எஸ்.என்.எம்.சுஹைல்
நாடு அதலபாதாளத்தில் இருக்கிறது. நாட்டை சூறையாடியவர்கள் மக்கள் எழுச்சி மூலம் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், அரசியலமைப்பின் சட்ட ஓட்டைகள் மூலம் அந்த கள்வர்கள் தொடர்ந்தும் காப்பாற்றப்படுகின்றனர். இந்தவொரு சூழலில் ஜனாதிபதியாகும் அதிர்ஷ்டம் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்திருக்கிறது.
ஆசியாவின் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவர் என பெயர் பெற்ற ரணில் விக்ரமசிங்க மேற்கு நாடுகளின் நல்லபிப்பிராயத்தை பெற்றவர். மேற்கின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் ரணில், மத்திய கிழக்கு நாடுகளுடன் நெருங்கிப் பழகியதை நாம் கண்டதில்லை. எனினும், அவரது கடந்த கால அரசியல் நகர்வுகளானது அனைத்து நாடுகளின் நல்லபிப்பிராயத்தை பெற்றிருக்கின்றமை வெளிப்படையானதாகும்.
கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு தப்பியோடி ஜனாதிபதி பதவியை துறந்த பின்னர் அவரின் எஞ்சிய பதவிக் காலத்துக்காக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க மீது சர்வதேச நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன.
இந்நிலையில் இந்த இக்கட்டான சூழலில் நாட்டை மீட்டெடுப்பதற்கு ரணில் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதா? அல்லது அவரிடம் தொடர்ந்து ஆட்சியை கொடுப்பதன் ஊடாக ஊழல்வாதிகளும் மோசடிக் காரர்களையும் பாதுகாப்பதற்கு துணை போவதா? என்ற நிலை மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கின்றன.
பொதுஜன பெரமுனவினர் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கே ரணிலை தெரிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ரணிலுடன் இணைந்து செயற்படுவதில் தாழ்வுச் சிக்கல் இருப்பதாகவே தெரிகிறது. மக்கள் விடுதலை முன்னணியானது வழமையான தமது எதிர்ப்பு அரசியலை மேலும் வலுப்படுத்திக்கொண்டு மக்கள் போராட்டத்தை இன்னும் உத்வேகப்படுத்திக்கொண்டிருக்கிறது.
இது அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு பொருத்தமான தருணமா? அல்லது பாதாளத்தில் உள்ள நாட்டை மீட்டெடுக்க இணைந்து செயற்படும் தருணமா என்பதை அனைத்து தரப்பினரும் தீர்மானிக்க வேண்டும்.
இது இப்படியிருக்க, இலங்கையில் முதலாவது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தன நாட்டின் முதலாவது முஸ்லிம் வெளிவிவகார அமைச்சராக ஏ.சீ.எஸ்.ஹமீதை நியமித்திருந்தார். பின்னர், டீ.பி.விஜேதுங்க இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றபோது மீண்டும் ஏ.சீ.எஸ்.ஹமீட் வெளிவிவகார அமைச்சரானார். 28 வருடங்களின் பின்னர் குறித்த அமைச்சு பதவியானது மற்றொரு முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கோட்டா அரசில் நீதி மற்றும் நிதி அமைச்சு பதவிகளை வகித்த அலி சப்ரிக்கு குறித்த அமைச்சுப் பதவி கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே சந்திரிக்காவின் அமைச்சரவையில் மற்றுமொரு சிறுபான்மை உறுப்பினரான லக்ஷ்மன் கதிர்காமர் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்தார். நாட்டில் உள்நாட்டுப்போர் உக்கிரமடைந்து நாடு நெருக்கடியை சந்தித்திருந்த போது சந்திரிக்கா சாமர்த்தியமாக ஒரு தமிழரை வெளிவிவகார அமைச்சராக நியமித்து நாட்டுக்கு சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான வழியை சமைத்துக்கொண்டார்.
மீண்டும் ஒருமுறை நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்தருவாயில் ரணில் விக்கிரமசிங்க அலிசப்ரியை வெளிவிவகார அமைச்சராக நியமித்திருப்பது இராஜதந்திரமாகவே பார்க்கவேண்டியுள்ளது.
முஸ்லிம் நாடுகளின் உதவிகளைப் பெற்று நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணப்பாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கலாம். இதற்காகவே அலி சப்ரியை அப் பதவிக்கு நியமித்திருக்கலாம். அல்லது அவரது ஆங்கிலப் புலமை இதற்குக் காரணமாக இருக்க கூடும். எனினும் இந்த நேரத்தில் முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமா? தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க வேண்டுமா? என்ற கேள்வி எழ ஆரம்பித்திருக்கிறது.
பெரும்பாலும் அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து பயணிக்க விரும்புவதாகவே தெரிகிறது. ஏற்கனவே, அமோகமாக சிங்கள மக்களின் ஆதரவை பெற்று அரியாசனம் ஏறிய ராஜபக்சாக்கள் துரத்தப்பட்டதனால் இந்த அரசாங்கத்தில் இணைந்தால் நாளை தமக்கும் இதே நிலை ஏற்படும் என்ற அச்சம் இவர்களை ஆட்கொண்டிருக்கலாம். முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்றோ வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்பது பலரது உளக்குமுறல், இருந்தாலும் மக்கள் எழுச்சிக்கு பின்னரும் இவர்கள் தமது ஏமாற்று அரசியலை மாற்றிக்கொள்ளாதிருப்பார்களேயானால் எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு எதிரான பேராட்டம் வலுவாக வெடிக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இது இப்படியிருக்க, இன்னும் இரண்டரை வருட காலத்திற்கு ரணில் அரசாங்கமே அரசியலமைப்பின் பிரகாரம் ஆட்சியில் இருக்கப் போகிறது (மக்கள் எழுச்சி உக்கிரமடைந்தால் தவிர). இந்த சந்தர்ப்பத்தில் நாட்டை மோசமான பொருளாதார பின்னடைவிலிருந்து மீட்டெடுக்க இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம் கட்சிகள் உதவ வேண்டுமா என்பதை முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்களும் புத்திஜீவிகளும் தெளிவுபடுத்த வேண்டும். அத்தோடு, சர்வகட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் கட்சிகள் பங்கேற்க வேண்டுமா என்பதையும் விரைவாக தீர்மானிக்க வேண்டும்.
கடந்த ஒரு தசாப்தகாலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் உக்கிரமடைந்திருந்தமையினால் அரபு நாடுகளின் எதிர்ப்பை இந்நாடு சந்தித்தது. குறிப்பாக ராஜபக்சாக்கள் முஸ்லிம் நாடுகளை ஆத்திரமூட்டும் விதமாக செயற்பட்டதன் காரணமாக எமக்கு கிடைக்கப்பெறும் உதவிகளும் சலுகைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த முஸ்ம்களின் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டபோது இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விடுத்த கோரிக்கையை அலட்சியம் செய்தமை முஸ்லிம் நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது கோபம்கொள்ள பிரதான காரணமாக இருக்கின்றது. அத்தோடு, சில இஸ்லாமிய நாடுகளின் தொண்டு நிறுவனங்களுக்கு தீவிரவாத சாயம் பூசி அவற்றிக்கு தடை விதித்தமையும் ராஜபக்சாக்களுக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டாக இருக்கின்றது.
ராஜபக்சாக்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதேபோன்று, ராஜபக்சாக்களை காப்பாற்றுபவர்களுக்கும் இடமளிக்க முடியாது. ஆனால், எமது நோக்கம் பழிவாங்குவதல்ல, நாட்டின் தற்போதைய சூழலில் எவ்வாறு நாமும் எமது பக்களிப்பை செய்ய முடியும் என்பதாகும்.
எனவே, தற்போது வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் அலி சப்ரிக்கு ஒத்துழைப்பு வழங்கி மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. இதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து பேச்சு நடத்தி கொள்கையளவில் ஒரு உடன்பாட்டிற்கு வருவது சிறந்தாகும்.
அமைச்சுப் பதவிகள் பெறுவதோ அல்லது தேர்தல் நோக்கங்களை அடைந்துகொள்வதோ இந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாக தோன்றவில்லை. நாட்டின் நலன்கருதி புதிய கொள்கையுடன் ஒன்றிணைந்து தேசத்தை கட்டியெழுப்புவதற்காக பேச்சு நடத்துவதில் தவறில்லை.
இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்குள் கலந்துரையாடல் அவசியமானதாகும். அத்தோடு, ஊழல்வாதிகளுக்கும் மோசடிக்காரர்களுக்கும் எதிரான நிலைப்பாட்டிலும் மாற்றமிருக்கக் கூடாது என்பதில் தெளிவு அவசியமானதாகும்.- Vidivelli