பாராளுமன்ற சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தராக 19 வருடங்களாக பணியாற்றிவரும் முஹம்மது அஜிவதீன், தனக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டத்தைப் பெற்ற அஜிவதீன் அதே பல்கலைக் கழகத்தில் புவியியல் துறை உதவி விரிவுரையாளராக சுமார் மூன்று வருடங்கள் கடமையாற்றி பின்னர் ஒரு திறந்த போட்டிப் பரீட்சையில் தேர்ச்சியடைந்து பாராளுமன்ற ஆய்வு உத்தியோகராக 2003 ஆம் ஆண்டு பதவியேற்றார்.
தமது 19 வருட சேவைக் காலத்தில் பாராளுமன்ற ஆய்வுத் துறை அபிவிருத்திக்கும் தேசிய சட்டவாக்க பணிக்கும் தான் சேவையாற்றியுள்ளதாகவும் 2005 ஆம் ஆண்டு தனக்குக் கிடைத்த வெளிநாட்டு புலமைப்பரிசில் வாய்ப்பைப் பெற இலங்கைப் பாராளுமன்ற நிருவாகம் மறுத்த நிலையில் உள்நாட்டில் முது தத்துவமானி கற்கையை பூர்த்திசெய்து பாராளுமன்ற ஆய்வுத் துறைக்கு பங்களித்துள்ளதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற செயலக வரலாற்றில் முது தத்துவமானி பட்டம் பெற்ற முதலாவது அதிகாரியும் இவராவார். பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஆய்வு முறைமைகள் பற்றி இந்தியா பாராளுமன்றம், பேர்ன் பல்கலைக்கழகம், சுவிட்ஸர்லாந்து, பிரித்தானியாவின் வெட்ஸ்மினிஸ்டர் நிறுவனம் உள்ளிட்ட அமைப்புக்களில் விஷேட பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற இவர் பல நாடுகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை முன்வைத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டுவரை பாராளுமன்ற ஆய்வு வட்டத்தின் முன்னோடி ஆய்வாளராகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் “NEXTGENCHAMPION” என்ற விருதையும் இவர் பெற்றுள்ளார். இருப்பினும் பிரதான ஆய்வு உத்தியோகத்தர் என்ற பதவிக்கு தன்னை விட 7 வருடங்கள் மூப்புரிமை குறைந்த ஒரு உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இது விடயத்தில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பதவி உயர்வு வழங்குவதற்கான பொறிமுறையில் பொது நலவாய நாடுகளின் பாராளுமன்ற சங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் இதன் மூலம் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் மேலும் டில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.- Vidivelli