யுத்தகாலம் முதல் கிழக்கு மாகாண மக்களுக்கு எதிராக பல சமூக அநீதிகள் இடம்பெற்றுள்ளன
நிபுணத்துவ குழு சுட்டிக்காட்டு; ஐ.நா. மனித உரிமை பேரவைக்கும் அறிக்கை அனுப்பப்படும் என்கிறார் ஆளுநர்
(றிப்தி அலி)
யுத்த காலம் முதல் இன்று வரை கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இடம்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சமூக அநீதிகள் தொடர்பில் ஆராய்ந்த நிபுணத்துவ குழுவின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
இந்நிலையில் பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளதுடன் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவைக்கும் அனுப்பிவைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யுத்த காலம் முதல் இன்று வரை கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இடம்பெற்றுள்ளமை இந்த அறிக்கையின் ஊடாக தெரிய வந்துள்ளது எனவும் ஆளுநர் கூறினார்.
இதனால், குறித்த அறிக்கையின் பரிந்துரைகளை முடிந்தளவு அவசரமாக அமுல்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் உறுதியளித்தார்.
இந்த அறிக்கையினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (15) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.- Vidivelli