(எம்.வை.எம்.சியாம்)
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் பாதிக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே. இவ்வாறான நிலையில் எம்மால் முடியுமான உதவிகளை பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு வழங்குவது அல்லாஹ்வின் பொருத்தமும், உதவியும் எமக்குக் கிடைப்பதற்கும், ஆபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெறவும் காரணமாக அமைகின்றன.
ஆதலால், வசதி படைத்தோர் மற்றும் பாதிக்கப்படாத பிரதேசங்களில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு அப்பிரதேசங்களில் உள்ள ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகங்கள் ஊடாக தங்களது உதவிகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.
அத்துடன், தங்களது உதவிகளை பண ரீதியாக மேற்கொள்ள விரும்புபவர்கள் கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் அல்லது கண்டி மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யாவின் கண்டி மாவட்டக் கிளை ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு அப்பிரதேசங்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
மேலதிக தகவல்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம்.பவாஸ் (0777-571876) அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம் என்று குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli