கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா.
‘முஸ்லிம்களுக்கோர் எச்சரிக்கை’ என்ற தலைப்பில் அறப்போராளிகளின் காணொளி நறுக்கொன்றை அண்மையில் பார்க்க நேர்ந்தது. அதை அனுப்பிவைத்த என் நண்பருக்கு நன்றிகள். அதனை வாசித்த முஸ்லிம்களுக்கு அது வீணான மனக்கவலையை ஏற்படுத்தி இருக்குமென நம்ப இடமுண்டு. அதனையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் குரலென பலரையும் நம்ப வைத்திருக்கலாம். அப்படிக் கருதுவது தவறு என்பதையும் அந்த எச்சரிக்கையின் யதார்த்தத்தைப்பற்றிய ஒரு விளக்கத்தையும் இக்கட்டுரை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறது.
வரலாற்றில் ஒரு திருப்புமுனை
சுதந்திர இலங்கை ஒரு வரலாற்றுத் திருப்புமுனையை இன்று எட்டியுள்ளது. கடந்த ஏழு தசாப்தங்களாக இந்த நாட்டின் அரசியலையும் பொருளாதாரத்தையும் சமூக வளர்ச்சியையும் வெளிநாட்டுக் கொள்கைகளையும் இயக்கிவந்த பேரினவாதச் சிந்தனைச் சட்டகம் அதன் உண்மையான பலஹீனத்தை இப்போது அம்பலப்படுத்தியுள்ளது. இன்று நாட்டிலே நிலவும் அரசியல் கொந்தளிப்பும் பொருளாதார நெருக்கடிகளும் சமூக அமைதியின்மையும் வெளிநாடுகளின் அழுத்தங்களும் அந்தச்சட்டகம் தந்த விஷப் பரிசுகள். எனவே அந்தச் சட்டகத்தையே மேலும் தொடரவிட்டு இன்னும் பல நெருக்கடிகளுக்கு நாட்டையும் அதன் மக்களையும் பலியாக்குவதா அல்லது அதனை கைவிட்டு, புதியதோர் முற்போக்கான சிந்தனைச் சட்டகத்தின் அடிப்படையில் சுதந்திர இலங்கையை கட்டியெழுப்புவதா என்ற கேள்வியே வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்தத் திருப்புமுனையை தோற்றுவித்தவர்கள்தான் இன்றைய அறப்போரிலே குதித்துள்ள இளைஞர் படை. இந்த இளைய தலைமுறையினரைப்பற்றியும் சிந்தனைச் சட்டகத்தைப்பற்றியும் கடந்த வாரக் கட்டுரை விளக்கமளித்தது.
கன்னி வெற்றி
காலிமுகத்திடலை மையமாக வைத்து பல அர்ப்பணிப்புகளின் மத்தியில் நிராயுதபாணிகளாகத் திரண்டு இன, மத, மொழி வேறுபாடின்றி இன்றைய நெருக்கடிகளுக்குப் பிரதான காரணமாய் அமைந்த அரசாங்கத்தையும் அதன் தலைவர்களையும் உடன் பதவிவிலக வேண்டுமென்று கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஓயாது போராடி முதலிலே பிரதமரையும் அதன்பின்னர் ஜனாதிபதியையும் பதவி துறக்கச் செய்தமையை போராளிகளின் கன்னி வெற்றி எனக்கருதலாம். இந்தப் போராட்டமும் வெற்றியும் இலங்கையின் எதிர்கால வரலாற்றிலே ஒரு காவியமாகப் பாடப்படும் என்பதிலே சந்தேகமில்லை. ஆனால் அத்துடன் போராட்டம் நின்று விடவில்லை. போராளிகள் கோரும் அடிப்படை மாற்றம் என்பது ஒரு புதிய சிந்தனைச் சட்டகத்தின் அடிப்படையில் அரசியல் யாப்பினையும், நாட்டின் ஆட்சிமுறையையும் பொருளாதார அமைப்பையும் மாற்றி அமைக்கும்வரை தொடரும். அதற்குத் தடையாக விளங்கும் அனைத்தையும் நீக்குவதே அதன் பிரதான குறிக்கோள். இந்தப் பின்னணியிலேதான் முஸ்லிம்களை நோக்கி அவர்கள்விடுத்துள்ள எச்சரிக்கையை எடைபோட வேண்டும்.
மதில்பூனை முஸ்லிம் பிரதிநிதிகள்
இலங்கையின் ஜனநாயக அரசியல் வரலாற்றிலே பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதிகளுள் ஒருசிலரைத்தவிர ஏனையோரெல்லாம் மதில்மேல் படுத்திருக்கும் பூனைபோன்று எந்தப்பக்கம் பாய்ந்தால் தமக்குப் பதவியும் பணமும் கிடைக்குமோ அந்தப்பக்கம் பாய்ந்து சுய இலாபம் காண்பவர்களாகத்தான் செயற்பட்டு வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் விபரிப்பதாயின் ஒரு நூலையே எழுதிவிடலாம். 1990களின் பின்னர் முஸ்லிம்களின் நலன் தனிப்பட்ட முஸ்லிம் கட்சிகள் மூலமாகத்தான் கிடைக்கும் என்ற ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கி வளர்த்து முன்னர் தனித்தனியாகப் பாய்ந்தவர்கள் அதன் பிறகு கூட்டாகவே பாயத்தொடங்கினர்.
இந்தக் கட்சிகளைப்பற்றி ஏற்கனவே பல கட்டுரைகளில் விமர்சிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிகளுக்குள் இருந்த பிரதிநிதிகளும் அக்கட்சிகளின் ஒழுங்குகள் அவர்களை சுதந்திரமாகப் பாய்வதற்குத் தடையாக இருந்ததைக் கண்டு கட்சிகளின் கட்டுப்பாடுகளையும் மீறி பாயத்தொடங்கினர். இந்தப் பாய்ச்சலே மாஜி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை ஒரு சர்வாதிகாரியாக மாற்றி அந்தச் சர்வாதிகாரியின் நாசகாரக் கொள்கைகளாலே நாடே வங்குறோத்தடைந்ததை இனியும் விபரிக்கவும் வேண்டுமா? இந்தக் கேவல அரசியல் முஸ்லிம்களுக்குத் தேவைதானா?
இந்தப் பச்சோந்தி அரசியலால் முஸ்லிம்கள் நம்பிக்கை துரோகிகள் என்ற இழிவுப்பெயருக்கு ஆளானது ஒருபுறமிருக்க, முஸ்லிம் பிரதிநிதிகளின் செப்படிவித்தைகளாலேதான் நாடு இன்று நாசமாகியுள்ளது என்பதை வளர்ந்துவரும் இளம் சமுதாயம் உணர்ந்துள்ளது. எனவே, திருப்பு முனையொன்றைச் சந்தித்திருக்கும் இலங்கையின் எதிர்காலம் முஸ்லிம் பிரதிநிதிகளின் வியாபார அரசியலால் ஒரு தவறான திசைக்குத் திரும்பிவிடுமோ எனப்பயந்த போராளிகள் அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதிலே முஸ்லிம்களுக்கெதிரான இனத்துவேஷம் இல்லை. மாறாக, நாட்டுப்பற்றே வெளிப்படுகின்றது. இதனை முஸ்லிம் புத்திஜீவிகள் மக்களுக்கு விளக்க வேண்டும். போராளிகளின் எச்சரிக்கைக்கு ஒரு பரீட்சையாக அமையப்போகிறது இரண்டொரு தினங்களில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தெரிவு. இக்கட்டுரை வெளிவரும்போது அப்பரீட்சையின் முடிவும் தெரிந்துவிடும்.
ரணிலின் ரகளை
இந்தத் தலைப்பிலே ஒரு கட்டுரை ஏற்கனவே இப்பத்திரிகையில் வெளிவந்துள்ளது. தோல்வியின் நாயகன் ரணில் விக்கிரமசிங்ஹ, எந்த ஒரு தேர்தல் தொகுதியிலும் மக்களால் தெரிவுசெய்யப்படாது, பின்கதவால் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து, அரசியல் நகர்வுகளை தந்திரமாக அவதானித்து, ராஜபக்சாக்களின் பாதுகாவலன் என்ற நாமத்தையும் பெற்று, அறப்போராளிகளின் அயராத ஆர்ப்பாட்டங்களினால் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியைத் துறக்க அந்த வெற்றிடத்துக்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு, இப்போது அவரை நியமித்த ஜனாதிபதியே நாட்டைவிட்டோட அந்த இடத்தைக் கைப்பற்றத் துடிக்கும் ஓர் அரசியல் நரி. இவரின் அண்மைக்கால கைங்கரியங்களில் ஒன்றிரண்டைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
முதலாவதாக, 2005–15 மகிந்த ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரித்துத் தண்டனை வழங்குவதாக தேர்தல் பிரச்சாரங்களிலே வாக்குறுதி வழங்கி, 2015 இல் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராகப் பதவியேற்றபின் அந்த வாக்குறுதிகளை காற்றிலே பறக்கவிட்டு ராஜபக்சாக்களின் பாதுகாவலானாக மாறியதை நாடு மறக்கவில்லை. இரண்டாவதாக, இவரின் பிரதமர் ஆட்சியிலேதான் அன்றைய மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் பணமுறி மோசடிசெய்து வங்கியையே கொள்ளையடிக்க அதனைப் பார்த்துக்கொண்டிருந்ததுமல்லாமல் அந்தத் திருடனை தப்பியோடச் செய்ததும் இந்த மாமனிதன்தானே.
மூன்றாவதாக, முஸ்லிம் தீவிரவாதக் கும்பலொன்று நாசகாரச் செயலொன்றில் ஈடுபடவிருப்பதாக வெளிநாட்டு உள்நாட்டு இரகசியச் செய்திகள் தனது அரசின் காதுகளை எட்டியும் அதனை ஜனாதிபதியின் பொறுப்பிலேவிட்டுவிட்டு வாழாவிருந்த ஒரு வேடிக்கை மனிதர். இப்போது பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண சர்வதேச நாணய நிதியினை அணுகி அதன் உதவியால் மட்டும் சுமுக நிலை ஏற்பட்டுவிடும் என்று கனவுகாணும் ஒரு கற்பனைக் கதாநாயகன். இவர் ஜனாதிபதியானால் இலங்கையின் எகிப்து நாட்டு எல்-சிசியாக இவர் மாறலாம் என்ற ஒரு பயம் அவதானிகளிடம் குடிகொண்டுள்ளது. எகிப்தின் இன்றைய ஜனாதிபதி எல்-சிசி சுமார் 800 போராட்ட வாலிபர்களை கொன்று குவித்தபின் வெளிநாட்டுச் சக்திகளினதும் உள்நாட்டுப் பணமுதலைகளினதும் ஆதரவுடன் பதவிக்கு வந்தவர். அவரின் மறுபிறவியாக ரணில் மாறலாம் என்பதற்கு அறிகுறிகள் உண்டு.
அறப்போராளிகளின் எதிரி
ராஜபக்சாக்களின் பாதுகாவலன் என்பது ஒரு புறமிருக்க அறப்போராளிகள் தேடும் சிந்தனைச் சட்டக மாற்றத்தின் பரம எதிரி இவர் என்பதையும் அப்போராளிகள் அறிவர். ஆனாலும் பழமையின் பாதுகாவலனான இவர் காலிமுகத்திடல் உலகத்தின் கவனத்தை ஈர்த்தபோது அறப்போராளிகளை தம்வசப்படுத்தும் முகமாக காலிமுகக்களத்தை பாதுகாப்புத் துறையினர் முற்றுகையிடக் கூடாதென ஒரு அறிக்கையை விட்டார். அத்துடன் அவர் அறிமுகப்படுத்திய வரிக்கொள்கைள் தேவையானதும் அதே சமயம் சர்வதேச நாணய நிதியைத் திருப்திப்படுத்துவதாகவும் அமைய அவற்றை சிந்தனைச்சட்டக மாற்றத்தின் ஆரம்பம் என்று அவர் வருணித்தது அறப்போராளிகளை ஏமாற்றவே என்பதையும் அறிவர். அந்த மாற்றங்கள் யாவும் பழைய சட்டகத்தை பலப்படுத்த உதவுமே ஒழிய அதனை மாற்றமாட்டாது.
ரணிலின் உண்மையான தோற்றம் இப்போதுதான் வெளிப்படத் தொடங்கியுள்ளது. நடைமுறையிலுள்ள அரசியல் சட்டத்தை பாதுகாக்கப்போவதாகவும், அறப்போராளிகளை பாசிஸ்டுகள் என்று அவர் வருணித்ததும், அவருடைய வீட்டைத் தீக்கிரையாக்கியவர்களும் போராளிகளே என்று எந்த ஆதாரமுமின்றி குற்றஞ் சுமத்தியதும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பாதுகாப்புத் துறைக்கு கட்டளை இடுவதாக அறிவித்ததும், மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்ததும், காலிமுகத்திடலை ஹெலிகொப்டர்களால் நிறைக்கப் போவதாகக் கூறியதும் போராட்டத்தை எப்படியாவது ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து போராளிகளையும் சிறைக்குள் தள்ளவே என்பது தெளிவாகின்றது. எனவேதான் போராளிகள் அவரின் எதிரிகளாக மாறி “கோத்தாவே போ” என்ற குரல் இப்போது “ரணிலே போ” என்று கேட்கத் தொடங்கியுள்ளது. அதன் முடிவை தீர்மானிக்கப்போகிறவர்கள் பாராளுமன்றப் பிரதிநிதிகள்.
முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எச்சரிக்கை
போராளிகள் விடுத்த எச்சரிக்கை முஸ்லிம்களுக்கல்ல, அவர்களை அடகுவைத்துப் பிழைக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கே. வரப்போகும் தெரிவில் முஸ்லிம் பிரதிநிதிகள் எடுக்கும் முடிவு இந்த நாட்டின் தலைவிதியை மட்டுமல்ல, முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியையும் தீர்மானிக்கப்போகிறது. கோடிக்கணக்கான பணம் பிரதிநிதிகளின் ஆதரவுக்காக கொட்டப்படுகிறதாகச் செய்திகள் வெளியாகின்றன. அந்தப்பணத்துக்கு விலைபோகும் பிரதிநிதிகளுக்குத் தக்க பாடம் கற்பிப்பது சமூகத்தின் கடமை. முஸ்லிம் புத்திஜீவிகள் இவர்களின் நடமாட்டங்களை விழிப்புடன் கவனித்து அவர்களின் திருகுதாளங்களை அம்பலப்படுத்த வேண்டும். இந்த அறப்போராட்டம் புனிதமானது. அதிலே குதித்துள்ள இளைய தலைமுறையினர் இனவாதிகளல்லர். அவர்கள் சகல இன மக்களையும் சமநிலையில் வைத்து ஜனநாயக விழுமியங்களைப் பேணி எல்லா மக்களினதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு சிந்தனைச் சட்டகத்தின்கீழ் இந்நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கப் போராடுகின்றனர். அதற்கு எதிரிகளாக முஸ்லிம் பிரதிநிதிகள் செயற்படக் கூடாது.- Vidivelli