ஏனைய சமூகங்களுடன் முரண்படாதவகையில் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் தனியார் சட்டம் இலங்கை சுதந்திரம் பெற்றுக் கொள்வதற்கு முன்பிருந்து நடைமுறையில் இருந்து வருகின்றது. முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மாத்திரமே பலதார மணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் திருத்தங்கள் முஸ்லிம் சமூகத்துடன் கலந்துரையாடப்பட்டு ஏனைய சமூகங்களுடன் முரண்படாத வகையில் மேற்கொள்ளப்படவேண்டும் இது எமது பொறுப்பாகும் என நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்; மலைநாட்டு சிங்களவர்களுக்கு கண்டியர் சட்டம், முஸ்லிம்களுக்கென முஸ்லிம் தனியார் சட்டம், வடக்கு தமிழர்களுக்கென தேசவழமை சட்டம் என தனியார் சட்டங்கள் இங்கு அமுலில் உள்ளன. இச்சட்டங்களின் கீழ் விவாக விவகாரங்கள், சொத்து விவகாரங்கள் ஆளப்படுகின்றன.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கென நீண்டகாலமாக ஆலோசிக்கப்பட்டுள்ளன. கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு நான் நீதியமைச்சராகப் பதவி வகித்த காலத்திலும் முஸ்லிம் சமூகம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பில் கோரிக்கை விடுத்தது. திருத்தங்கள் மேற்கொள்வதற்காக நானும் சலீம் மர்சூப் தலைமையில் நிபுணத்துவக் குழுவொன்றினை நியமித்திருந்தேன். சிபாரிசுகள் அக்குழுவினால் முன்வைக்கப்பட்டன. முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரியின் காலத்தில் இச்சட்டத் திருத்தங்களை உள்ளடக்கிய சட்ட மூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
காதிநீதிமன்ற முறைமையை இல்லாமற் செய்தல், திருமணத்திற்கு மணப்பெண்ணின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளல், பலதார மணத்தை இல்லாமற் செய்தல் போன்ற திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பலதார மணம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் இரு கருத்துக்கள் உள்ளன. பலதார மணத்தை இல்லாமற் செய்ய வேண்டும் என ஒரு தரப்பு கோரிக்கை விடுக்கும் நிலையில், ஒரு சாரார், முதல் மனைவியின் அனுமதி கிடைக்கப்பெற்று, கணவர் மேலுமோர் மனைவியை தாபரிக்கும் வகையில் பொருளாதார வசதி உள்ளவராக இருந்தால் பலதார மணத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்கின்றனர். இறுதி முடிவினை முஸ்லிம் சமூகம் இன்னும் சில வாரங்களில் தெரிவிப்பதாக கூறியிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் விருப்பப்படி இச்சட்ட மூலத்தை தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளேன்.
முஸ்லிம் தனியார் சட்டம் அவர்களது மதத்தின் அடிப்படையிலான சட்டமாகும். எனவே மக்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களது கருத்துக்களையும் பெற்று உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கே எதிர்பார்த்திருக்கின்றோம் என்றார்.- Vidivelli