இன, மதவாத கொள்கைக்கு எதிராக செயற்படுவேன்
நாட்டில் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம்-சிங்கள -தமிழர்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தினர்
(எம்.ஆர்.எம்.வசீம்)
பேதங்கள் மூலம் எமது நாடு முற்காலம் தொட்டு பின்னடைவுகளுக்கு உள்ளானது. அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக சில தரப்பினர்கள் இப்பிரிவினை மேலும் விஸ்தரித்தனர். முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கு இடையே பிரச்சினைகளை உருவாக்கியதுடன் தமிழ்ர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலும் குரோதங்களை தோற்றுவித்தனர். பிரிவுகளற்ற இலங்கையெனும் ஆளடையாளத்தைக் கொண்ட சமூகமொன்றினை உருவாக்க முயற்சித்ததால் நான், அரசியல் ரீதியாக தோல்விகளை சந்தித்தேன். விமர்சனங்களுக்கு ஆளானேன். இனவாதிகளுக்கும். சமயவாதிகளுக்கும் எதிராக தொடர்ச்சியாக ஈடுபட்டமையால் சில தேசத்துரோகியாகவும் சமய எதிரியாகவும் அவதூறுக்கு உட்பட்டேன். எனினும் நான் எனது கொள்கையில் இருந்து விலகிச் செல்லவில்லை. ஒருபோதும் நான் அந்தக்கொள்கையிலிருந்து விலகவும் மாட்டேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வை நேற்று காலை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை பிரகடன உரையை ஆற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நான் கஷ்டத்தில் விழுந்திருந்த ஒரு நாட்டையே பொறுப்பேற்றேன். கடுமையான பொருளாதாரப் பிரச்சினை ஒருபுறம். பாரிய மக்கள் எதிர்ப்பு மறுபுறம். எனினும் நாட்டுக்காக இந்த கடினமான சவாலை பொறுப்பேற்க நான் தீர்மானித்தேன். அதற்குக் காரணம் இருளுக்கு சாபமிட்டுகொண்டு இருப்பதை விட ஒரு விளக்கினையேனும் ஏற்றுவது நாட்டிற்காக நான் செய்யும் கடமை என நான் கருதியமையாகும்.
எனவே சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு நான் மீண்டும் இந்த பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துத் தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். நான் உங்கள் அனைவருக்கும் நட்பின் கரத்தை கௌரவத்துடன் நீட்ட விரும்புகின்றேன். கடந்த காலத்தினை பின்தள்ளிவிட்டு நாட்டினைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணையுமாறு நம்பிக்கையுடன் அழைப்பு விடுக்கின்றேன். சர்வகட்சி அரசாங்கம் பற்றி அரசியல் கட்சிகளுடன் நடாத்தும் பேச்சுவார்த்தையினை நான் ஏற்கனவே ஆரம்பித்துள்ளேன்.
தற்போதுள்ள மின் வெட்டினை குறைத்துக்கொள்ள எம்மால் முடிந்துள்ளது. பயிர்ச் செய்கைக்காக எதிர்காலத்தில் தேவைப்படும் உரத்தைக் கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. சமையல் எரிவாயு பிரச்சினை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுவரும் நிலையில் உள்ளது. வரிசையில் காத்திருக்காது சமையல் எரிவாயுவை இன்னும் சில தினங்களில் அனைவராலும் பெற்றுக்கொள்ள முடியும். உணவுத் தட்டுப்பாடொன்று ஏற்படாதவாறு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றினைக் கொள்வனவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதித் துறை என்பவற்றிற்கு ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மீளெழும் முயற்சியிலே எமது அயல் நாடான இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பாக நான் விசேடமாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் எமக்கு வழங்கிய உயிர் மூச்சுக்கு நான் இலங்கை மக்கள் சார்பாக பிரதமர் மோடிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
தற்போது எமது முன்னால் உள்ள குறுங்கால பிரச்சினை எரிபொருள் தட்டுப்பாடாகும். எரிபொருளை கொண்டு வருவதற்காக ஏனைய நாடுகளிடமிருந்து கடன் உதவிகள் கிடைக்கும் வரையில் காத்திருக்கும் முறைமையிலே நாம் முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும். எனவே எமது நாட்டின் ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று ஊடாக எரிபொருளை கொண்டு வருவதற்கான முறைமை ஒன்றினை நாம் ஆரம்பிக்க உள்ளோம். இதன் போது எரிபொருளுக்கான கொடுப்பனவினை சமப்படுத்திக்கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதிகளை வரையறுத்துக்கொள்ள வேண்டியும் எமக்கு ஏற்படும். மறுபுறமாக எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியும் ஏற்படும். எனவே இந்த ஆண்டின் இறுதி வரையில் இந்த கஷ்டத்தினை நாட்டுக்காக நாம் தாங்கிக்கொள்ளல் வேண்டும்.
இந்த கஷ்டங்களிலிருந்து மீளுவதற்கு நாம் நீண்ட கால தீர்வுகளை நோக்கிப் பயணித்தல் வேண்டும். மீண்டும் ஒருபோதும் எமது நாட்டிலே இவ்வாறான பொருளாதார நெருக்கடியொன்று எமது நாட்டிலே ஏற்படாதவாறு பலமிக்க அடித்தளமொன்றினை இடுதல் வேண்டும். பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துதல் வேண்டும். பொருளாதார ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்தி, போட்டித்தன்மைமிக்க சந்தைப் பொருளாதாரம் ஒன்றின் பக்கம் மாற்றியமைத்தல் வேண்டும். அவற்றிற்குத் தேவையான அறிக்கைகள், திட்டமிடல், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றினை தற்போது நாம் தயாரித்து வருகின்றோம்.
நாம் நடைமுறைப்படுத்தும் செயல்திட்டங்கள் தொடர்பான விபரமான தகவல்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவுசெலவு மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்படும்.
கடந்த காலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் இலங்கைக்கு அனுப்பும் நிதியின் அளவு குறைந்துவிட்டது. அதற்குப் பல காரணங்கள் உள்ளது. கொவிட் தொற்றுப்பரவல் காரணமாகப் பல தொழில்கள் இல்லாது போனது. தொழில்களுக்காக வெளிநாடு செல்வோர் குறைந்துள்ளனர். ரூபாயின் பெறுமதியைச் செயற்கையாகக் கட்டுப்படுத்தியதன் காரணமாக வேறு முறைகளின்மூலம் இலங்கைக்கு பணம் அனுப்புதல் மிகவும் இலாபகரமானதாக இருந்தது. தற்போது படிப்படியாக இந்நிலைமை மாற்றமடைந்து வருகின்றது. வங்கி முறைமையினூடாக இலங்கைக்குப் பணம் அனுப்புதலை ஊக்குவிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபடும்போது சம்பிரதாய சிந்தனையிலிருந்து விடுபடுமாறு நான் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்தியாவோடு ஒன்றிணைந்து திருகோணமலை எண்ணெய்த்தாங்கித் தொகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்போது இந்தியாவுக்கு இலங்கையை விற்கின்றார்கள் என்று கூறி அபிவிருத்தித் திட்டத்துக்கு இடையூறு விளைவித்தனர். அன்று எமக்கு எண்ணெய்த்தாங்கித் தொகுதியினை அபிவிருத்தி செய்துகொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பின் இன்று மக்களுக்கு எரிபொருள் வரிசைகளில் நீண்டநாட்கள் அலைவதற்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.
சுவசெரிய நோய் காவு வண்டிகளின் சேவையை ஆரம்பிக்கும்போது அதேபோன்று எதிர்ப்புகளைச் செய்தார்கள். சுவசெரிய நோய் காவு வண்டிகளில் வைத்தியசாலைகளுக்கு வந்தால் ஏற்படுவது மரணம் எனக்கூறி சில வைத்தியர்கள் ஊடகக் கலந்துரையாடல்கள் நடத்தினார்கள். ஆனாலும் நாம் எவ்வாறாயினும் சுவசெரியவை ஆரம்பித்ததனால் தற்போது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களை வழிதவறி நடத்தி தடைசெய்த கருத்திட்டங்கள் காரணமாக எமது பொருளாதாரக் கட்டமைப்பு அழிவடைந்தது.
இலகு புகையிரதச் சேவையைத் தாபிப்பதற்கும், துறைமுகத்தை மேம்படுத்துவதற்கும் ஜப்பான் நாடு முன்வந்த சந்தர்ப்பத்தில் அதற்கெதிராக அடிப்படையற்ற வீணான காரணிகள் பலவற்றை எடுத்துக்காட்டியதன் காரணமாக எமது நாட்டுக்குக் கிடைப்பதற்கிருந்த 3 பில்லியன் டொலருக்கு அதிகமான அளவு கிடைக்காமல் போயிற்று. அதுமட்டுமன்றி ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையே இருந்த நீண்டகால நட்பு சிதறிப்போனது.
நான் இவ்வாறான நீண்டகால இலக்குகளுக்குத் திட்டங்களைத் தயாரிக்கும்போது சிலர் பரிகாசமாகப் பார்க்கின்றார்கள். கேலிக்கதைகள் சொல்கின்றனர். ஆம். நான் ஏனைய அரசியல்வாதிகள் போன்றவரல்ல. என்னிடம் இருப்பது நீண்டகாலத் திட்டங்கள். நான் திட்டமிடுவது எனது முன்னேற்றத்துக்காக அல்ல. இளைஞர் சமுதாயத்துக்காகவே. நாளைய நாளுக்காகவே. நான் இன்று நாட்டும் மரத்தின் அறுவடையை எனக்கு அனுபவிக்க கிடைக்காது என்பதை நான் நன்றாக அறிவேன். ஆனாலும் நாளைய தினம் எமது பிள்ளைகளான எதிர்காலப் பரம்பரைகள் அந்த அறுவடையை அனுபவிப்பார்கள்.
எமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பிலும் விசேடமாகக் குறிப்பிட நான் விரும்புகின்றேன். வெளிநாட்டுக் கொள்கையில் உறுதியற்ற தன்மை காரணமாக எமக்கு சர்வதேச மட்டத்தில் அதிகளவிலான இழப்பீடுகள் மற்றும் பின்னடைவுகள் ஏற்பட்டன. நான் இந்த நிலைமையை மாற்றுவேன். உலகத்தில் சகல நாடுகளும் எனது நண்பர்கள். எமக்கு எதிராளிகள் இல்லை. நாம் எந்தவொரு கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்லர். சகல நாடுகளோடும் நட்பு ரீதியான கொள்கையைப் பின்பற்றுவதனை நான் உறுதிப்படுத்துகின்றேன்.
சுபீட்சமான இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதற்காகப் பொருளாதார மேம்படுத்தலுக்குச் சமாந்திரமாக சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புகள் பலவற்றைச் செய்யவேண்டுமென நான் இதற்குமுன்பும் வலியுறுத்தியுள்ளேன். எமது நாட்டின் மக்களும் பாரிய அரசியல் மறுசீரமைப்புச் செயற்பாடொன்றை எதிர்பார்க்கின்றனர்.
இலங்கை நாட்டையும் நாட்டு மக்களையும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல மாற்றங்களையும் செய்வதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். நாடு கேட்கும் சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளை நான் நடைமுறைப்படுத்துவேன்.
ஆட்சி முறையில் மாற்றமொன்றை ஏற்படுத்தும் நோக்கில், நாடு பூராக ஆங்காங்கே ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் பிற்காலத்தில் காலி முகத்திடலில் கேந்திரமானது. நாட்டின் பிரதான நகரங்கள் சிலவற்றுக்கும் அது வியாபித்தது. இந்தப் போராட்டமானது மிகவும் அஹிம்சையாகவும் ஆக்கபூர்வமாகவும் இடம்பெற்றது. இப்போராட்டக்காரர்கள் எந்தவொரு வன்முறைகளிலும் ஈடுபடவில்லை. அதன் காரணமாகவே குடும்பம் குடும்பமாக வந்து போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர். சிறு குழந்தைகளையும் போராட்ட பூமிக்கு அழைத்து வருவதற்கு பெற்றோர்கள் அச்சம் கொண்டிருக்கவில்லை.
ஒரு சந்தர்ப்பத்தில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் சுவர்களில் எந்தவிதமான பாதிப்பும் இல்லாதவாறு டிஜிட்டல் முறையில் சித்திரம் வரைந்தனர். ஆனால் அதன்பின்னர் இப்போரட்டத்தில் அஹிம்சாவாதம் கீழ்படிந்து வன்முறை மேலெழுந்தது. ஒரு சில குழுக்கள் போராட்டத்தின் ஒற்றுமையை மிதித்து போராட்டத்தின் உரிமையாளர்களாக மாறினர். அவர்கள் அன்பிற்கு பதிலாக போராட்டத்தில் வன்முறையை திணித்தனர். நான் ஒருபோதும் வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன். ஆயினும் அஹிம்சை மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பேன். அமைதியாக போராட்டத்தில் ஈடுபடுவது அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நான் இந்தப் போராட்டக்காரர்களை வேட்டையாடப் போவதாக பாரிய பிரச்சாரத்தை சில குழுக்கள் சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்ப முயற்சித்து வருகின்றனர். ஆயினும் அது உண்மையல்ல. நான் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எந்தவொரு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்கப்போவதில்லை. அமைதியான போராட்டக்காரர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்காக முன்வருவதற்கும் நான் விசேட செயலணியொன்றை தாபிப்பேன்.
மே 09 ஆம் திகதி அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மற்றும் போராட்டத்தின் பெயரில் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை பரப்பும் நபர்கள் குறித்தும் அதேபோன்று சட்டத்தை அமுல்படுத்துவேன். இந்தச் செயற்பாட்டின்போது எந்த ஒரு அரசியல் அழுத்தம் இடம்பெறாத வகையில் பொறுப்புக்கூறுவேன்.
அரசியல் கட்சி முறை பற்றி நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. கட்சிகளின் செயற்பாடானது எதிர்காலத்திற்கு பொருந்தக்கூடியவாறு மாற்றியமைக்கப்படுதல் வேண்டும். அரசியல் என்று நாம் இன்று நினைத்துக்கொண்டிருப்பவை, அரசியல் என்று நாம் இன்று மேற்கொள்பவை அனைத்தையும் அதே விதத்தில் நாம் முன்னெடுத்துச் செல்வதா என சிந்தித்தல் வேண்டும். அரசியல் கல்வி பற்றி ஆழமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
தற்போது தேர்தல் ஆணைக்குழு, அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, நீதிச் சேவைகள் ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்திற்கும் உறுப்பினர்களை நியமிக்கும் பூரண உரிமை ஜனாதிபதிக்கே உண்டு. அது சனநாயகத்திற்கு உகந்த நிலை ஒன்றல்ல என்பதனை நான் நேரடியாக குறிப்பிட விரும்புகின்றேன். நாம் அந்த நிலையினை மாற்றியமைத்தல் வேண்டும். தற்போது ஜனாதிபதியிடம் இலங்கையின் ஆதிகாலத்தில் அரசர் ஒருவரிடம் இருந்த அதிகாரங்களை விடவும் அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை உடனடியாக மாற்றி அமைத்தல் வேண்டும்.
ஒரு நாட்டின் ஜனாதிபதி என்பவர் மக்களுக்கு மேலால் வாழுகின்ற அரசராக அல்லது கடவுளாக இருக்க வேண்டியதில்லை. அவரும் பிரஜையில் ஒருவர். எனவே தனியான கொடி, இலச்சினை, தனியான கௌரவங்கள் மூலம் புனிதத்தன்மைக்கு ஆளாக்க வேண்டியதில்லை.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாட்டின் ஆரம்பமாக, 19 ஆவது திருத்தத்திலிருந்த அனைத்து நேர்மறையான விடயங்களையும் உள்ளடக்கி 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காக இந்த சபையின் முழுமையான ஆதரவினை நான் எதிர்பார்க்கின்றேன்.
பேதங்கள் மூலம் எமது நாடு முற்காலம் தொட்டு பின்னடைவுகளுக்கு உள்ளானது. நாம் இன ரீதியாக பிரிந்தோம், மொழி ரீதியாக பிரிந்தோம், சமய ரீதியாக பிரிந்தோம். கட்சி ரீதியாக பிரிந்தோம். வகுப்பு ரீதியாக பிரிந்தோம், பூகோள ரீதியாகவும் பிரிந்தோம், குல ரீதியாகவும் பிரிந்தோம்.
சில தரப்பினர்கள் இப்பிரிவினையை மேலும் விஸ்தரித்தனர். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான பிளவுகளை பயன்படுத்தினர். பிரித்து ஆள்வதன் அனுகூலத்தை அனுபவித்தனர். முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர். தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர். இவ்வாறு இன ரீதியாவும் சமய ரீதியாகவும் பல்வேறு விதமான பிளவுகளை ஏற்படுத்தி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு முயற்சித்தனர்.
1977 இல், அரசியலில் பிரவேசித்த நாள் முதல் எனக்கு தேவைப்பட்ட ஒரு விடயம் இவ்வாறான பிரிவுகளற்ற இலங்கையெனும் ஆளடையாளத்தைக் கொண்ட சமூகமொன்றினை உருவாக்குவதாகும். ஒரு தாயின் பிள்ளைகளாக ஒற்றுமையாக வாழக்கூடிய தேசமொன்றை உருவாக்குவதாகும். இம்முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டதன் காரணமாக நான் அரசியல் ரீதியாக தோல்விகளை சந்தித்தேன். தோல்விகளை சந்தித்தேன். சிங்கள பேரினவாதிகளின் மாத்திரமன்றி, தமிழ், முஸ்லிம் பேரினவாதிகளின் விமர்சனங்களுக்கு ஆளானேன். இனவாதிகளுக்கும். சமயவாதிகளுக்கும் எதிராக தொடர்ச்சியாக ஈடுபட்டமையால் சில அரசியல் கட்சிகள் என்னை தேசத்துரோகியாகவும் சமய எதிரியாகவும் அவதூறுக்கு உட்படுத்தின. எனினும் நான் எனது கொள்கையில் இருந்து விலகிச் செல்லவில்லை. ஒருபோதும் நான் அந்தக்கொள்கையிலிருந்து விலகவும் மாட்டேன்.-Vidivelli