- கைதாகி நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டோரும் பட்டியலில்;
ஜமாஅதே இஸ்லாமி மாணவர் இயக்கம், சேவ் த பேர்ள் அமைப்புக்களும் இணைப்பு - சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வு
(எம்.எப்.எம்.பஸீர்)
அரசு, 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் 2022 ஆகஸ்ட் முதலாம் திகதியிடப்பட்ட 2291/02 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானி ஊடாக வெளியிட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட தனி நபர்கள், அமைப்புக்களின் பெயர் விபரங்கள் அடங்கிய கறுப்புப் பட்டியல் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
ஆகஸ்ட் முதலாம் திகதியிடப்பட்ட 2291/02 ஆம் இலக்க வர்த்தமானி பிரகாரம் 55 முஸ்லிம் நபர்களும், 3 அமைப்புக்களும் தடை செய்யப்பட்டோர் குறித்தான கறுப்புப் பட்டியலில் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.
தாருல் அதர், இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் , சேவ் த பேர்ள் ஆகிய அமைப்புக்களே இவ்வாறு தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அமைப்புக்களாகும். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தனி நபர்கள் பட்டியலில், தனது கைது நடவடிக்கை காரணமாக சர்வதேச அளவில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கேள்விகளை தொடுக்கச் செய்த கவிஞரும் இளம் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீமின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளமை மீண்டும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இதனைவிட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்டு, சாட்சிகள் இல்லாமையால் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்ட சிலரும், சட்ட மா அதிபரின் ஒப்புதலுடன் சாட்சிகளில் காணப்படும் பலவீனம் காரணமாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பலரும், வழக்கு நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு கூட சந்தர்ப்பம் அளிக்கப்படாத பலரும் இந்த கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எந்த நியாயமான விசாரணைகள் மற்றும் காரணிகளும் இன்றி பலர் இவ்வாறு குறித்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமையால், குறித்த வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்துவது தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலர் ஆராய்ந்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை அளிப்பதை தடுப்பது குறித்தான நோக்கத்துக்காக, 2012 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க ஐ. நா. கட்டளைகளின் 4 (7) ஆம் விதிவிதானத்துக்கு அமைய, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்கள் பட்டியலிடப்படுகின்றனர். இதனை இலங்கை 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கின்றது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜி. எல்.பீரிஸ் வெளியிட்ட 1758/ 19 எனும் வர்த்தமானி ஊடாக இதற்கான அடித்தளம் இடப்பட்டது.
பின்னர், கடந்த 2014 மார்ச் 21 ஆம் திகதி, பயங்கரவாத நடவடிக்கை தொடர்பிலான முதலாவது கறுப்புப் பட்டியல் அடங்கிய வர்த்தமானி 1854/41 எனும் இலக்கத்தின் கீழ் அப்போதைய பாதுகாப்பு செயலரான தப்பியோடிய ஜனாதிபதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டிருந்தது. அதில் 424 தனி நபர்களும் 16 அமைப்புக்களும் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தனர். அது முதல் இறுதியாக கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி வரை அவ்வாறான 8 தடைப் பட்டியல்கள் அடங்கிய வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டு 1941/44 எனும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன் , 2016 ஆம் ஆண்டு 1992/25 எனும் வர்த்தமானி வெளியிடப்பட்டு தடைச் செய்யப்பட்டோரின் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் 2018 ஆம் ஆண்டு 2016/18 ஆம் இலக்க வர்த்தமானி ஊடாக அப்பட்டியல் வெளியிடப்பட்டது.
இவ்வாறான நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இரு வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக அப்பட்டியல் வெளியிடப்பட்டன. 2019 மே 23 ஆம் திகதி 2124/32 எனும் இலக்கத்தின் கீழும் 2019 செப்டம்பர் 9 ஆம் திகதி 2140/ 16 எனும் இலக்கத்தின் கீழும் இரு வர்த்தமானிகள் வெளியிடப்பட்டன.
இதனைவிட கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி 2216/37 எனும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. அதன் பின்னரே கடந்த முதலாம் திகதி 2291/02 எனும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தற்போதைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக 2021 பெப்ரவரி 28 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம், 577 தனி நபர்களும் 18 அமைப்புக்களும் ஐ. நா. சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன. எனினும் அப்பட்டியலில் இருந்த 316 தனி நபர்கள் ( ஒரே பெயர் உள்ளடக்கப்பட்டிருந்த 7 பேர் உள்ளடங்கலாக), ஆறு அமைப்புக்கள் தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை , உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு , தமிழ் ஈழ மக்கள் சம்மேளனம், கனேடிய தமிழர் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய 6 தமிழ் அமைப்புக்கள் மீதான தடையே தற்போது நீக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவினால் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கருத்தியலை பரப்பும் வகையில் செயற்பட்டுவந்த அவ்வியக்கத்தின் கட்டமைப்பையொத்த தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் கூட்டிணைவுக்குழு, உலகத்தமிழர் இயக்கம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத்தமிழர் உதவி நிதியம், தலைமைக்காரியாலயக்குழு, தேசிய தௌஹீத் ஜமா-அத், ஜமா அத்தே மில் அத்தே இப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி, தாருல் அதர் அல்லது ஜாமியுல் அதர் பள்ளிவாசல், தேசிய கனேடியத்தமிழர் பேரவை, தமிழ் இளைஞர் அமைப்பு, இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம், சேவ் த பேர்ள் ஆகிய 15 அமைப்புக்களே தற்போது தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றன.
எவ்வாறாயினும் ஏற்கனவே இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து அந்த இயக்கம் உயர் நீதிமன்றில் வழக்குத் தொடுத்துள்ளது. குறித்த வழக்கு நிலுவையில் உள்ள பின்னணியில், இடைக்கால தடை உத்தரவொன்றும் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ள நிலையில், அந்த இயக்கம் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலரால் விடுக்கப்பட்டுள்ள வர்த்தமானி எந்தளவு தூரம் நியாயமானது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அவ்வியக்கம் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
அத்துடன் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் புதிதாக உள்ளீர்க்கப்பட்ட, வறிய மாணவர்களுக்கு கல்வியை வழங்கிய சேவ்த பேர்ள் அமைப்பு எதற்காக அப்பட்டியலில் சேர்க்கப்பட்டது என்பது குறித்து கேள்வி எழுப்பட்டுள்ளது.
‘சேவ் த பேர்ள் ‘ பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இதுவரை எங்கும் நிரூபிக்கப்படாத நிலையில் அந்த அமைப்பு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டமை ஆச்சரியமானது என இது குறித்து விடிவெள்ளியிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர் கூறினார்.
சேவ்த பேர்ள் அமைப்பு, கடந்த 2020 ஆம் ஆண்டின் பின்னர், கட்டார் அறக்கட்டளையிடம் இருந்து உதவிகளைப் பெற்றிருந்தமையை மையப்படுத்தி பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டது. அவ்வமைப்பின் முன்னணி செயற்பாட்டாளராக திகழ்ந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் கட்டார் அறக்கட்டளையை பயங்கரவாத தடைப் பட்டியலில் இருந்து இலங்கை நீக்குவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர கட்டாரில் வைத்து அண்மையில் அறிவித்திருந்தார். அவ்வாறான பின்னணியில் கட்டார் அறக்கட்டளையிடம் இருந்து உதவிகளைப் பெற்றமையை மையப்படுத்தி பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சேவ்த பேர்ளை புதிதாக தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் இணைத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைவிட பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து கைது செய்யப்பட்டு பின்னர் சாட்சியம் இல்லாமையால் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவர்கள் உட்பட பலர் இந்த கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ‘நவரசம்’ கவிதை தொகுப்பை எழுதியதை வைத்து கைது செய்யப்பட்டு, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக சாட்சியம் வழங்க வற்புறுத்தப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜஸீமும் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது கைது சம்பவமே முழு உலகிலும் பேசப்பட்ட, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான கைது என பிரகடனம் செய்யப்பட்டுள்ள பின்னணியில் இலங்கை அரசு மீண்டும் ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டுள்ளதாக அஹ்னாப் ஜஸீமின் உரிமைகள் குறித்து பேசும் அவரது சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர குறிப்பிட்டார்.
‘ஒரு நபர் அல்லது அமைப்பு இவ்வாறு பட்டியலிடப்பட்டவுடன், அவர் அல்லது அந்த குழு அல்லது நிறுவனத்திற்கு சொந்தமான அல்லது வைத்திருக்கும் அனைத்து நிதிகள், பிற நிதி சொத்துக்கள் மற்றும் பொருளாதார ஆதாரங்கள் உரிய கட்டளை மூலம் தகுதிவாய்ந்த நிறுவங்களால் உடனடியாக முடக்கப்படும்.
16 மே 2020 அன்று இலங்கை அரசாங்கத்தால் அரசியலமைப்பிற்கு முரணாக கைது செய்யப்பட்டதில் இருந்து அஹ்னப் வேலையில்லாமல் இருக்கிறார். அவர் ஏழை விவசாயியின் மூத்த மகன் ஆவார். உழைக்கும் மக்களும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பவர்களும் இந்த நிறைவேற்றுச் சட்டத்தைக் கண்டித்து அவரைப் பட்டியலில் இருந்து நீக்கக் கோர வேண்டும்.’ என சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர குறிப்பிட்டார்.
இந் நிலையில் இந்த கறுப்புப் பட்டியல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஜெனரல் கமல் குணரத்ன விஷேட அறிக்கை ஒன்றினை விடுத்து கருத்து வெளியிட்டார்.
‘2012 ஆம் ஆண்டு முதலாம் இலக்க ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டல் முறைமைகளின் கீழ் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குதல் தொடர்பில் கடந்த ஆண்டு 577 நபர்கள் மற்றும் 18 அமைப்புக்கள் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், புலனாய்வுப்பிரிவு , சட்ட அமுலாக்க நிறுவனங்கள் மற்றும் மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு உள்ளிட்ட நிறுவனங்களை அடங்கிய குழுவின் ஊடாக மேற்குறிப்பிடப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்கள் கடந்த சில ஆண்டுகளுக்குள் பயங்கரவாதத்திற்காக நிதி உதவிகளை வழங்கியமை தொடர்பில் ஆராய்ந்துள்ளன.
அதற்கமைய பெற்றுக் கொள்ளப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நீண்ட கால ஆய்வு மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பல சுற்று கலந்துரையாடல்களுக்குப் பிறகு, தடைப்பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டிய மற்றும் சேர்க்கப்பட வேண்டிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
அதற்கமைய மேற்குறிப்பிடப்பட்ட 577 நபர்கள் மற்றும் 18 அமைப்புக்களில் பயங்கரவாதத்திற்காக நிதியுதவிகளை வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபாடு காண்பிக்காத 316 நபர்கள் மற்றும் 6 அமைப்புக்களை தடைப்பட்டியலிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த காலப்பகுதியில் பயங்கரவாதத்திற்கு நிதி மற்றும் உதவியளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக அண்மையில் இனங்காணப்பட்ட 55 தனிநபர்கள் மற்றும் 3 அமைப்புக்களை தடைப்பட்டியலில் உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் இந்த பரிந்துரை கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடம் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 316 நபர்கள் மற்றும் 15 அமைப்புக்களை 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இல 1 , 229/ 02 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் நபர்கள் மற்றும் அமைப்புகளை தடைப்பட்டியலில் உள்ளடக்கல் மற்றும் அகற்றல் நடைமுறையானது, அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் நீண்ட கால அவதானிப்பு மற்றும் கவனமாக தொடர் ஆய்வு நடவடிக்கைகளின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வருவது வழமையாகும்.’ என அவர் குறிப்பிட்டார்.
இதனைவிட பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து முத்திரைக் குத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படாத போதும், அவர் இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் விடிவெள்ளியிடம் பின்வருமாறு கருத்துரைத்தார்.
‘பாதுகாப்பு அமைச்சின் செயலர் மிகக் கவனமாக ஆராய்ந்தே பட்டியல் தயாரிக்கப்பட்டதாக கூறினாலும், மிகக் கவனமாக அது ஆராயப்பட்டதாக தெரியவில்லை.
ஏனெனில், 2019 ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட பலர், 2019, 2021 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறான பலர், அவர்களுக்கு பிணை கிடைக்கப் பெற்ற பின்னரும், வழக்கிலிருந்து விடுதலையான பின்னரும் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது பாரிய முரண்பாட்டு நிலையாகும்.’ என தெரிவித்தார்.
இந்த வர்த்தமானியில் தடைப் பட்டியலில் தனது சேவை பெறுநர்கள் பலர் உள்ளடங்கியுள்ளதாக விடிவெள்ளியிடம் பேசிய சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்த நிலையில், வர்த்தமானி அறிவித்தலில் பெயரிடப்பட்டுள்ள பலர் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கக் கூடாதவர்கள் என்பதே தனது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டார்.
‘இந்த வர்த்தமானி சர்ச்சைக்குரியது. அதில் பட்டியல் இடப்பட்டுள்ள நபர்களுக்கு, அவர்கள் சார்பிலான விளக்கங்களை முன் வைக்க எந்த சந்தர்ப்பமும் வழங்கப்படாமல், அவர்களது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது நியாயமற்றது. எவரேனும் தமது பெயர்கள் அநியாயமாக குறித்த வர்த்தமானியில் தடைப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கருதுவாராயின் அவர்கள் நிச்சயம் சட்ட நடவடிக்கைகளுக்கு செல்லலாம்.’ என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் குறிப்பிட்டார். – Vidivelli