கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
தோல்வியின் நாயகன் ரணில் விக்கிரமசிங்ஹ, அறப்போராட்டத்தின் மகத்தான வெற்றியினால் இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக மக்களால் அல்லாமல் நாடாளுமன்றப் பிரதிநிதிகளால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மொத்தம் 225 பிரதிநிதிகளைக் கொண்ட அம்மன்றத்தில் 134 வாக்குகளைப்பெற்று அப்பதவியைக் கைப்பற்றியுள்ளார். அந்த 134 ஆதரவாளர்களுள் மிகப்பெரும்பான்மையினர் ராஜபக்சாக்களின் மொட்டுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் எஞ்சிய ஆதரவாளர்களின் வாக்குகளுக்காக ராஜபக்ச குடும்பத்தினரும் அவர்களின் அடிவருடிகளும் பணக்கட்டுகளை அள்ளி வீசினர் எனவும் இப்போது செய்திகள் கசிந்துள்ளன. எனவே இந்த ஜனாதிபதியை மக்களின் ஜனாதிபதி என்பதைவிட ராஜபக்ச கட்சியினரின் ஜனாதிபதி என்று அழைப்பதே பொருத்தமானதாகும்.
கடந்த தேர்தலிலே மக்களால் தோற்கடிக்கப்பட்ட விக்கிரமசிங்ஹ, அரசியல் யாப்பு வழங்கிய ஒரு சலுகையின் மூலம் பின் கதவால் நாடாளுமன்றத்துக்குள் அதுவும் காலங்கடந்து நுழைந்து, ராஜபக்ச ஆட்சி பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பொதுமக்களிடையே ஆதரவு இழந்துவந்ததை உன்னிப்பாக அவதானித்து, அதற்கான தனது கண்டனங்களையும் இடையிடையே எழுப்பி, அந்த ஆட்சிக்கு எதிராக விழிப்புற்ற இளைஞர் படையொன்று வீறுடன் திரண்டு போராடுவதையும் அவதானித்து, அப்போராட்டத்துக்கு தானும் ஓர் ஆதரவாளன் என்பதுபோல் நடித்து, அவர்களின் போராட்டம் இறுதியில் பிரதமரையும் ஜனாதிபதியையும் பதவி துறக்கச்செய்யவே அந்தச் சந்தர்ப்பங்களை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய ஒரு தந்திரசாலி. சுருக்கமாகக் கூறின், அறப்போராட்டத்தின் வெற்றியினால் அதிக பலன் அடைந்த ஒரேயொரு அரசியல்வாதி ரணில் விக்கிரமசிங்ஹ.
இந்த நடிகனின் நாடகத்தின் அடுத்த காட்சி இப்போது அரங்கேறியுள்ளது. தான் பதவியேற்ற 24 மணித்தியாலங்களுக்குள் அறப்போராளிகளின் மையமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இயங்கிவந்த காலிமுகத்திடலை படைகொண்டு முற்றுகையிட்டு, விரைவிலே அந்த இடத்தைவிட்டு வெளியேற இருந்த போராளிகளை வன்செயலால் வெளியேற்றிய சாதனையுடன் அந்தக் காட்சி ஆரம்பித்தது. நாட்டின் சீர்குலைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அவிழ்த்துவிடப்பட்ட அவசியமற்ற ஒரு வன்முறைதான் அங்கே நடந்தேறிய ராணுவ அடிதடி. அதனை உலகமே கண்டித்தமை ஒரு புறமிருக்க பொருளாதார மீட்சிக்காக ஆலோசனைகளை வழங்கி உதவவிருந்த சர்வதேச நாணய நிதியும் அந்த முயற்சியை பின்போட்டுள்ளது. இப்போது அந்தத் தவறை மூடிமறைப்பதற்காக வேறு மூன்று இடங்களை சகல வசதிகளுடனும் சமாதானப் போராட்டங்களுக்காக ஒதுக்கித் தருவதாகவும் இந்த நடிகர் உறுதியளித்துள்ளார். ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இவர் மாற்று இடங்களை அளித்தாலும் அளிக்காவிட்டாலும் அறப்போராளிகள் தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை. ரணிலின் உருவத்துக்குள்ளே ராஜபக்சாக்கள் ஒழிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது படிப்படியாக வெளிவரும்.
ரணிலும் பொருளாதார மீட்சியும்
புதிய ஜனாதிபதியின் முதல்வேலை பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே என்பதை பலரும் வலியுறுத்தியுள்ளனர். அது உண்மை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது எவ்வாறென்பதிலே கருத்தொற்றுமை இல்லை. இந்த ஜனாதிபதிக்குத் தெரிந்த ஒரேயொரு மார்க்கம் சர்வதேச நாணய நிதியின் ஆலோசனைகளுக்கமைய வரவுசெலவுத் திட்டங்களின் ஊடாகவும், மத்திய வங்கியின் ஊடாகவும், நாடாளுமன்றத்தின் ஆதரவுடனும் நிதி, வரிக் கொள்கைகளை மாற்றியமைத்து, அரச செலவினங்களைக் குறைத்து, நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் சீர்படுத்தி, நிர்வாக ஊழல்களையும் ஒழித்து, உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் வகையில் உள்நாட்டுச் சந்தை அமைப்பையும் சீர்படுத்துவதாகும். இன்று நிலவும் உலகளாவிய முதலாளித்துவப் பொருளாதார ஒழுங்கில் எந்தப் பொருளாதார நிபுணனும் இவற்றைத்தான் சிபார்சு செய்வான். ஆனால் முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே புகுந்திருந்து ஊழல் நிறைந்த ஒரு நிர்வாகத்தை வளர்த்து அதனாலே தம்மை வளர்த்துக்கொண்ட அரசியல்வாதிகளின் ஆதரவால் தெரிவுசெய்யப்பட்ட இந்த ஜனாதிபதிக்கு தன்னை ஏற்றிவிட்ட ஏணியையே தூக்கி வீசிவிடும் துணிவு வருமா? விவாதத்துக்காக அவரிடம் அந்தத் துணிவு உண்டென்று ஏற்றுக் கொண்டாலும் தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நெருக்கடிகள் இலங்கையின் பொருளாதாரத்தை அவ்வளவு இலகுவிலும் விரைவிலும் சீர்படுத்த இடந்தரமாட்டா. உலகப் பொருளாதார வளர்ச்சியே குன்றப்போகிறது என்று சர்வதேச நாணய நிதியே எச்சரிக்கிறது.
தற்போது உக்ரைனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தின் பொருளதார விளைவுகளும், காலமாற்றத்தினால் உலகின் பல திசைகளிலும் ஏற்படும் வரட்சிகளும் வெள்ளங்களும், கொவிட் கொள்ளை நோயின் புதிய அலையும் ஒன்று சேர்ந்து பண்டங்களின் உற்பத்தியையும் அவற்றின் விநியோகத்தையும் பாதித்து, அதனால் அவற்றின் விலைகளும் உயர்ந்து, பணவீக்கம் உருவாகி அதனைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய வங்கிகள் வட்டிவீதங்களையும் உயர்த்துவதனால் இன்னுமொரு பொருளாதார மந்தத்தினை வளர்ச்சியடைந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன. அதன் பாதிப்புகளிலிருந்து இலங்கை போன்ற சிறிய நாடுகள் தப்பவே முடியாது. எனவேதான் ஜனாதிபதியின் முயற்சிகள் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை விரைவில் நீக்கமாட்டா எனத் துணிந்து கூறலாம். ஆனால் உள்நாட்டு வளங்களைப் பூரணமாகப் பயன்படுத்தி மக்களின் முழு முயற்சியுடன் அத்தியாவசிய உள்நாட்டுத் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டென்பதை மறுக்க முடியாது. ஆனால் அதற்கு ஒரு தடையாக அமைந்துள்ளது இலங்கையின் அரசியல் பொருளாதார சமூக அடிப்படை. அதனை உணர்ந்தவர்கள்தான் அறப்போராட்ட இளைஞர் சமுதாயம். எனவே அவர்களை பாசிஸ்டுகள் என்றும் தீவிரவாதிகளென்றும் அரசாங்க வட்டாரங்கள் பட்டம் சூட்டுவது மக்களை திசை திருப்பவே.
சிந்தனைச் சட்டக மாற்றம்
இதனைப்பற்றி ஏற்கனவே ஓரிரு கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் விளக்காமல் ஒன்றை மட்டும் வலியுறுத்த வேண்டியது கடமை. அதாவது, அறப்போராளிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுள் முக முக்கியமானதும் இன்றுள்ள ஆட்சியாளர்களால் வழங்கப்பட முடியாததுமான ஒன்றுதான் சிந்தனைச் சட்டக மாற்றம். பழைய ஒழுங்கிலே பிறந்து வளர்ந்து நன்மையடைந்த இன்றைய மூத்த அரசியல்வாதிகளால் அதனை மாற்றும் துணிவும் இல்லை அதற்கான திறனும் இல்லை. அந்தச் சந்ததியின் ஜனாதிபதியாக விளங்கும் விக்கிரமசிங்ஹ சிந்தனைச் சட்டக மாற்றத்தின் முழு எதிரி.
அதனாலேதான் போராளிகளை முற்றாக ஒழித்துக்கட்ட அவர் முற்பட்டுள்ளார். ஆனால் போராளிகளோ ஓயப்போவதில்லை. அதனை அடுத்துவரும் வாரங்களும் மாதங்களும் துல்லியமாகத் தெளிவுபடுத்தும். அவர்களது போராட்டம் இரு வேறுபட்ட சந்ததிகளுக்கிடையிலான ஒரு போராட்டம் என்பதையும் உணரவேண்டும். இது இலங்கையில் மட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் நடைபெற்று வருகிற ஒரு வளர்ச்சி. அதனை முதிர்ச்சிபெற்ற ஜனநாயக நாடுகளின் அரசுகள் இனங்கண்டு அப்பேராளிகளின் கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்குகின்றன. இளஞ் சந்ததியின் ஓயாத அழுத்தங்களில்லாமல் பெண்ணுரிமை, காலமாற்றம், மனித உரிமைகள் போன்ற விடயங்கள் உலக அரங்கிலே இன்று இடம் பெற்றிருக்கமாட்டா. எதிர்காலம் இன்றைய இளம் தலைமுறையின் கைகளில் என்பதையும் காலம் அவர்களின் பக்கம் நிற்கிறது என்பதையும் மூத்த சந்ததியினரும் தலைவர்களும் உணர்தல் அவசியம்.
முஸ்லிம் பிரபலங்கள்
ரணில் விக்கிரமசிங்ஹ ஜனாதிபதி போட்டியில் வெற்றி பெற்றதும் ஒரு முஸ்லிம் பிரபலம் அந்த வெற்றி அதிகார ஆசை பிடித்தவர்களுக்குக் கிடைத்த அடி என்று வருணித்தார். ஆனால் எந்த ஆசையால் ரணில் போட்டியிட்டார் என்பதை இந்தப் பிரபலம் விளக்குவாரா? எந்த ஆசையால் இந்த ஜனாதிபதி ராஜபக்சாக்களின் கூடாரத்துக்குள் நுழைந்தார் என்பதாவது இந்தப் பிரபலத்துக்கு விளங்குமா? ஆனால் ரணிலின் வெற்றிக்குப் புகழாரம் சூட்டியபின் அதற்குக் கிடைத்த கூலியாக தனக்கென ஒரு அமைச்சுப் பதவியைத் தட்டிக்கொண்ட இந்தப் பிரபலத்தின் சாமர்த்தியத்தை பாராட்டத்தான் வேண்டும்.
இன்னுமொரு பிரபலம், தான் பொறுப்புள்ள ஓர் அரசியல்வாதியென்று பறைசாற்றிக் கொண்டு ரணிலுக்கே இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கும் வல்லமை உண்டு என்றும் அதனாலேதான் அவருக்குத் தான் வாக்களித்ததாகவும் பிரஸ்தாபித்தார். அவருக்கும் விரைவில் ஏதாவது ஒரு பதவி கிட்டலாம்.
இப்படிப்பட்ட முஸ்லிம் பிரபலங்களின் அரசியல் சாகசங்களை நோக்கும்போது இன்னும் முஸ்லிம் சமூகம் வியாபார அரசியலைவிட்டு விடுபடவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அதனாலேதான் அண்மையில் அறப்போராளிகள் முஸ்லிம் சமூகத்துக்கு ஓர் எச்சரிக்கையையும் பிறப்பித்திருந்தனர். எனினும் இந்த வியாபார அரசியலுக்கு காலத்துக்குக் காலம் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் விதிவிலக்காய் இருந்துள்ளனர் என்பதையும் இன்னும் இருக்கிறார்கள் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.
அறப்போராளிகளின் விழிப்புணர்வையும், உலக அரங்கிலே அவர்களைப்போன்ற இளஞ் சந்ததிகள் எவ்வாறு போராடுகின்றார்கள் என்பதையும், அவர்கள் எதற்காகப் போராடுகின்றார்கள் என்பதையும் கிணற்றுத் தவளைகளாக வாழும் சில்லறை முஸ்லிம் பிரபலங்களுக்கு விளக்குதல் அறப்போருள் குதித்துள்ள முஸ்லிம் இளவல்களினதும் வெளியே இருக்கின்ற முஸ்லிம் புத்திஜீவிகளினதும் தலையாய கடமை.
தூரநோக்குடன் பிரச்சினைகளை அணுகும் ஆற்றல் எல்லாருக்கும் கிடைப்பதரிது. ஆனால் புத்திஜீவிகளிடையே அவ்வாறான ஆற்றலுள்ள ஆண்களையும் பெண்களையும் காணலாம். அவர்களின் கைகளிலேதான் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வருங்காலம் தங்கியுள்ளது என்பதை இன்னும் வலியுறுத்த முடியாது. பதவிக்காகவும் பணத்துக்காகவும் பல் இளித்தவர்களாற்தானே இந்த நாடே இன்று குட்டிச் சுவராகியுள்ளது. அவர்களுக்குள் முஸ்லிம் பிரபலங்களும் அடங்குவர் என்பதை மறுப்பாரும் உண்டோ?- Vidivelli