(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தற்போது சவூதி அரேபியாவைச் சென்றடைந்துள்ளதாக பரப்பப்பட்டுவரும் புரளியில் எவ்வித உண்மையுமில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்களால் மறுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளார் என இலங்கையின் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் செய்தியில் எவ்வித உண்மையுமில்லை என நீண்ட காலமாக சவூதி அரேபியாவை வதிவிடமாகக் கொண்டுள்ள அப்துல் காதர் மசூர் மெளலானா தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவின் படம் சில வருடங்களுக்கு முன்பு கொழும்பு கல்கிசை ஹோட்டல் ஒன்றில் வைபவமொன்றின்போது எடுக்கப்பட்ட படமாகும் அப்பாவி மக்களை ஏமாற்றும் வகையில் இந்தப்பதிவுகள் அமைந்துள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையிலிருந்து இலங்கையின் விமானப்படையின் விமானம் மூலம் மாலைதீவுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி அங்கிருந்து சவூதி அரேபியாவின் எயார்லைன் SV788 இலக்க விமானம் மூலம் சிங்கப்பூரைச் சென்றடைந்துள்ளார்.
சவூதி அரேபியாவுடன் தொடர்புகள் உள்ள கலாநிதி அஷ்ஷெய்க் எம்.யூ.எம். தாஸிமும் முன்னாள் ஜனாதிபதி சவூதி அரேபியாவுக்குச் செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சவூதி அரேயியாவின் குடிவரவு குடியகல்வு சட்டவிதிகள் அந்த நாட்டின் பிரஜைகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் மிகக் கடுமையாக பேணப்படுகின்றன. இலங்கையர்களுக்கு உம்ரா விசாக்கள் இணையவழியூடாகவும் விசிட் விசாக்கள் கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்தினூடாகவும் வழங்கப்படுகின்றன. இதில் கடுமையான விதிகள் கையாளப்படுகின்றன. இதேவேளை தொழில் மற்றும் வணிக விசாக்கள் சவூதி பிரஜைகளின் சிபாரிசுகளின் பேரில் வழங்கப்படுகின்றன.- Vidivelli