நாட்டில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து, மீதமுள்ள இரண்டரை வருடங்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட டளஸ் அழகப்பெருமவை விடவும் ரணில் விக்ரமசிங்க 52 வாக்குகளை அதிகம் பெற்றிருந்தார். இதன் மூலம் பாராளுமன்றத்தில் தனக்கிருக்கும் ஆதரவை ரணில் நிரூபித்துள்ளார். ஆட்சியிலிருந்த பொது ஜன பெரமுனவின் ஆதரவு மற்றும் அதன் தலைவர்களது ஆசீர்வாதத்துடனேயே ரணில் விக்ரமசிங்கவால் ஜனாதிபதியாக முடிந்தது என்பதே யதார்த்தமாகும்.
அந்த வகையில் தான் பதவியேற்ற கையோடு, ராஜபக்சக்களை வீட்டுக்கு அனுப்ப கடந்த 100 நாட்களுக்கும் மேலாக இரவு பகலாகப் போராடிய போராட்டக்காரர்களை வேட்டையாட ஆரம்பித்திருக்கிறார். பதவியேற்ற அன்றைய தினமே காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு உத்தரவிட்ட ரணில், தனது மற்றொரு முகத்தைக் காட்ட ஆரம்பித்தார். போராட்டத்தில் முன்னின்ற 9 பேர் அன்று கைது செய்யப்பட்டதுடன் மேலும் பலர் இத் தாக்குதல்களில் காயமடைந்தனர்.
அது மாத்திரமன்றி கடந்த சில தினங்களாக போராட்டக்காரர்களை குறிவைத்த கைதுகளும் அதிகரித்துள்ளன. நேற்று முன்தினம் போராட்டக்காரர் ஒருவர் வெளிநாடு ஒன்றுக்குப் பயணிக்கத் தயாராகவிருந்த நிலையில் விமானத்தினுள் வைத்து பலாத்காரமாக கைது செய்யப்பட்டார். அதேபோன்று இப் போராட்டத்தில் தொடர்ச்சியாக பங்கெடுத்த கிறிஸ்தவ மத குரு ஒருவரைக் கைது செய்வதற்கு அவரது தேவாலயத்திற்கு பொலிசார் நேற்றைய தினம் சென்றுள்ளனர். அடுத்து வரும் நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, கடந்த போராட்டங்களின்போது அரச கட்டிடங்களுக்குள் பிரவேசித்தவர்கள் மீது வழக்குகளைத் தாக்கல் செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
‘கோத்தா வீடு செல்’ என்ற போராட்டம் பலமடைந்தது போன்று ‘ரணில் வீடு செல்’ என்ற போராட்டம் பலமடைந்துவிடக் கூடாது என்பதில் ஜனாதிபதி குறியாகவிருக்கிறார். அதற்காக அவர் சட்டத்தை உச்சபட்சமாகப் பயன்படுத்த முற்படுகிறார் என்பதையே அண்மைய நாட்களாக நடக்கும் சம்பவங்கள் சுட்டிநிற்கின்றன. இதற்காகவே அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்தியிருக்கிறார். நேற்றைய தினம் 120 உறுப்பினர்களின் ஆதரவுடன் அவசர காலச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை இதனையே காட்டுகிறது.
போராட்டம் இடம்பெற்ற சமயங்களில் தான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறிய அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவிக்கு வந்தவுடன் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்க முற்படுவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
கடந்த சில நாட்களாக பொது ஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், போராட்டக்காரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கள்வர்கள் என்றும் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் பைத்தியங்கள் என்றும் கூட பகிரங்கமாகத் தூற்றியுள்ளனர். இவை மக்களை மேலும் ஆத்திரமூட்டும் செயல்களே அன்றி வேறில்லை. தமது அடிப்படை உரிமைகளைக் கோரிப் போராடிய மக்களை இவ்வாறு தூற்றவும் தாக்கவும் கைது செய்து சிறையிலடைக்கவும் முனைவது நாட்டில் இன்னுமொரு வன்முறைக்கும் இரத்தக்களரிக்குமே வழிவகுக்கும்.
எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தன்னை ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்திய பொது ஜன பெரமுனவினரையும் ராஜபக்சாக்களையும் திருப்பதிப்படுத்த முனையாது, நாட்டு மக்களை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதே காலத்தின் தேவையாகும்.
ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தால், தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கும் என நாட்டு மக்கள் நம்பியிருந்தார்கள். இன்றும் மக்கள் மத்தியில் அந்த நம்பிக்கை இருக்கிறது. அவர் அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமே தவிர, இருக்கின்ற நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்யக் கூடாது.
அந்த வகையில், போராட்டக்காரர்களை வேட்டையாடும் செயற்பாடுகளைக் கைவிட்டு, மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்துக் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்க விரும்புகிறோம்.- Vidivelli