நெல்லிகல தேரரின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதாகும்
ஜெய்லானி பள்ளி நிர்வாக சபை உபதலைவி ரொசானா அபு சாலி
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
எங்கள் குடும்பம் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அபுசாலியின் கூரகல பிரதேசத்தைச் சொந்த இடமாகப் பாவித்து அங்கு ஆட்சி செய்யவில்லை. எங்கள் குடும்பம் சிங்கள அரசர் காலம் முதலே அங்கு வாழ்ந்து சமூகப்பணிகளைச் செய்தது. முஸ்லிம்களுக்கென்று தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை நிறுவியது. அரசர் காலம் தொட்டு முஸ்லிம்கள் இனவாதிகளல்ல. சிங்கள அரசர்களுடனும் மக்களுடனும் நல்லுறவைப்பேணி வருபவர்கள். நாங்கள் குடும்பத்தின் பிரச்சினையை நாட்டுக்குக் கொடுத்துள்ளதாக நெல்லிகல வத்துகும்புர தம்மரதன சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலொன்றில் தெரிவித்துள்ள கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இதனைக் கண்டிக்கின்றேன். இது பெளத்த மக்களை தவறாக வழிநடாத்துவதாகும் என தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாக சபையின் உபதலைவி ரொசானா அபுசாலி விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் அண்மையில் சிங்கள யுடியூப் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் அமைச்சர் அபுசாலியின் குடும்பத்தைச் சாடியிருந்தார்.” தப்தர் ஜெய்லானி பிரதேசமான கூரகலயை அபுசாலி தனது சொந்த இடமாக பாவித்து வந்தார். இந்த இடத்திலே பள்ளிவாசல் நிறுவப்பட்டது. இது ஒரு குடும்பம் ஆட்சி செய்த பிரதேசம் அவர்கள் குடும்பப்பிரச்சினையை இன்று நாட்டுக்குக் கொடுத்துள்ளார்கள். இனவாத பிரச்சினையிலிருந்து கூரகலயை நான் விடுத்துள்ளேன். முஸ்லிம்களுக்கு நான் எந்த அநியாயமும் செய்யவில்லை. கூரகலயில் இன ஒற்றுமையையயும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நான் முன்னெடுத்துள்ளேன்” என நெல்லிகல தேரர் தனது நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
தேரரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலே ரொசானா அபுசாலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் “எங்கள் குடும்பம் கூரகலயை தங்களது தனிப்பட்ட சொந்த இடமாக கருதவில்லை. சிங்கள அரசர் காலம் முதல் அங்கு வாழ்ந்தது எனது பாட்டனாரே. 1890 இல் தப்தர் ஜெய்லானியில் கந்தூரி வைபவத்தை ஆரம்பித்து வருடாந்தம் நடத்தினார். கொடியேற்றத்தையும் ஆரம்பித்தார்.
எங்கள் குடும்பத்தினரினாலே 1922 ஆம் ஆண்டு தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் நிறுவப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வக்பு சபை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
எங்களது குடும்பம் பள்ளிவாசலை நிர்வகித்தது மூலம் தஃவாப் பணிகளையே முன்னெடுத்தது. நாங்கள் இனவாதத்தை போஷிக்கவில்லை. நெல்லிகல. தேரர் பிழையான கருத்துக்களைத் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது என்றார்.
நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் முஸ்லிம்களின் மரபுரிமைப் பிரதேசமான கூரகலயில் பாரிய பன்சலை உட்பட புனித பூமி திட்டடொன்றினை நிறுவியுள்ளார். இதற்கு 15 ஆயிரம் இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றார்.- Vidivelli