யு.எல்.முஸம்மில்
குருநாகல் நிருபர்
குருநாகல் நீர்கொழும்பு வீதியில், குருநாகல் நகரிலிருந்து 30 ஆவது மைக்கல்லில் அமைந்துள்ள பாரம்பரிய கிராமமே தம்பதெனிய. 150 வருடங்கள் பழைமை வாய்ந்த பள்ளிவாசலை அடியொற்றியதாக இங்கு சிங்களவர்களுடன் ஒன்றறக் கலந்தே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்கிராமத்துடன் தொடர்புபட்ட தகவல் ஒன்று கடந்த ஒரு சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுவதைக் காண்கிறோம். அதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த நிலையில் மரணித்த முஸ்லிம் அல்லாத ஒருவரின் ஜனாஸா, இஸ்லாமிய சமய முறைப்படி, அவரது குடும்பத்தினரின் பங்குபற்றலுடன் அடக்கம் செய்யப்பட்டது என்பதே அந்த பரபரப்பான தகவலாகும். அதாவது, மரணித்தவர் ஒரு சிங்களவர் என்றும் அவர் இதுவரை காலமும் வெளியில் கூறாது இஸ்லாத்தைப் பின்பற்றி வந்துள்ளதாகவும் மரணித்தால் தன்னை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்திருந்ததாகவும் குறித்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவர் அல்குர்ஆனை முழுமையாக மனனமிட்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந் நிலையில்தான் இத் தகவலின் உண்மைத்தன்மை என்ன என்று பலரும் ‘விடிவெள்ளி’யைத் தொடர்பு கொண்டு கேட்டிருந்தனர். இந் நிலையில் இக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் தம்பதெனிய, மஸ்ஜிதுல் ஹைரியா ஜும்மா பள்ளி நிர்வாக சபை உறுப்பினர் எம்.பி.றமீஸ் ஆகியோரைத் தொடர்பு கொண்டு நாம் பெற்றுக் கொண்ட தகவல்களை இங்கு தருகிறோம்.
இச் சம்பவத்தில் குறிப்பிடப்பட்ட உயிரிழந்தவரது இயற்பெயர் சிரில் ஜயவர்தன என்பதாகும். பெரும்பான்மை இன சகோதரரான இவர் மாரவில பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.
கல்விக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த சமயம், அங்கு தன்னுடன் கல்வி பயின்ற உடுகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஹிதாயா பேகம் என்ற முஸ்லிம் ஆசிரியையுடன் நட்பு ஏற்பட்டு அவரையே திருமணம் செய்துள்ளார். இதன்போதே அவர் இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை ஜவாத் என மாற்றிக் கொண்டுள்ளார். பின்னர் பிரதேசத்தில் ஜவாத் சேர் என்றே எல்லோராலும் இவர் அறியப்பட்டுள்ளார். இவர்களுக்கு பிள்ளைகள் இருவரும் உள்ளனர்.
ஜவாத் ஆசிரியர் இஸ்லாத்தைத் தழுவியது முதல் இறுதி வரை இஸ்லாமிய விழுமியங்களை முழுமையாகக் கடைப்பிடித்து வந்துள்ளார். அல்குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஏனைய இஸ்லாமிய நூல்களைக் கற்றறிந்துள்ளார். எனினும் இவர் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர் என பரவிய தகவல்களில் உண்மையில்லை.
சுமார் 20 வருடங்களுக்கு மேல் தம்பதெனியவில் வசித்த இவர் பல பாடசாலைகளில் ஆசிரியராக இருந்துள்ளதுடன் பத்தரமுல்லை கல்வித் திணைக்களத்திலும் அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.
இறுதியாக தம்பதெனிய சிங்கள பாடசாலையில் அதிபராக கடமையாற்றி அங்கிருந்தே ஓய்வும் பெற்றுள்ளார். தம்பதெனிய பள்ளி வாயலுக்கு இரு மருங்கிலும் முஸ்லிம் பாடசாலையும் சிங்களப்பாடசாலையும் அமைந்துள்ளன. அதில் சிங்கள பாடசாலை அதிபராக ஜவாத் கடமையாற்றியுள்ளதுடன் முஸ்லிம் பாடசாலையில் அதிபராக அவரது மனைவி கடமையாற்றியுள்ளார். பள்ளியில் அதான் சொல்லக் கேட்டால் கடமை நேரத்திலும் கூட இவர் பள்ளிக்கு தொழச் சென்று விடுவாராம். அத்தோடு தம்பதெனிய பள்ளிவாசல் நிர்வாக சபையிலும் சில காலம் உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
இருந்தபோதிலும், பிரதேச மக்கள் சிலருடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் காரணமாக சிறிது காலம் சமூகத்தை விட்டும் ஒதுங்கி வாழ்ந்துள்ளார். பள்ளிவாசல் நிர்வாகத்திலிருந்தும் விலகியுள்ளார். எனினும் பள்ளிவாசலுக்கு வந்து அமல்களில் ஈடுபடுவதை அவர் கைவிடவில்லை.
இவரது மகன் ஒருவரும் பள்ளிவாசலுடன் நெருக்கமாக இருந்தபோதிலும், சில சம்பவங்களால் பின்னாளில் அவரும் பள்ளியை விட்டுத் தூரமாகியுள்ளார். வங்கி அதிகாரியான இவர் பெரும்பான்மை இன பெண்ணொருவரையே திருமணம் செய்துள்ளார். எனினும் இவரும் அவ்வப்போது பள்ளிவாசலுக்கு வந்துபோவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஜவாத் ஆசிரியரின் மகளும் அவரது தந்தையின் குடும்பத்தைச் சேர்ந்த மாற்றுமத ஒருவரையே திருமணம் செய்து நிட்டம்புவ பிரதேசத்தின் வெயாங்கொட வீதியில் வசித்து வருகிறார்.
ஜவாத் ஆசிரியர் தனது இறுதி காலத்தில் தனது மகனின் வீட்டில் இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் வதுபிடிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே கடந்த சனிக்கிழமை மரணித்துள்ளார். அன்றையதினம் இரவே அவரது ஜனாஸா தம்பதெனியவிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவரது உறவினர்கள், இவரது மனைவியின் உறவினர்கள் கல்வித்துறைசார் நண்பர்கள், ஊரவர்கள் என பலரும் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.
இவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சார்பாக ஓரிருவர் இரங்கல் உறையாற்ற வேண்டுமென வேண்டிக் கொண்டனர். அதற்கான பூரண அனுமதி வழங்கப்பட்டது. பலரும் ஜவாத் ஆசிரியரின் சேவைகள் மற்றும் நற்செயல்கள் குறித்து சிலாகித்துப் பேசினர். எனினும் பௌத்த மதம் சார்ந்த அனுஷ்டானங்களோ வழிபாடுகளோ எதுவும் நடைபெறவில்லை. அத்துடன் பௌத்த மதகுருக்களும் அங்கு சமுகமளித்திருக்கவில்லை.
ஜனாஸாவுக்காக நிறைவேற்றப்பட்ட அனைத்து கடமைகளிலும் பெரும்பான்மை இன சகோதரர்கள் அனைவரும் விருப்புடன் பங்கேற்றனர். பள்ளிவாசலினுள் வந்து தொழுகையையும் பார்வையிட்டனர். முஸ்லிம்கள் ஜனாஸாவை அடக்கம் செய்யும் எளிமையான முறைகள் குறித்து தாம் இன்றே அறிந்து கொண்டதாக குறிப்பிட்டு அவை குறித்து சிலாகித்துப் பேசினர். எனினும் அங்கு குழுமியிருந்த பெரும்பான்மை இன சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்த தெளிவுகளை சிங்கள மொழியில் வழங்குவதற்கு அவ்விடத்தில் பொருத்தமான மௌலவி ஒருவர் இல்லாமல்போனமை பெருங் குறைபாடாகும்.
ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனேக முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்ட போதிலும் தம்பதெனியவில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லையென்றும் இப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வளவு ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் ஏனைய சமூகங்களுடன் ஒன்றறக் கலந்து வாழும் இந்த ஊர் தொடர்பில் தேவையற்ற பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வீண் பிரச்சினைகளை உண்டு பண்ண வேண்டாமென்றும் இம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.- Vidivelli