியாவின் சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த காணி உட்பட வக்பு சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும். இச்சொத்தினை குடும்பத்தினரோ தனியாரோ உரிமை கொண்டாட முடியாது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலமா சபையும், வக்பு சபையும் தீவிர கவனம் செலுத்தும் என உலமா சபையின் செயலாளரும் வக்பு சபையின் உறுப்பினருமான அர்கம் நூராமித் தெரிவித்தார்.
சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள கபூரியா அரபுக் கல்லூரியின் வக்பு சொத்துக்கள் தொடர்பில் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ‘மஹரகம கபூரியா அரபுக் கல்லூரி மற்றும் அதன் சொத்துக்கள் பல தசாப்தங்களுக்கு முன்பு மர்ஹூம் அப்துல் கபூரினால் வக்பு செய்யப்பட்டுள்ளன. வக்பு சபையில் உத்தியோகபூர்வமாக பதிவும் செய்யப்பட்டுள்ளது. அதன் நம்பிக்கை பொறுப்பாளர்களாக குடும்ப அங்கத்தவர்களும் வெளியாரும் நியமிக்கப்படலாம் என்ற நிபந்தனையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கபூரியாவின் சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த காணி உட்பட வக்பு சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும். இச்சொத்தினை குடும்பத்தினரோ தனியாரோ உரிமை கொண்டாட முடியாது.
கபூரியா அரபுக்கல்லூரி மற்றும் அதன் வக்பு சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
வக்பு சொத்தினை தனியாரோ, வக்பு செய்த குடும்பத்தினரோ மீண்டும் உரிமை கொண்டாட முடியாது. சமூகம் இது விடயத்தில் தெளிவு பெற வேண்டும். வக்பு சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வக்பு சபைக்குள்ளது என்றார்.- Vidivelli