ஆங்கிலத்தில்: புத்திக சமரவீர
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவின் கீழ் அவரால் நிறுவப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி சமர்ப்பித்துள்ள அறிக்கையில் உள்ளடக்கியுள்ள சிபாரிசுகளை கவனத்திற் கொள்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய, கவனத்திற்கொள்ளப்படவேண்டிய பலவிடயங்கள் உள்ளன. இந்நிலைமையை கவனத்திற்கொண்டு பல கட்சிகள் “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் இறுதி அறிக்கையை அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
நாடு இன்று இக்கட்டான நிலைமையில் பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளைவிட இந்தப்பிரச்சினைகள் முக்கியமானவை. எனவே நாட்டின் ஏனைய பிரச்சினைகளுக்கே முதலிடம் வழங்க வேண்டும். அதனால் ஜனாதிபதி செயலணியின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்படக்கூடாது என பல தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் நெருக்கடிகள் உருவாகியுள்ள சூழ்நிலையில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை நிறுவுவது மிகவும் அவசியமாகவுள்ளது. சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்கள் சர்வதேச நாணய நிதியம் (IMF) என்பவற்றின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வகட்சி அரசாங்கம் அமைவது இன்றியமையாததாக உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அநேகமான அரசியல் கட்சிகள் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்போர் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கே விரும்புகின்றனர்.
இந்நிலையில் குறித்த அரசியல் கட்சிகள் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி உட்பட ஏனைய குழுக்களில் ஆர்வமற்றவர்களாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் சிபாரிசுகளை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானித்துள்ளதா? என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பான அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷவிடம் வினவியபோது “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் அறிக்கை இதுவரை தனது அமைச்சுக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
அத்தோடு ஜனாதிபதியின் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பில் வினவியபோது குறிப்பிட்ட அறிக்கை தொடர்பில் ஜனாதிபதியோ, ஜனாதிபதி செயலகமோ தமக்கு இதுவரை (கடந்த 15 ஆம் திகதி) அறிவிக்கவில்லை எனத் தெரிவித்தது. அறிக்கையில் உள்ளடங்கியுள்ள சிபாரிசுகள் தொடர்பில் தாம் அறியவில்லை என்றும் அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே வேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சிகள் ஞானசார தேரர் தலைமையிலான “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை தொடர்பில் எதிர்மறையான கருத்துகளையே வெளியிட்டுள்ளன. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அறிக்கை கிழித்தெறியப்படவேண்டுமென தெரிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உதவித் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவை தொடர்புகொண்டு இது தொடர்பில் நாம் வினவியபோது,
“ஒரே நாடு ஒரே சட்டம்” இந்நாட்டின் அமுல்படுத்தப்படவேண்டிய தேவை உள்ளது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி ஆரம்ப நடவடிக்கையை முன்னெடுத்தார். செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார். இந்நியமனம் கண்டிக்கத்தக்கதாகும். இவ்வாறான ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கக்கூடாது என்றார்.
எமது நாட்டில் வெவ்வேறான நீதி முறைமை இருக்கக்கூடாது என்பதை நாமனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். ஒவ்வோர் இனத்துக்கும் தனிப்பட்ட நீதிமுறைமைகள் இருக்கக்கூடாது. நாட்டில் பொதுவான ஒரே சட்டமே அமுல்படுத்தப்படவேண்டும். அதனால்“ஒரே நாடு ஒரே சட்டம்” எண்ணிக்கருவினை நாம் எதிர்க்கவில்லை. என்றாலும் ஞானசாரதேரரின் தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். இச்செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்ட ஞானசார தேரர் சிறைவாசம் சென்றவர். இவர் மீது அநேகர் அதிருப்தி கொண்டுள்ளனர். இவரை அநேகர் விரும்புவதில்லை. அத்தோடு இவர் தீவிரவாத கருத்துக்களைக் கொண்டவர். இவரது தலைமையிலான செயலணி தயாரித்த அறிக்கையை அமுல்படுத்துவதை அங்கீகரிப்பதை பல கட்சிகள் விரும்பவில்லை.
இதனால் குறிப்பிட்ட ஜனாதிபதி செயலணியின் அறிக்கை கேள்விக்குறியாகியுள்ளது. இந்த அறிக்கை மீள்பரிசீலனை செய்யப்படவேண்டும். இதற்கென ஒரு குழுவொன்றினை நியமிக்கலாம் அல்லது சட்டவாக்கத்துறையில் நிபுணத்துவம் கொண்டோர் “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான அறிக்கையை ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளலாம் என்று பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.
“ஒரே நாடு ஒரே சட்டம்”தொடர்பாக முன்னாள் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஜனாபதி செயலணியொன்றினை நியமித்தமை தவறான தீர்மானமாகும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் ஐந்து சட்ட முறைமைகள் உள்ளன. (Legal System) அவை. ஆங்கிலேயர் சட்டம், ரோம டச்சுச் சட்டம்,தேச வழமை சட்டம்,முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் கண்டியர் சட்டம் என்பனவாகும். இச்சட்டங்களை சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் கொள்கைகளுக்காக இல்லாமற்செய்வது ஏற்புடையதாகாது.
நாட்டில் ஐந்து சட்டமுறைமைகள் உள்ளன. இப்படியிருக்கையில் சிங்கள பௌத்த பெரும்பான்மைகள் இந்தச் சட்டமுறைமைகளை இல்லாமற் செய்வதற்கு விரும்புகிறார்கள் என ஒருவரால் எப்படிக்கூறமுடியும்? இது சிங்கள பௌத்த நாடல்ல, இந்நாட்டில் மொழி ரீதியில் இரு தேசிய மக்கள் வாழ்கிறார்கள். தமிழ் மக்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு, கிழக்கில் வாழ்கிறார்கள். எனவே “ஒரே நாடு ஒரே சட்டம்” என்று கருத்தாடல் செய்வது தவறு என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. நிராகரிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்குமா? என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வினவியபோது ‘வேறு முக்கியமான தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் எங்களுக்குள்ளன. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட பல பிரச்சினைகள் உள்ளன. இந்தப்பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இந்த விடயம் எங்களுக்குத் தேவையற்றது. வடக்கு கிழக்கும் ஒரே நாட்டின் பகுதியொன்றல்ல.
இதேவேளை உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில நிபந்தனைகளை ஜனாதிபதியிடம் முன் வைத்திருக்கிறது. உடனடியாக அவசரகால நிலைமையை வாபஸ் பெற்றுக் கொள்ளல், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை நிறுத்துதல், முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நியமித்த ஜனாதிபதி செயலணியின் அறிக்கையை நிராகரித்தல், செயலணியை வாபஸ் பெற்றுக் கொள்ளல் உட்பட பல நிபந்தனைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு நிபந்தனைகள் அடங்கிய கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளது.
‘முன்னாள் ஜனாதிபதி கோத்தாபயவினால் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு தீவிரவாத கருத்துக்களைக்கொண்ட மதகுருவே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாட்டின் சட்டத்தை மதியாதவர். அவரால் சிறுபான்மையினம் இலக்கு வைக்கப்பட்டது. முஸ்லிம் தனியார் சட்டம் உட்பட முஸ்லிம்களின் கலாசாரத்தை இவர் சவாலுக்குட்படுத்தியவர் முஸ்லிம்களின் மத்தியில் செல்வாக்கிழந்தவர் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli