நாட்டில் மாற்றம் ஒன்றைக் கோரி நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 150 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் பலர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கப்பால் சுமார் பத்திற்கும் மேற்பட்டவர்கள் புலனாய்வுப் பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சிலர் பின்னர் கைது செய்யப்பட்டுமுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பலர் மீது அரச கட்டிடங்களுக்குள் அத்துமீறிப் பிரவேசித்தமை, ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்தமை, ஜனாதிபதி மாளிகை சமையலறைப் பொருட்களைப் பயன்படுத்தியமை, ஜனாதிபதி செயலகத்தில் இருந்த ஒரு தொகைப் பணத்தை எடுத்து பொலிசாரிடம் கையளித்த சம்பவத்துடன் தொடர்புபட்டமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. கைதுகளுக்கு பொலிசார் முன்வைக்கும் காரணங்கள் வேடிக்கானவையாகும்.
சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை, வன்முறைகளில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வது நியாயமானதாகும். எனினும் நாட்டைக் குட்டிச்சுவராக்கிய அரசியல்வாதிகளை ஆட்சியிலிருந்தும் விரட்டியடிப்பதற்கு ஜனநாயக ரீதியாக இரவு பகலாகப் போராடிய போராட்டக்காரர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்குத் தாக்கல் செய்வது கண்டனத்துக்குரியதாகும்.
மே 9 ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய, தாக்குதல்தாரிகளின் பின்னணியில் இருந்த பொது ஜன பெரமுனவினர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
அதேபோன்றுதான் 2018 இல் 52 நாட்கள் ஆட்சிமாற்றத்தின் போது ராஜபக்ச ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தினுள் அரங்கேற்றிய முறைகேடான நடவடிக்கைகளுக்கு இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. சபாநாயகரின் கதிரையை இழுத்து வீசியமை, அதன் மீது நீரை ஊற்றியமை, சபாநாயகரின் ஒலிவாங்கியை உடைத்து எறிந்தமை போன்ற நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் யார் யார் என்பது முழு உலகுமே அறிந்தவை. இச் சம்பவம் தொடர்பில் அப்போதைய சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழு ஐவரை தவறு செய்தவர்களாக கண்டறிந்திருந்தது. எனினும் இதுவரை அவர்களுக்கு எதிராக எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது, பாராளுமன்றத்தினுள் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான சட்டம் செல்லுபடியாகாது என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன பதிலளித்திருந்தார். இக் கருத்தும் இன்று விமர்சனத்தைத் தோற்றுவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நேற்று பாராளுமன்றில் கேள்வியெழுப்பியிருந்தார். இது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேறு சட்டம், பொது மக்களுக்கு வேறு சட்டமா என்ற கேள்வியை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டியது சபாநாயகரது கடமையாகும்.
மறுபுறம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, போராட்டக்காரர்களை வேட்டையாடும் செயற்பாட்டை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். போராட்டம் இடம்பெற்ற சமயங்களில் தான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறிய அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவிக்கு வந்தவுடன் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்க முற்படுவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தன்னை ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்திய பொது ஜன பெரமுனவினரையும் ராஜபக்சாக்களையும் திருப்திப்படுத்த முனையாது, நாட்டு மக்களை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதே காலத்தின் தேவையாகும்.
ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தால், தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கும் என நாட்டு மக்கள் நம்பியிருந்தார்கள். இன்றும் மக்கள் மத்தியில் அந்த நம்பிக்கை இருக்கிறது. அவர் அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமே தவிர, இருக்கின்ற நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்யக் கூடாது. அந்த வகையில் கைது செய்யப்பட்டுள்ள சகல அமைதி வழிப் போராட்டக்கார்களையும் விடுவிக்குமாறும் அவர்கள் மீதான அடக்குமுறைகளை உடன் முடிவுக்குக் கொண்டு வருமாறும் வேண்டுகோள்விடுக்க விரும்புகிறோம். இன்றேல் இது மேலும் விரும்பத்தகாத விளைவுகளையே தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.- Vidivelli