ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி: ஞானசாரரின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளமாட்டேன்
மு.கா.வுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் திட்டவட்டம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் அவரால் நியமிக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாதெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மு.கா. தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்தார்.
நேற்று மாலை ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரரின் தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் அறிக்கை தொடர்பில் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கேள்வி யெழுப்பினார். அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சர்வகட்சி அரசொன்றினை நிறுவுவது தொடர்பில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் ரவூப் ஹக்கீம் சில கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தார்.
சர்வதேசத்தில் நாட்டுக்கு நற்பெயரைத் தேடித்தராத, நாட்டுக்கு உகந்ததல்லாத அவசரகால சட்டம் நீக்கப்பட வேண்டும். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்படவேண்டும். கிழக்கினை இலக்கு வைத்து இனரீதியாக முன்னெடுக்கப்படும் தொல்பொருள் நடவடிக்கைகள் தவிர்க்கப்படவேண்டும். இது ஒரு சமூகத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுவதாகும் என்றும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
மேலும் தற்போதைய அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களை தரமுயர்த்தி வருகின்றமைக்கு நன்றி தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், இந்தப்பட்டியலில் சம்மாந்துறை, மூதூர் போன்ற உள்ளூராட்சி மன்றங்களும் உள்வாங்கப்படவேண்டுமெனவும் வேண்டினார்.
மாகாண சபை தேர்தல் நடாத்துவதற்கு தயாராகும்போது அது பழைய முறையில் தாமதியாது நடத்தப்படவேண்டும். தமிழ் முஸ்லிம் சமூகம் தொடர்பாக பிரச்சினைகளுக்கான தீர்வின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடப்பட வேண்டும்.
சர்வகட்சி அரசாங்கம் நிறுவப்படுவதற்கு முன்பு தேசிய சபையொன்று உருவாக்கப்படுவதுடன் தேசிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டுமெனவும், அவர்கள் அவ்விடத்திலிருந்து வேறு இடத்துக்கு குடியேற்றப்பட வேண்டுமெனவும் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியை வேண்டிக்கொண்டார்.
ரவூப் ஹக்கீம் மற்றும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஏனைய முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஜனாதிபதி குறிப்பெடுத்துக் கொள்ளுமாறு தனது அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் தேசிய சபையொன்று நிறுவப்படவுள்ளதுடன் மாகாண மட்டத்திலும் ஆலோசனை சபை உருவாக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதியுடான பேச்சு வார்த்தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ். தெளபீக், கட்சியின் செயலாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பிரதி தவிசாளர் எம்.நயீமுல்லா, பிரதி தேசிய அமைப்பாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் உடனிருந்தனர். பிரதமரும் பேச்சுவார்த்தையில் பங்கு கொண்டிருந்தார்.- Vidivelli