ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்தமை சட்டவிரோதமானது

எழுவர் கொண்ட நீதியரசர் குழு ஏகமனதாக தீர்ப்பு

0 1,133

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை  கடந்த நவம்பர் 9 ஆம் திகதி   2096/70 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது என உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

பிரதமர் நீதியரசர்  நளின் பெரேரா தலைமையிலான ஏழு பேர் கொண்ட நீதியரசர்களே ஏகமனதாக இந்த தீர்ப்பை அறிவித்தனர். ஜனாதிபதியின் குறித்த வர்த்தமானி அறிவித்தலானது, அவரது சட்ட ரீதியிலான அதிகாரங்களுக்கு அப்பால் சென்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதனால் அது சட்ட வலுவற்றது எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்தது. அதனால் அந்த வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்ட தேர்தலுக்கான அறிவிப்பும் வலுவற்றது என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், அது தொடர்பில் முன்வைக்கப்பட்ட இடையீட்டு மனுக்கள் தொடர்பில் கடந்த 4,5,6 மற்றும் ஏழாம் திகதிகளில்  சுமார் 28 மணி நேரம் உயர் நீதிமன்றில் முழுமையான விசாரணைகள் இடம்பெற்றன. பிரதம நீதியரசர் நளின் பெரேராவின் கீழ் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, புவனேக அலுவிஹார, விஜித் மலல்கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்ணான்டோ ஆகிய எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் இம்மனுக்கள் விசாரிக்கப்பட்டன.

இந்த 10 அடிப்படை உரிமை மீறல்கள் மனு தொடர்பில் கடந்த 4 ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகிய நிலையில்  மனுதாரர்கள் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே. கனக ஈஸ்வரன்,  திலக் மாரப்பன, டிரான் கொரயா, ஜயம்பதி விக்ரமரத்ன, எம்.ஏ.சுமந்திரன், ஜே.சி.வெலி அமுன, ஜெப்ரி அழகரட்னம், சுரேன் பெர்ணான்டோ, இக்ராம் மொஹம்மட் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோரும் பிரதிவாதியான ஜனாதிபதிக்கு பதிலாக பெயரிடப்பட்ட  சட்ட மா அதிபர் சார்பில் சட்ட மா அதிபர்  ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய, சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா உள்ளிட்ட குழுவினரும்  வாதங்களை முன்வைத்தனர்.

அத்துடன் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் இடையீட்டு மனுதாரர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தனவும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வாவும், பேராசிரியர் ஜகத் வெல்லவத்தகே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும், கலாநிதி சன்ன ஜயசுமன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவும், சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கனிஷ்க விதாரனவும் வாதங்களை முன்வைத்தனர். இதற்கு மேலதிகமாக  மேலும் 6 இடையீட்டு மனுதாரர்கள் அடிப்படை  உரிமை மீறல் மனு மீது தமது வாதங்களை முன்வைத்தனர்.

இந் நிலையிலேயே இந்த 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளின் தீர்ப்புக்காக திகதி குறிக்கப்படாது அவை ஒத்திவைக்கப்பட்டு, அதுவரை ஜனாதிபதியின் பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்கப்ப்ட்டது.

இந் நிலையில் நேற்றுக் காலை உயர் நீதிமன்ற பதிவாளர், இந்த 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலான விசாரணையின் தீர்ப்பு மாலை 4.00 மணிக்கு அறிவிக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி நேற்று பிற்பகல் 1.30 மணி முதல் உயர் நீதிமன்றில் பரபரப்பு நிலை ஏற்பட்டது. உயர் நீதிமன்றத்தைச் சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு நீதிச் சேவை பொலிஸ் பிரிவின் பாதுகாப்புக்கு மேலதிகமாக அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் விஷேட பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இந் நிலையில் உயர் நீதிமன்றின் 502 ஆம் இலக்க விசாரணை அறை பிற்பகல் 1.30 மணியின் பின்னர் முற்றாக மூடப்பட்டு, அங்கு பொலிஸாரும், பொலிஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விஷேட தேடுதலும் நடத்தப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. இந் நிலையில் பிற்பகல் 3.00 மணியின் பின்னரே அந்த விசாரணை அறைக்குள் சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்டனர்.

மாலை 4.00 மணிக்கு தீர்ப்பு அரிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த போதும் நீதியரசர்கள் மன்றுக்கு வரும் போது நேரம் மாலை 4.55 ஐ  எட்டியது. இந் நிலையில் நீதிமன்றுக்கு  நீதியரசர்கள் வருகை தந்தவுடன் பிரதம நீதியரசர் நளின் பெரேரா தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்.

எவ்வாறாயினும் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் போது மனுதாரர் தரப்பின் அனைத்து சட்டத்தரணிகளும் மன்றில் இருந்த போதும், பிரதிவாதிகள் தரப்பில் சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய , சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி  தப்புல டி லிவேரா உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர். எனினும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் மன்றில் வாதங்களை ஏற்கனவே முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, அலி சப்ரி, சஞ்ஜீவ ஜயவர்தன, மனோகர டி சில்வா ஆகியோர் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.  இந் நிலையிலேயே பிரதம நீதியரசர் நளின் பெரேரா தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்.

அவர் முதலில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் பெயர் விபரங்கள் மற்றும் இடையீட்டு மனுதாரர்கள், சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரானோரின் பெயர் விபரங்களை அறிவித்து தீர்ப்புக்கான ஆரம்பத்தை அமைத்துக் கொண்டதுடன், தமது தீர்ப்பு ஏகமனதான தீர்ப்பு என்பதை அறிவித்தார்.

‘ அரசியலமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரை பிரகாரம் சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள். அத்துடன் அவர்கள் சட்டத்தால் சமமாக பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந் நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஊடாக  மனுதாரர்களின், பாராளுமன்ற உறுப்பினர்களின், பொது மக்களின் இந்த அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது சட்ட ரீதியிலான அதிகாரத்துக்கு அப்பால் சென்று எடுத்துள்ள குறித்த தீர்மானமானது தான்தோன்றித்தனமானது. அதனால் அவரது அந்த வர்த்தமானி அறிவித்தல் சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது. அதனால் அது சட்ட வலுவற்றது.

இது தொடர்பில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, புவனேக அலுவிஹார, விஜித் மலல்கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்ணான்டோ ஆகிய ஏனைய 6 நீதியரசர்களும் உடன்படுகின்றனர். எனினும் சிசிர டி ஆப்று தனியாக ஒரு தீர்ப்பை தயார் செய்துள்ளார். அதனை அவர் அறிவிப்பார்’ என பிரதம நீதியரசர் நளின் பெரேரா உயர் நீதிமன்றின் தீர்ப்பின் சுருக்கத்தை அறிவித்தார். அத்துடன் விரிவான தீர்ப்பை பிறகு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

இந் நிலையில் நீதியர்சர் சிசிர டி ஆப்றூ, தனது தீர்ப்பை வாசித்தார். ‘ ‘பிரதம நீதியர்சர் உள்ளிட்ட ஏனைய நீதியரசர்கள் அறுவரின் தீர்ப்புடன் நான் நூறுவீதம் ஒத்துப் போகின்றேன். எனது தீர்ப்பை நான்  தனியாக சமர்ப்பிக்கின்றேன். அரசியலமைப்பின் 70 (1) ஆம் உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றம் அதன் முதல் அமர்வை ஆரம்பித்த நாளில் இருந்து 4 வருடங்களும் 6 மாதங்களும் கடந்த பின்னரேயே அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அதற்கு முன்னர் அதனை கலைக்க வேண்டும் எனில், பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஜனாதிபதிக்கு வேண்டும்.  எனவே இவை எதுவுமின்றி பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் சட்ட வலுவற்றது. அது அரசியலமைப்பு மற்றும் சட்டத்துக்கு முரணானது’ என அறிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.