ஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்புக்கு செவிசாய்ப்பார்

ரணிலை பிரதமராகவும் நியமிப்பார் என்கிறார் ஹக்கீம்

0 596

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தலைசாய்த்து, ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுள்ள ரணில் விக்கிரமசிங்கவை இன்றிரவே பிரதமராக நியமிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக நேற்று தீர்ப்பு வழங்கிய பின்னர், உயர் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம். ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை கொடுக்கமுடியாது என்று ஜனாதிபதி கூறுவதானது, அது அவருக்கே கொடுக்கப்படும் என்பதாக பார்க்கப்பட வேண்டும். இதற்கு முன்னரும் அப்படித்தான் நடந்துள்ளது.

அரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டது தவறு என்பதை உயர் நீதிமன்றத்தில் ஏழு நீதியரசர்களும் தங்களுடைய தீர்மானத்தை அறிவித்துள்ளனர். நாட்டின் ஜனநாயகத்துக்கும், சட்டத்துக்கும், நீதிக்கும் இன்று பாரிய வெற்றி கிடைத்துள்ளது. நீதித்துறை நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளது.

அடுத்த கட்டமாக புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை கொண்டுவந்து பாராளுமன்றத்தில் அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வோம். இன்று பிற்பகல் 2 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் ஜனாதிபதி எங்களை சந்திக்கவிருப்பதாக மூன்றாம் தரப்பினூடாக கேள்விப்பட்டோம். இன்று அதற்கான வாய்ப்பிருக்கிறது.

மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரிக்கும் நீதிபதிகள் தொடர்பில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இதுதொடர்பில் நாங்கள் மீளாய்வு மனுவொன்றை கையளிக்கவுள்ளோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.