இறுதிநேர நெருக்கடிகளை தவிர்க்க ஜனவரி முதல் ஹஜ் பயண ஏற்பாடுகள்
யாத்திரைக்கு திட்டமிடுவோரை தயாராகுமாறு கூறுகிறது திணைக்களம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இறுதிநேர நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காகவும், ஹஜ் யாத்திரிகர்களுக்கு சிறப்பான சேவையினை வழங்குவதற்காகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அடுத்த வருட (2023) ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது. எனவே ஹஜ் யாத்திரைக்கு திட்டமிட்டுள்ளவர்கள் இப்போதிருந்தே தயாராகுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இச்சேவையினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஹஜ் முகவர்களின் ஒத்துழைப்பினையும் வேண்டியுள்ளார்.
பதிவு செய்யப்பட்டுள்ள 73 ஹஜ் முகவர்களுடனான கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் தலைமை வகித்து உரையாற்றினார். அதன் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் இவ்வருட ஹஜ் யாத்திரை மேற்கொண்ட யாத்திரிகர்களிடமிருந்து ஹஜ் முகவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை. இதுவோர் பாரிய முன்னேற்றமாகும். ஹஜ் முகவர்கள் சிறந்த சேவையினை வழங்கியிருப்பது பாராட்டத்தக்கது.
இதேவேளை திணைக்கள ஊழியர்களிடம் ஏதேனும் தவறுகள் இருந்தால் முகவர்கள் அது தொடர்பில் எவ்வித அச்சமுமின்றி முறையிடலாம்.
அவ்வாறான முறைப்பாடுகள் உரிய வகையில் பரிலீக்கப்படும். அதைவிடுத்து முகவர்கள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கக்கூடாது. இவ்வாறான ஒரு சம்பவம் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளின்போது இடம் பெற்றமை கவலையளிக்கிறது. இது தொடர்பான விசாரணைகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்படவேண்டும் என்றார்.
இதே வேளை திணைக்களத்தின் ஹஜ் தொடர்பான வழிகாட்டல்களுக்கும் முகவர்களுடனான ஒத்துழைப்புக்கும் ஹஜ் முகவர் சங்கங்கள் நன்றிகளைத் தெரிவித்தன.- Vidivelli