ஜனாஸாக்களை எரித்தமையால் எம்மை முஸ்லிம் நாடுகள் பகைத்துக் கொண்டன
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொரோனா தொற்று நோய் பரவிய காலத்தில் அந்நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்த நிலையில் அதையும் மீறி அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அடக்கம் செய்வதற்கு தடைவிதித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. அரசாங்கம் அடக்கம் செய்வதற்கு தடைவிதித்ததால் முஸ்லிம் நாடுகள் எம்மைப் பகைத்துக் கொண்டன. எமது நாடு பலத்த பாதிப்புக்குள்ளாகியது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
கட்டார் அரசாங்கம் இந்நாட்டு மாணவர்களுக்கு உதவி வழங்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்டிருந்த நிதியம், கோத்தாபய ராஜபக்ஷவினால் தடை செய்யப்பட்டது. இதனால் கட்டார் நாட்டின் உறவையும் நாம் இல்லாமற் செய்து கொண்டோம்.எரிபொருள் நெருக்கடிக்கு நாம் உள்ளாகியபோது அந்நாட்டுக்கு எரிபொருள்கோரி எமது தூதுக்குழுவினர் அங்கு சென்றபோது அவர்கள் விடுத்த கோரிக்கையின் பின்பே அந்நிதியத்தின்மீதான தடை எமது நாட்டினால் நீக்கப்பட்டது.
கடந்த ஆட்சியில் பெரும்பாலான வெளிநாடுகள் எம்மிலிருந்தும் தூரமாகின. தமிழ் புலம் பெயர்ந்தோரை இந்நாட்டில் முதலீடு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அறைகூவல் விடுத்த போதும் அவர்களிடமிருந்து எமது நாட்டுக்கு ஒரு சதமேனும் முதலீடு செய்யப்படவில்லை. கோத்தாபய ராஜபக்ஷ தனது பதவிக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை. இவ்வாறான நிலைமை எமது நாட்டினை ஒரு நெருக்கடி நிலைக்குள்ளாக்கின என்றார்.–Vidivelli