ஐக்கிய நாடுகள் சபையின் 2012 ஆம் ஆண்டு விதிமுறைகள் எண் 01 இன் பிரகாரம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் 577 நபர்கள் மற்றும் 18 அமைப்புகள் 2021 ஆம் ஆண்டில் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் இவர்களில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவியளித்தல் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டாத 316 நபர்கள் மற்றும் 6 அமைப்புகளை பட்டியலிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் இந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.
தடைகள் நீக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தனி நபர்களின் பட்டியல் ஒருபுறமிருக்க, இக் கறுப்புப் பட்டியலில் புதிதாக பல முஸ்லிம் தனி நபர்களும் அமைப்புகளும் உள்வாங்கப்பட்டுள்ளமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பயங்கரவாத செயல்களுடன் சம்பந்தம் உள்ளதாக புலனாய்வுத் தரப்புகளாலும் சட்டமா அதிபர் திணைக்களத்தினாலும் இதுவரை உறுதிப்படுத்தப்படாத பலரும் கூட இப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீர் ஹஜ்ஜுல் அக்பர், கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீம் உட்பட ஏலவே கைது செய்யப்பட்டு இரு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டு பிணையிலும் முற்றாகவும் விடுவிக்கப்பட்ட பலர் கூட இப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி இவர்கள் அனைவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இவர்கள் மீதான பாதுகாப்புத் தரப்பின் கெடுபிடிகளும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்து, விடுவிக்கப்பட்டு மீண்டும் சமூகத்துடன் இணைந்து தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ள சந்தர்ப்பத்தில், இவ்வாறு கறுப்புப் பட்டியலில் சேர்த்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டமையானது அவர்களை மேலும் அச்சத்திற்குள் தள்ளியுள்ளது.
வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், புலனாய்வு பிரிவுகள், சட்ட அமுலாக்கல் பிரிவினர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு அடங்கிய குழுவொன்றினூடாக பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் மேற்குறிப்பிடப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டு, கிடைத்த ஆதாரங்களுக்கமைய பாதுகாப்பு அமைச்சில் நடாத்தப்பட்ட பல சுற்று கலந்துரையாடல்களுக்குப் பின், கறுப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்பட மற்றும் சேர்க்கப்பட வேண்டிய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது. உண்மையில் இந்தக் கூற்று நகைப்புக்கிடமானதாகும்.
கவிஞர் அஹ்னாப் ஜஸீம் ஒரு விவசாயியின் மகன். இன்று அந்தக் குடும்பத்தினர் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கே எந்தவித வருமான வழிகளுமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தின் மூத்த பிள்ளையான அஹ்னாப், ஒரு தொழிலைக் கூட செய்ய முடியாத நிலையில் உள்ளார். இவ்வாறான பின்னணியில் அவர் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதாக பாதுகாப்பு அமைச்சு கூறுவது எந்தப் புலனாய்வுத்துறையினரின் கண்டுபிடிப்பு என்பதுதான் புரியாத புதிராகவுள்ளது. மாதமிருமுறை அவர் புத்தளத்திலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அலுவலகத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் என்பது அஹ்னாபுக்கான பிணை நிபந்தனையாகும். அதற்கான பயணச் செலவைக்கூட ஈடுசெய்ய முடியாத நிலையில் அவர் உள்ளார் என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் நன்கறிவர். இந்நிலையில் அவரை பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதாக பட்டியல்படுத்தியுள்ளமை கவலைக்குரியதாகும்.
அஹ்னாப் ஜஸீம் அநியாயமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை விடுவிக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய மனித உரிமை நிறுவனங்கள் பலவும் பல தடவைகள் வலியுறுத்தியிருந்தன. துரதிஸ்டவசமாக இன்று அதே ஐ.நா. விதிமுறையைப் பயன்படுத்தி அஹ்னாப் மீண்டும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவராக பட்டியலிடப்பட்டுள்ளார். அஹ்னாப் போன்றே பலர் இப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்த தடைப்பட்டியலில் உள்ளடக்கபட்டுள்ளவர்கள் இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும். இவர்களுக்கு முஸ்லிம் சட்டத்தரணிகள் உதவிகளை வழங்க வேண்டும். தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளும் தமது சட்டப் போராட்டத்தை தொடர வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிவதை விடுத்து, தொடர்ந்தும் இவ்வாறு அப்பாவி முஸ்லிம்களை இலக்கு வைத்து அவர்களை பயங்கரவாதிகளாக சித்திரித்து அரசியல் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பிலோ அல்லது தேசிய அரசாங்கம் தொடர்பிலோ பேச்சு நடத்தும் முஸ்லிம் கட்சிகள் இந்த விடயம் தொடர்பில் தீவிர கரிசனை காட்ட வேண்டும். தமது பிரதான நிபந்தனைகளில் ஒன்றாக இந்த விவகாரத்தை உள்வாங்க வேண்டும்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட 316 தனி நபர்களினதும் 6 அமைப்புகளினதும் தடைகள் நீக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோன்று முஸ்லிம் அரசியல் தரப்புகளும் தமது சமூகம் சார்ந்தவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அநீதியான தடையைத் தளர்த்துவதற்கு முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli