சர்வகட்சி அரசாங்கத்துக்கான பேச்சுகள் ஆரம்பம் அதாவுல்லாஹ்வுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு
அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மு.கா., அ.இ.ம.கா. விருப்பம்
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் நேற்றுமுன்தினம் இடம்பெற்றன. ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தைகளின் மூன்றாவது கலந்துரையாடல் தேசிய காங்கிரஸுடன் இடம்பெற்றதோடு, அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.
மகா சங்கத்தினர் தலைமையிலான மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள், இளைஞர் குழுக்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் சர்வகட்சி அரசாங்கத்தின் மீது பலமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் முதல் சுற்றுக் கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன் இரண்டாவது கலந்துரையாடல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இடம்பெற்றது.
மூன்றாவது கலந்துரையாடல் தேசிய காங்கிரஸுடன் இடம்பெற்றதோடு, அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியில் அனைத்துத் தரப்பினரோடும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றது. அத்துடன் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கடிதத்துக்கு சாதகமான பதிலை அனுப்புவதற்கு எதிர்பார்க்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், அனைத்து தரப்பினரதும் யோசனைகளை பெற்றுத் தருமாறு இப்போதும் அவர் கடிதம் மூலம் எமக்குத் தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது ஆலோசனைகளுடன் மேலும் சில விடயங்களை உள்ளடக்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் நாம் எமது யோசனைகளை அவருக்குத் தெரிவிக்கவுள்ளோம்.
அதன் பின்னர் எதிர்க்கட்சியில் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான உரிய செயற்பாடுகளை நாம் மேற்கொள்வோம்.
நாம் கட்சி ரீதியாக ஜனாதிபதியின் கடிதத்திற்குப் பதில் வழங்கத் தயாராகவுள்ளோம். அதன் பின்னர் எதிர்க்கட்சியில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு தீர்வு பெற்றுக் கொள்வதில் ஒத்துழைப்பு வழங்குவோம்.
அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதி மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும். அதேவேளை எமது கட்சியின் ஒத்துழைப்பையும் நாம் வழங்குவோம் என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதினிடையே, நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் நல்ல வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். மாறாக அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் நாங்கள் யாரும் கலந்துரையாடவும் இல்லை. அதுதொடர்பில் அழைப்பு வரவும் இல்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் கொள்கை உரையை நாங்கள் வரவேற்கின்றோம். நாட்டை கட்டியெழுப்பும் அவரது நல்ல வேலைத்திட்டங்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். அத்துடன் அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு எமக்கு எந்த கோரிக்கையும் வரவும் இல்லை. அதுதொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் இடம்பெறவும் இல்லை. மாறாக சர்வ கட்சி வேலைத்திட்டத்துக்கு வருமாறு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு இணக்கம் தெரிவித்து பதில் கடிதம் அனுப்பி இருக்கின்றோம்.
சர்வ கட்சி வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாட வருமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. நாளை வெள்ளிக்கிழமை நாங்கள் இதுதொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவோம். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிப்போம் என்றார்.- Vidivelli