கவிமணி மெளலவி
எம்.எச்.எம் புஹாரி (பலாஹி)
செயலாளர், ஜாமிஅதுல் பலாஹ்
பணிப்பாளர் சபை.
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரி அதிபர் சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் எம்.ஏ.முகம்மது அப்துல்லாஹ் (றஹ்மானீ) அவர்கள் 12.10.2016 ஆம் திகதி ஹிஜ்ரி 10.01.1438 ஆஷுறா தினத்தன்று காலமானார்கள்.
சங்கைக்குரிய “ஷைகுல் பலாஹ்”அவர்கள் தென்னிந்தியா தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 21.03.1932 இல் பிறந்தார்கள். இவர்களது தந்தை மிகச் சிறந்த மார்க்க அறிஞர் முகம்மது அபூபக்கர் ஆலிம் அவர்கள். தாயார் ஸபிய்யா உம்மா ஆவார்.
தந்தை அபூபக்கர் ஆலிம் அவர்கள் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக்கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும்போது, தனயன் அப்துல்லாஹ் ஹஸறத் அவர்கள் அக்கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமை புரிந்தார்கள்.
ஷைகுல் பலாஹ் அவர்கள் தமது தாயகமான அதிராம்பட்டினத்திலுள்ள மத்ரஸதுர் ரஹ்மானிய்யாவில் மார்க்கக் கல்வி பயின்று “றஹ்மானீ” பட்டம் பெற்றார்கள்.
இவர்கள் தனது தந்தையுடன் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக்கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும்போது காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரியில் அதிபருக்கான வெற்றிடம் ஏற்பட்டது. காத்தான்குடியின் முக்கிய பிரமுகர்கள் ஜாமிஅதுல் பலாஹில் அதிபராக கடமையாற்ற வருமாறு ஷைகுல்பலாஹ் அவர்களுக்கு அழைப்பு விடுத்ததற்கிணங்க 13.10.1959 இல் வந்து சேர்ந்தார்கள். சிறிது காலம் இங்கு உப அதிபராகக் கடமையாற்றிய பின் அதிபராக நியமிக்கப்பட்டார்கள்.
இவர்களது அயராத முயற்சியினால் பலாஹ் அறபுக்கல்லூரி பெருவளர்ச்சி கண்டது. இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்தவர்கள் இங்கு மார்க்கக் கல்வியை கற்க அனுமதி பெற்றார்கள்.
அப்துல்லாஹ் ஹஸறத் அவர்கள், அதிராம்பட்டினம் செ.மு.க. நூறு முகம்மது மரைக்காயர் அவர்களின் புதல்வி உம்முல் பஜ்ரியா அவர்களை 02.09.1961 இல் மணமுடித்தார்கள். இவர்களுக்கு மூன்று ஆண் மக்கள். மூத்தவர் முகம்மத் றஹ்மதுல்லாஹ். இவர் ஜாமிஅதுல் பலாஹில் மார்க்கக் கல்வி பயின்று மௌலவி பலாஹீ பட்டம் பெற்று தற்போது வாழைச்சேனை, அல்குல்லிய்யதுந் நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அறபுக்கலாபீடத்தில் அதிபராகப் பணியாற்றுவதோடு, காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியிலும் அதிபராகப் பதவி வகிக்கிறார்கள்.
இரண்டாவது புதல்வர் முகம்மது முஸ்தபா சிறுவயதிலேயே மரணித்துவிட்டார். மூன்றாவது புதல்வர் முகம்மது பறக்கதுல்லாஹ் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இயங்கும் ஜாமிஆ மதீனதுல் இல்ம் கலாபீடத்தில் ஹாபிழ் பட்டம் பெற்று பின்னர் ஜாமிஅதுல் பலாஹில் மார்க்கக் கல்வி பயின்று, அக்கல்லூரியிலேயே அல்குர்ஆன் மனனபீடம் மற்றும் ஷரீஆ பீடங்களில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். தற்போது தனது சொந்த ஊரான தென்னிந்தியா அதிராம்பட்டினத்திலுள்ள அறபுக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார்.
55 வருட காலமாக, பெற்ற தாயை, பிறந்த பொன்னாட்டை உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்களைப் பிரித்து கடல் கடந்து வந்து கல்விப் பணியாற்றிய ஷைகுல் பலாஹ் அவர்கள் தனது சொந்த ஊரில் வாழ்ந்த காலம் மிகமிகக் குறைவானது.
கொழும்பு இரண்டாம் குறுக்குத் தெருவில் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாகக் காட்சி தரும் ஜாமிஉல் அழ்பர் சம்மாங்கோட்டுப்பள்ளியைக் கட்டுவதற்கு நிலம் கொடுத்து உதவியவர், ஷைகுல் பலாஹ் அவர்களின் பாட்டனார் அப்துல் காதிர் அவர்களாவார். இந் நிலையில் இப்பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைத் தலைவராகவும் ஷைகுல் பலாஹ் அவர்கள் மரணிக்கும்வரை கடமையாற்றினார்கள்.
தமது வாழ்நாளை ஜாமிஅதுல் பலாஹின் பெருவளர்ச்சிக்காக முழுமையாக அர்ப்பணித்த ஷைகுல் பலாஹ் அவர்களிடம் மார்க்கக் கல்வி பயின்ற பலாஹீ, மௌலவிகள் இன்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தஃவாப்பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஜாமிஅதுல் பலாஹில் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டு பல்வேறு பொதுப்பணிகளிலும் ஈடுபட்டார்கள். காத்தான்குடி நகரை இஸ்லாமிய நெறிமுறையில் வழிநடத்தும் தனிப்பெருந்தலைவராக மிளிர்ந்தார்கள். காத்தான்குடி மக்களின் இன்ப துன்பங்களிற் பங்கு கொண்டு மக்களின் மனங்களை வென்றார்கள்.
இலங்கையில் புதிய தொழுகை நேரத்தை அமுல்படுத்துவதற்குப் பாரிய பங்களிப்புச் செய்தார்கள். காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா, பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியனவற்றின் சிறப்பான செயற்பாடுகளுக்குப் பாரிய பங்களிப்புச் செய்தார்கள்.
அன்னார் 12.10.2016 ஆம் திகதி ஹிஜ்ரி 1438 முஹர்ரம் மாதம் 10ஆம் நாள் ஆஷுறா தினத்தன்று இவ்வுலகை விட்டுப்பிரிந்தார்கள். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சமுகமளித்திருந்தனர். அது மாத்திரமன்றி பிற சமயங்களின் பெரியார்கள், அரசியற் தலைவர்கள், அறபுக்கல்லூரிகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் அன்னாரின் ஜனாஸாவுக்கு மரியாதை செலுத்தினார்கள். இது அன்னார் இலங்கை மக்களால் எந்தளவு தூரம் நேசிக்கப்பட்டார்கள் என்பதற்குத் தக்க சான்றாகும்.
அன்னாரின் 6 ஆவது நினைவு தினம் எதிர்வரும் 09.08.2022 ஆகும். இதையொட்டி ஜாமிஅதுல் பலாஹ் பழைய மாணவர் அமைப்பான மஜ்லிஸுல் பலாஹிய்யீன் விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
அன்னாருக்கு அல்லாஹ் மறுமைப் பாக்கியங்களை நிறைவாக அருள்வானாக.- Vidivelli