கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
நாட்டைவிட்டுத் துரத்தப்பட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இலங்கையை செல்வமும் செழிப்பும் பொங்கும் ஒரு நாடாக மாற்றுவேன் என்று சூளுரைத்து அதனை பஞ்சமும் பட்டினியும் வாட்டும் ஒரு தரித்திர நாடாக மாற்றிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் இந்தத் தரித்திரம் அவருடன் மட்டும் உருவாகவில்லை. அதற்கொரு நீண்ட சரித்திரமே உண்டு.
ஆனால் பின்வழியால் நாடாளுமன்றத்தினுள் நுழைந்து ராஜபக்ச அணியின் ஆதரவால் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ரணில் விக்ரமசிங்ஹ, அவர் காட்டும் இன்னொரு பாதைவழியாகப் பொருளாதாரத்தை நடத்திச் சென்றால் 2048 இல் இலங்கை முதலாம் உலக நாடுகளுள் ஒன்றாக மலரலாம் என்று ஹேஷ்யம் கூறியுள்ளார். அந்த ஆண்டில் இந்த ஜனாதிபதி உயிருடன் வாழ்ந்தால் அவருக்கு 99 வயதாகி ஒரு நூற்றாண்டை அடையும் வாய்ப்பையும் பெறுவார். இந்தத் தரித்திரச் சூழலிலிருந்து அவர் ஒரு புதிய சரித்திரம் படைக்க எத்தனிப்பதை உணரமுடிகிறது. ஆனால் அவர் படைக்கவிருக்கும் சரித்திரத்தைவிட புதியதோர் சரித்திரத்தை இன்றைய இளைஞர் சமுதாயம் படைத்துக்கொண்டிருப்பதை மறத்தலாகாது.
இலங்கையின் சரித்திரத்திலேயே என்றுமில்லாத ஒரு தரித்திர நிலை ஏற்பட்டதற்குரிய உடனடிக் காரணங்களை பலரும் (இக்கட்டுரையாளர் உட்பட) பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளனர். வரவை மீறிய செலவுகளாலும் கண்மூடித்தனமான வரிச்சலுகைகளாலும் அரசாங்கம் வருவாயை இழந்து பாரிய கடன் சுமைக்குள் நாட்டைப் புகுத்தியமை, பதவி துறந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது கற்பனையிலே வடித்த ஒரு சொர்க்கத்தை நனவாக்க நினைத்து நாட்டின் உணவு உற்பத்தித் துறைக்கு ஏற்படுத்திய சீரழிவு, பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் தாமரைக் கோபுரம் போன்ற அலங்கார அமைப்புகளுக்காக கடன்பட்டுச் செலவுசெய்து அந்தச் செலவிலே ஒரு பகுதியை ராஜபக்சாக்களும் அவர்களின் அமைச்சர்களும் அடிவருடிகளும் சொந்த வருவாய்க்காக ஒதுக்கிய ஊழல்கள், நீதித் துறையின் சுயாதீனத்தை புறம்தள்ளி சர்வாதிகாரப் போக்குள்ள பொது நிர்வாகத்தை வளர்த்தமை என்றவாறு ஒரு நீண்ட பட்டியலையே அமைத்துவிடலாம். அவையெல்லாம் உண்மைதான். ஆனாலும் அத்தனைக்கும் அடிப்படையான ஒரு காரணத்தை ஓரிருவரே துணிந்து சுட்டிக்காட்டியுள்ளனர். அந்தக்காரணம் வரலாற்று ரீதியாக உருவாகி மற்றைய காரணங்களுக்கு ஊற்றாக அமைந்துள்ளது. அந்தச் சரித்திரத்தை மறந்து விக்கிரமசிங்ஹ புதிய சரித்திரமொன்றைப் படைக்கக் கனவு காண்கிறார். அந்தக் கனவைப்பற்றிப் பின்னர் ஆராய்வோம்.
முதலில் இந்தத் தரித்திரத்தைப் படைத்த சரித்திரம் எது? பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் குறிப்பிட்ட ஓர் இனம் தனது எண்ணிக்கையின் பலத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்த நாட்டை தனக்கே சொந்தமெனக் கருதி அந்த ஓர் இனத்தின் நலனுக்காகவே அரசியல், பொருளாதாரம், சட்டம், பொது நிர்வாகம், கல்வி சம்பந்தமான அமைப்புகளையெல்லாம் உருவாக்கிச் செயற்படத் தொடங்கினால் அந்த நாட்டில் செழிப்பும் அமைதியும் நிலைத்து நிற்குமா? அப்படிப்பட்ட ஒரு நாடாகத்தான் இலங்கை 1948க்குப் பின் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. அங்கு வாழும் ஏனைய சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மை இனத்தின் தயவில் வாழும் நீண்டகால குத்தகைக் குடிகள் என்ற கருத்து ஓர் அரசியல் சித்தாந்தமாக வளர்த்துவிடப்பட்டுள்ளது.
இந்தச் சித்தாந்தம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே உருவாகிவிட்டதென்றாலும் சுதந்திரத்துக்குப் பின்புதான் அது வேகமான வளர்ச்சியை கண்டது. பெரும்பான்மை இனத்தின் அரசியல் தலைவர்களும், அறிவியலாளர்களும், சமயவாதிகளும் ஊடகங்களும் ஏதோ நாட்டினது சர்வ பிணிகளையும் தீர்க்கும் ஒரு சஞ்சீவி மாத்திரையாக அந்தத் தத்துவத்தை சிங்கள பௌத்த மக்களுக்கு ஊட்டியுள்ளனர்.
இந்த இனவாதத் தத்துவத்தின் சரித்திரமே இன்றைய தரித்திரத்திற்கு மூலகாரணம் என்பதை முதலில் விளங்குதல் வேண்டும். அந்தத் தத்துவத்தை ஓர் அரசியல் போர்வையாகப் போர்த்திக்கொண்டு அதன் மறைவிலே ஒழிந்திருந்து ஏழு தசாப்தங்களாக அரசியல் தலைவர்கள் அரங்கேற்றிய இனவாத நாடகமே இந்தப் பொன் விைளயும் நாட்டைச் சீரழித்துள்ளது என்பதை புதிய ஜனாதிபதியும் அவரை ஜனாதிபதியாக மேடையேற்றிய நாடாளுமன்றப் பிரமுகர்களும் ஏன் உணர மறுக்கின்றார்களோ? அடுக்கடுக்காக அவிழ்த்துவிடப்பட்ட இனக்கலவரங்கள், இனச்சுத்திகரிப்புகள், ஆயுதப்போர் யாவுமே அந்தத் தத்துவம் ஏற்படுத்திய சீரழிவுகள்தானே. இந்தச் சரித்திரப் புத்தகத்தை முற்றாக மூடிவிட்டு, புதியதொரு சரித்திரத்தைப் படைக்காமல் பழைய புத்தகத்தின் அடுத்த அத்தியாயமாக எழுதப்படும் எந்தப் பாடமும் பலன் தரமாட்டாது. அதைத்தான் முதலாவது உலக நாடு என்ற புதிய கனவுலகைப் படைக்க எத்தனிக்கும் ஜனாதிபதியும் உணரவேண்டும்.
இனவாதத்தின் சரித்திரத்தை நன்றாக உணர்ந்து அதற்கொரு முற்றுப்புள்ளி வைக்காமல் இந்த நாடு பொருளாதார சுபீட்சம் காணமுடியாது என்ற ஒரு மகத்தான உண்மையை காலிமுகத்திடலிற் குவிந்த இளைஞர் கூட்டம் நாட்டின் தலைவர்களுக்கு கிளிப்பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பதுபோன்று ஓயாது எடுத்துரைத்தனர். அவர்கள்தான் புதிய சரித்திரமொன்றை இன்றைய தரித்திரத்தின் மடியிலிருந்து படைத்துக் கொண்ருக்கின்றனர். விழிப்புணர்வு பெற்ற அந்த இளைஞர் கூட்டம் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்தான் ஒரு பிரதமரையும் ஜனாதிபதியையும் துரத்தியடித்து புதிய இருவரை இப்போது அப்பதவிகளில் அமரச்செய்துள்ளன. ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ அந்தப் போராளிகளுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளார். ஆனால் போராளிகள் படைக்கவிருக்கும் புதிய சரித்திரத்துக்கு ஒரு மாற்றுச் சரித்திரமாக தனது பொருளாதார வளர்ச்சிக் கனவை முன் வைக்கிறார் இந்த ஜனாதிபதி. அந்தக் கனவு சாத்தியப்படுமா என்பதை இனி ஆராய்வோம்.
அந்தக் கனவை நனவாக்கும் முயற்சியின் முதற்படியாக அவரது கரிசனை பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதிலே நாட்டம் கொண்டுள்ளது. மக்களது ஆதரவில்லாமல் ஜனாதிபதியாகி இருக்கும் விக்கிரமசிங்ஹ, அவரது பதவியை பிரச்சினையில்லாமல் நீடிக்க வேண்டுமென்றால் பொது மக்களின் பொருளாதாரக் கஷ்டங்களை விரைவில் குறைக்கவேண்டும். எரிவாயுவுக்கும் மருந்துக்கும் மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கும் நீண்ட வரிசைகளிலே கால்கடுக்க நின்று ஏமாந்துபோன எத்தனையோ நுகர்வோரின் குமுறல்களை அடக்க வேண்டுமாயின் அந்தப் பொருள்கள் தாராளமாகக் கிடைப்பதற்கு ஜனாதிபதி வழிசெய்ய வேண்டும். எரிவாயுவின் விலை சிறிது குறைக்கப்பட்டு நீண்ட வரிசைகளும் குறையத் தொடங்கியதன் மர்மம் என்னவோ? அதுவும் எத்தனை நாட்களுக்கோ? இந்த விரைவான மாற்றங்களைக் கண்ணுற்ற சில அவதானிகள் ரணில் விக்கிரமசிங்ஹதான் இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வழிகாட்டுவார் என்ற ஒரு அவசர முடிவுக்கு வந்துள்ளதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆனால் உண்மை நிலவரம் என்ன? திறைசேரியோ வங்குறோத்தாகி விட்டது. ஆகவே அன்னியச் செலாவணி அவசியம் தேவை. இந்த நிலையில் உடனடியாக அன்னியச் வெலாவணியைத் தேடுவதற்காக அவர் எடுக்கும் பிரதான முயற்சி சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடுவதாகும். ஆனால் அதிலே பல சிக்கல்கள் உள்ளன.
சர்வதேச நாணய நிதி என்பது முதலாளித்துவ அடிப்படையில் இயங்கும் உலக ஒழுங்கினைக் கட்டிக்காப்பாற்ற முனையும் ஸ்தாபனங்களுள் மிகப் பிரதானமான ஓர் அமைப்பு. அதனை செல்வந்த நாடுகளின் பாதுகாவலன் என்றுகூட அழைக்கலாம். ஆகையினால், நெருக்கடிக்குள்ளான இலங்கை போன்ற முதலாளித்துவப் பொருளாதார நாடுகளுக்கு உதவும் அதேவேளை அவ்வாறு உதவுவதால் செல்வந்த நாடுகளுக்கு அதிகம் இழப்புகள் ஏற்படாவண்ணமும் அந்த நிறுவனம் செயற்படுதல் வேண்டும்.
இலங்கையின் கடன் தொகை 52 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. அந்தக்கடனில் பெரும்பகுதி செல்வந்த நாடுகளின் பணச்சந்தைக்குச் சொந்தமானதாகும். ஆகவே அந்தப்பணச் சந்தையிலே பட்ட கடனை எவ்வாறு இறுப்பது என்பதுபற்றி முதலில் இலங்கை அரசு சர்வதேச நாணய நிதிக்கு பதில் கூறவேண்டும். அதைப் பொறுத்துத்தான் அவசர உதவிகளை அந்த நிதியிலிருந்தும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற ஏனைய நிறுவனங்களிலிருந்தும் பெற முடியும். இதனிடையிலே சீனம் தான் கொடுத்த கடனை சர்வதேச நாணய நிதிமூலம் சீர்படுத்துவதற்கு இணங்காததனால் அந்த நாட்டு அரசுடன் ஜனாதிபதி விக்கிரமசிங்ஹவின் அரசை முதலில் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாணய நிதி கேட்டுள்ளது. ஏற்கனவே சீனாவிடம் பட்ட கடனை அடைக்க முடியாமற் போனதனாலேதான் அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு 99 வருடகால குத்தகைக்கு வழங்கப்பட்டது. அதன் விளைவுகள் எவ்வளவு பாரதூரமானதென்பதற்கு இப்போது உருவாகியுள்ள சீனஆய்வுக் கப்பல் பிரச்சினை ஓர் உதாரணம். எனினும் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் ஒருவாறு சமாளிக்கப்பட்டாலும், நாணய நிதி சுமத்தப்போகும் பொருளாதாரப் பரிகாரங்கள் பொது மக்களின் கஷ்டங்களை விரைவில் தீர்க்கப் போவதில்லை. மாறாக அவை மேலும் அதிகரிக்கும். அதனால் ஏற்படவிருக்கும் மக்களின் கொந்தளிப்புகளைச் சமாளிக்கவே ஜனாதிபதி சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கி அதனுள் எல்லாக்கட்சிகளிலும் இருந்து அங்கத்தவர்களைப் பொறுக்கி அமைச்சர்களாக்கி பொருளாதாரப் பழியை தன் தலையில் மட்டும் போடாமல் எல்லாக் கட்சிகளுடனும் பகிர்ந்துகொள்ள விளைகின்றார். அந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் புத்திசாதுரியமாக விலகி நிற்பவை மக்கள் விடுதலை முன்னணியும் அதன் சகாவான தேசிய மக்கள் முன்னணியுமே.
மக்களின் கொந்தளிப்புகளை அடக்குவதற்கு முப்படைகளையும் இந்த ஜனாதிபதி செயற்படுத்துவார் என்பதிலும் சந்தேகமில்லை. அதற்கான வெள்ளோட்டத்தையே காலிமுகத்திடல் அன்று கண்டது.
இந்தப் பின்னணியிலேதான் ஜனாதிபதியின் முதலாம் உலக நாடாக நாட்டை மிளிரச்செய்யும் கனவை அணுகவேண்டும். அதை நனவாக்க அவர் கூறிய வழிதான் இலங்கையின் பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீடுகளுடனும் நவீன தொழில் நுட்பத் திறனுடனும் புதுப்பிக்கத்தக்க சக்தியுடனும் வேண்டுமானால் அணு சக்தியுடனும் ஒரு ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றுவது. கேட்பதற்கு இது மகிழ்ச்சியூட்டுவதாகினும் நடைமுறையில் சாத்தியப்படுமா என்பதுதான் பிரச்சினை.
பல்லின மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் எந்த ஒரு பொருளாதார அமைப்பும் இனவாதப் பின்னணியில் வெற்றிபெற மாட்டாது என்பதை ஜனாதிபதி முதலில் உணரவேண்டும். நாட்டு மக்களுள் மூன்றிலொரு பகுதியினரை ஒதுக்கிவிட்டு பொருளாதார வளர்ச்சி காணலாம் என்று நினைப்பது ஒரு பகற்கனவு. ஆனால் இனவாதத்தையும் இனவாதிகளையும் வளர்க்கின்ற ஓர் அரசியல் சித்தாந்தத்தை அரசியல் யாப்பிலே வைத்துக்கொண்டு இலங்கையைச் சொர்க்க பூமியாக மாற்றலாம் என்று நினைக்கிறார் இந்த ஜனாதிபதி. அந்த யாப்பினைக் கிழித்தெறிந்துவிட்டு எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற பாணியில் ஒரு புதிய யாப்பினை உருவாக்க இவரால் முடியுமா? அந்த முயற்சியில் இறங்கிய மறுகணமே இவர் பதவியிலிருந்து நீக்கப்படுவது நிச்சயம். இன்றைய நாடாளுமன்றம் அந்த முயற்சிக்கு ஒரு பெரும் தடை. இதனை உணர்ந்தவர்களே காலிமுகத்திடலின் சரித்திர நாயகர்கள். அதனாலேதான் “கோத்தாவே போ” என்றதுடன் “225 வேண்டாம்” என்றும் கோரினர்.
காலிமுகத்திடல் இளஞ்சந்ததி தரித்திரம் நிறைந்த இன்றைய இலங்கையில் புதிய சரித்திரம் ஒன்றைப் படைக்க முற்பட்ட முற்போக்குப் படை. அவர்களின் போராட்டத்தின் இதய நாடியே இனவாத இலங்கையை ஒழித்து இலங்கையின் எல்லா இனத்தினரும் மக்களும் சமவுரிமைபெற்ற பிரஜைகள் என்ற கொள்கை. ஏழு தசாப்தங்களின் பின்னர் சிங்கள பௌத்த மக்களிடையேயிருந்து எழுந்த முதற்குரல் அவர்களின் குரல். காலிமுகத்திடலைக் கலைத்ததனாலோ அவ்விளைஞர்கள் தாமாகக் கலைந்ததனாலோ அந்தக் குரல் அடங்கவில்லை. அடிப்படை மாற்றம் தேவை என்று அவர்கள் கேட்பதன் அந்தரங்கம் இதுவே. அந்த மாற்றம் ஏற்படும்வரை முதலாம் உலக நாடாக இலங்கை விளங்குமென நினைப்பது கனவாகவே முடியும். இந்தச் சரித்திர நாயகர்களின் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வது மக்கள் விடுதலை முன்னணி போன்ற முற்போக்குவாதிகளின் தலையாய கடன். அவர்களின் பின்னே அணிதிரளாமல் பொதுவாக எல்லா மக்களுக்கும் குறிப்பாகச் சிறுபான்மை மக்களுக்கும் விடிவில்லை.– Vidivelli