கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா.
வரலாறு பல இடங்களிலும் பல சந்தர்ப்பங்களிலும் மீண்டும் மீண்டும் புகட்டியுள்ள ஒரு பாடம் என்னவெனில் மக்கள் இலட்சக்கணக்கில் திரண்டு நிராயுதபாணிகளாக ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகையில் ஆட்சியாளர்களின் படைப்பலங்களும் அவை ஏந்தும் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் மற்றும் கனரக ஆயுதங்களும் செயலிழந்துவிடும் என்பதாகும். அந்த உண்மையைத்தான் இலங்கையும் சென்ற ஒன்பதாம் திகதி உறுதிப்படுத்தியது. இலங்கையின் வரலாற்றிலேயே முதன்முதலாக மக்கள் தமது ஒன்றுபட்ட சக்தியின் வலிமையை உணர்ந்த நாள் அதுவென்றும் கூறலாம்.
இலங்கையர் விழித்துவிட்டனர். அவர்களை விழிக்கச் செய்தவர்கள் காலிமுகத்திடலிலே மூன்று மாதங்களுக்கு முன்னர் ஓர் அறப்போராட்டத்தை ஆரம்பித்துவைத்த சிங்கள வாலிபர்களும் யுவதிகளும் ஆவர். யாவரும் அவர்களை கரங்கள் கூப்பி வாழ்த்த வேண்டும். அவர்களுக்காகவே இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை
இலங்கை மக்களின் விழிப்புணர்வின் வெளிப்பாட்டை முதன்முதலாக 2021ஆம் வருடம் மாசி மாதம் மூன்றாம் திகதியன்று தமிழ் முஸ்லிம் இளைஞர்களினதும் யுவதிகளினதும் தலைமையில் ஆரம்பித்து நிறைவேறிய பொத்துவிலிருந்து பொலிகண்டி வரையிலான பாத யாத்திரை வெளிக்காட்டியது. அக்காலாட்படையினர் நிராயுதபாணிகளாகவே ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கும் அநீதிகளுக்கும் எதிராகக் குரலெழுப்பிய வண்ணம் தமது ஆதங்கங்களை முழுநாட்டுக்குமே வெளிப்படுத்தினர்.
ஆனால் அவர்களின் குரல் சிங்கள மக்களின் செவிகளை எட்டுவதற்கு மேலும் சுமார் ஒரு வருடம் எடுத்தது. இறுதியாக, 2022 சித்திரை மாதம் காலிமுகத்திடலில் சிறுபான்மை இளவல்கள் எழுப்பிய அதே ஒலி சிங்கள இளவல்களின் வாய்களிலே ஒலிக்கத் தொடங்கிற்று. அன்று தொடங்கிய அறப்போராட்டம் மூன்று மாதங்களாகச் சாத்வீகமாகவும், அரசியல் பக்கச்சார்பின்றியும், பல தியாகங்களின் மத்தியிலும் அனைத்து இனங்களினது மதத் தலைவர்களின் ஆதரவுடனும் நடைபெற்று அதன் முதல் குறிக்கோளான “கோத்தாவே வெளியேறு” என்ற கோரிக்கையில் வெற்றிகாணும் வேளையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க! அந்த இளவல்கள். வெல்க! அவர்களின் தியாக உணர்வும், விழிப்பு நோக்கும் நாட்டுப்பற்றும்.
யார் இந்த இளவல்கள்?
முதுமைக்குள் நுழைந்து தமது வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் என்போன்றவர்களும் முதுமையின் வாயிலை நோக்கி விரைந்து கொண்டிருப்போரும் இந்த இளவல்களைப்பற்றிய சில உண்மைகளை உணரவேண்டியது அவசியம். இவர்கள் வாழும் உலகே வேறு. அன்றொரு காலம் வரவில்லாமல் செலவு செய்துகொண்டு செங்கொடியேந்தி உலகையே மாற்றவேண்டுமென்று தெருவெல்லாம் கூக்குரலிட்டுத் திரண்ட இளைஞர் சமுதாயம் வேறு, இன்று வாழும் இளவல்களின் சமுதாயம் வேறு. அவர்களது வெளித் தோற்றமும் நடையுடை பாவனைகளும் விநோதமானவையாக இருக்கலாம். ஆனால் அவர்களின் உள்ளங்கள் மனிதாபிமானம் கொண்டவை.
உலகத்தில் வாழும் தமது சகாக்களுடன் ஒரே நொடியில் தொடர்பு கொண்டு அவர்களுடன் உறவாடி அவர்களின் இன்ப துன்பங்களில் பங்குகொள்ளும் வல்லமை படைத்தவர்கள் இந்த இளவல்கள். அரசியலிலே ஆஷாடபூதிகளையும் பொருளாதாரச் சுரண்டல் பட்டாளத்தையும் இனங்கண்டு அவர்களின் திருகுதாளங்களை அம்பலப்படுத்தி, ஒரு தனிப்பட்ட கட்சிக்காகவோ அதன் தலைவருக்காகவோ அன்றி மனித நேயத்துடன் அனைத்து மக்களும் சுதந்திரமாகவும் வறுமைக்கோட்டினைத் தாண்டியும் இயற்கை தந்ந சீதனங்களைப் பாதுகாத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அற்புத சந்ததி.
சாதி, மத, பால் பாகுபாடுகளைத் தாண்டி உலக சுபீட்சத்துக்காகத் தோளோடுதோள் சேர்ந்து போராடும் அதிசயப் பிரகிருதிகள். இன்றைய உலக ஒழுங்கின் சீர்கேடுகளை உணர்ந்து அந்த அமைப்பையே மாற்றியமைக்க உலகெங்கும் எதிர்ப்பு ஊர்வலங்களை ஏற்படுத்தி, ஐ. நாவின் செவிகளையே எட்டும்வரை குரலெழுப்பும் அதிசயப் பிறவிகள். பட்டதாரிகளையும் பள்ளி மாணவர்களையும் பகுத்தறிவுள்ள பாமர சகாக்களையும் ஒரு புனித போரிற் பிணைத்துள்ள உலகப்படையின் இலங்கைக் களமே காலிமுகத்திடலும் அங்கே குவிந்த ஆண் பெண் இளசுகளும். இலங்கை மக்களின் இதயங்களையே தம்வசம் ஈர்த்துவிட்ட இந்த இளையோரை வாழ்த்தாமல் இருக்கும் கல்நெஞ்சங்களும் உண்டோ?
இனியென்ன செய்வது?
அறப்போராட்டத்தின் முதல் வெற்றியாக புனித பௌத்தத்தின் பாதுகாவலர்கள் என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு நாட்டையே சூறையாடிய ஒரு கும்பலை இனங்கண்டு அதன் ஏமாற்று வித்தைகளையும் அம்பலப்படுத்தி அந்த ஏமாற்று வித்தைக்காரர்களை ஓடி ஒழியச் செய்தமையைக் குறிப்பிடலாம். அவர்களின் பதவி துறப்புகள் இன்னும் சட்டபூர்வமாகவில்லை என்றாலும் அது விரைவில் நடைபெறும் எனத் துணிந்து கூறலாம்.
பிரதமரின் வீட்டினை எரித்ததும் ஜனாதிபதியின் மாளிகைக்கு சேதங்களை இழைத்ததும் அருவருக்கத்தக்க செயல்களெனினும் அவற்றை அறப்போராளிகளே செய்தார்களா அல்லது அவர்களுக்குள்ளே புகுந்துவிiயாடிய சில விஷமிகள் செய்தனரா என்பது தெளிவில்லை. ஆனாலும் ஒட்டுமொத்தத்தில் ஜூலை ஒன்பது ஒரு மகத்தான வெற்றித் திருநாள். இலங்கையின் வரலாற்றிலே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு நிகழ்வு. ஆனாலும் அறப் போராட்டத்தின் அடிப்படைக் குறிக்கோள் அதுவல்ல.
அதன் இறுதி இலக்கு நாட்டின் அரசியலையும் பொருளாதாரத்தையும் ஏழு தசாப்தங்களாக ஆட்டுவித்த சிந்தனைச் சட்டகத்தையே (paradigm) மாற்றி அமைப்பதாகும். அதற்கான போராட்டம் இனித்தான் ஆரம்பமாகிறது.
சிந்தனைச் சட்டகம்
1997ல் விஞ்ஞானப் புரட்சிகளின் கட்டமைப்பு என்ற ஒரு நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட தோமஸ் கூன் என்னும் ஒரு விஞ்ஞானத் தத்துவஞானி, விஞ்ஞானப் புரட்சி என்பது அதன் கட்டமைப்பான சிந்தனைச் சட்டகம் இடையிடையே ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்தும் தனது அமைப்புக்குள் உள்ளடக்க முடியாது என்ற நிலையில் சட்டகத்தையே மாற்றுவதால் ஏற்படுவது என விளக்கியுள்ளார். தத்துவரீதியான அவரது விளக்கத்தை விபரிப்பதாயின் இக்கட்டுரை வேறு திசையில் திரும்பிவிடும் என்பதாலும் அது பலருக்கு விளங்காமல் போகலாம் என்பதாலும் இலங்கையின் அரசியல் பொருளாதார அமைப்புகளுக்கு கூனின் விளக்கம் பொருந்துமாற்றை மட்டும் தொட்டுக் காட்டி அதனை அறப்போராட்டத்தின் அடுத்த கட்டத்தை விளக்கப் பயன்படுத்துவோம்.
இலங்கை சுதந்திரம் அடைந்த நாள்தொடக்கம் இந்த நாட்டின் அரசியலையும் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் வழிப்படுத்திய கொள்கை பௌத்த சிங்களப் பேரினவாதம். அதைத்தான் இலங்கையின் சிந்தனைச் சட்டகம் எனக்கருதலாம். அந்தச் சிந்தனைச் சட்டகத்தினுள் அரசாங்கங்கள் மாறின, ஆளும் தலைவர்கள் மாறினர், பொருளாதார அமைப்புகளும் நடவடிக்கைகளும் மாறின. ஆனால் அவை எல்லாவற்றையும் பௌத்த சிங்களப் பேரினவாதம் தனது எல்லைக் கோட்டைத் தாண்டாதவண்ணம் கண்காணித்துக் கொண்டது. இருந்தும் அந்த எல்லைக்குள் இருந்துகொண்டே சிங்கள இனத்தையும் பௌத்த மதத்தையும், ஏன் நாட்டையும்கூட, தமது சுயலாபத்துக்காகச் சுரண்டத் தொடங்கிய கும்பல்களை அந்தச் சட்டகத்தினால் இனங்காண முடியவில்லை. அந்தச் சுரண்டல் வளர்ந்து வளர்ந்து பகற்கொள்ளையாகவே மாறியபோதும் சட்டகத்தின் பாதுகாவலர்கள் அதைப்பற்றிப் பராமுகமாகவே இருந்தனர்.
அதுமட்டுமல்ல, அக்கொள்ளைக்காரர்களின் பௌத்த வேடத்தை வெறும் போலியென உணராது அவர்களுக்கு சிறப்புப் பட்டங்களையும் வழங்கி வாழ்த்தினர். பொன்னாடை போர்த்திப் பூமாலைகளும் சூடினர். இந்தப் பம்மாத்து ஏழு தசாப்தங்களாக வளர்ந்து கடைசி இரண்டரை வருடங்களுள் அதன் இமயத்தை எட்டியது. அதன் விஷ விளைவை விபரிக்கவும் வேண்டுமா? இறுதியாக இந்தச் சட்டகம் இருக்கும்வரை நாடும் மக்களும் ஈடேற்றம் காணமுடியாது என்ற உண்மையை உணர்ந்தவர்களே இன்றைய சிங்கள பௌத்த இளவல்கள்.
சிந்தனைச் சட்டகம் மாறவேண்டும்
அறப்போராளிகளின் மிகமுக்கியமான கோரிக்கை சட்டக மாற்றம். அந்த மாற்றம் ஓர் அடிப்படை மாற்றம். ஆங்கிலத்தில் systemic change என்று கொச்சையாகப் பேசப்படும் அந்த மாற்றத்தின் அசல் வடிவம் சட்டக மாற்றம். சிங்கள பௌத்த பேரினவாதத்தால் இந்த நாட்டை செழிப்படையச் செய்ய முடியாதென்பதையே அறப்போராளிகள் தமது போராட்டத்தின் அடிநாதமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் உடனடியாக அமுல்படுத்துவதற்கென வெளியிட்டுள்ள கோரிக்கைகளுள் ஐந்தாவது கோரிக்கை அந்த மாற்றத்தையே தொட்டுக் காட்டுகின்றது. அதனாலேதான் பௌத்த சிங்கள இளவல்களுடன் தமிழ், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ இளைஞர்களும் யுவதிகளும் இணைந்து போராடுகின்றனர். சட்டக மாற்றமே இலங்கைக்கு ஒரு புது யுகத்தை கொண்டுவரும். அதை அடைவதே அறப்போராட்டத்தின் அடுத்த கட்டம்.
பரிகாரங்களும் சூழ்ச்சிகளும்
இதற்கிடையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு உடனடியான பரிகாரங்களை நாடவேண்டியது இப்போதுள்ள ஸ்திரமற்ற அரசின் தலையாய கடமை. ஏனெனில் அந்த நெருக்கடிகள் ஒவ்வொன்றாக அதிகரிக்கையில் வாய்மூடி இருந்தவர்கள் இப்பிரதிநிதிகள். உதாரணமாக, ஜனாதிபதியின் வெற்று வாக்குறுதிகளை நம்பிக்கொண்டு, ஆடம்பரச் செலவினங்களை ஆமோதித்து, நாட்டின் வருவாயையும் உற்பத்தியையும் நாசமாக்கி, கடன்பளுவை வளரவிட்டவர்கள் இவர்கள். அந்தப் பளு கட்டுக்கடங்காமல் பெருகியபோது சர்வதேச நாணய நிதியின் உதவியைக்கூட நாடத் தயங்கியவர்களும் இவர்களே. இன்றைக்கு அந்த நிதியின் பரிகாரங்கள் மட்டும் நிரந்தரத் தீர்வாகாது என்பதையும் உணர்வார்களோ என்னவோ. அவை மட்டுமா? நேசநாடுகளின், அதிலும் குறிப்பாக அரபு நாடுகளின் நட்பினை உதறி எறிந்தவர்களும் இந்த ஆட்சியினரே.
இத்தனைக்கும் மத்தியில், மத்திய வங்கியும் ரணிலின் நிலையற்ற அரசாங்கமும் இதுவரை எடுத்த நிதி, வரி சம்பந்தமான நடவடிக்கைகள் யாவுமே அவசியமானவையெனினும் அவையே பொருளாதார ரீதியான நிரந்தரத் தீர்வை தரமாட்டா. அவ்வாறான ஒரு தீர்வு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதிகள் பெருகி சென்மதிநிலுவையில் மிகை காணாமல் ஏற்படமாட்டாது. அந்த நிலை ஏற்பட முக்கியமான தேவை அனைத்து மக்களினதும் அயராத அர்ப்பணிப்புகளும் முயற்சிகளும். அவற்றிற்குத் தடையாக அமைந்துள்ளதே நடைமுறையிலுள்ள சிந்தனைச் சட்டகம்.
நாட்டின் முப்பது வீத மக்களைப் புறக்கணித்துவிட்டுப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாமென நினைப்பது மடமை. அந்த மடமைக்குத் தூபமிட்ட பேரினவாதச் சட்டகத்தைப் பாதுகாக்கவே அதன் பாதுகாவலர்கள் புதிய சூழ்ச்சிகளை மேற்கொள்ள விளைவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக, நாடாளுமன்றத்துக்குள்ளே யார் ஜனாதிபதியாவது யார் பிரதமராவது யார் யார் அமைச்சர்களாவது என்ற போட்டியின் அந்தரங்கம் அந்த நாடாளுமன்றத்தை விரைவிலே கலைத்துவிட்டுப் புதிய தேர்தலை நடாத்தி அறப்போராளிகளின் வாக்குப் பலத்தைப் பரீட்சித்துப்பார்க்கத் தயங்குவதே.
மக்கள் யாப்பும் தேர்தலும்
எனினும் தற்போதைய சிந்தனைச் சட்டகத்தை ஒழித்து எல்லா இனத்தவரும் சம உரிமையுள்ள இலங்கையர் என்ற உயரிய அடிப்படையில் மக்கள் நலன்பேணும் சிந்தனைச் சட்டகம் ஒன்றை உள்ளடக்கிய அரசியல் யாப்பொன்றை வரைவதற்கு இந்தத் தற்காலிக அரசு வழிவகை செய்தல் வேண்டும். புதிய யாப்பும் அதன் அடிப்படையிலான பொதுத் தேர்தலும் நடைபெறும்வரை அறப்போராட்டம் தொடர வேண்டி இருக்கிறது. இதுதான் அப்போராட்டத்தின் அடுத்த கட்டம். நடைமுறையிலுள்ள யாப்பின்கீழ் தேர்தலில் போராளிகள் குதிப்பது தற்கொலைக்குச் சமன். அதைத்தான் தேர்தல் களத்தில் குதியுங்கள் என்று பாட்டாலி ரணவக்க போன்ற இனவாதிகள் போராளிகளைக் கேட்பதின் இரகசியம்.
தேவை ஒரு லீ குவான் யூ
சீரழிந்து, உலக நாடுகளின் நகைப்புக்கு இலக்காகிக் கிடக்கும் இலங்கையைச் சீர்படுத்தி அதன் பொருளாதாரத்தையும் வளர்த்து உலக அரங்கில் மதிப்புள்ள ஒரு நாடாக மாற்றுவதற்கு சிங்கப்பூரின் மறைந்த தலைவன் லீ குவான் யூ இங்கே மறுபிறவி எடுக்க வேண்டியுள்ளது. ஜே. ஆர் தொடக்கம் அவருக்குப் பின்வந்த தலைவர்கள் யாவரும் இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று பறையடித்தனர். ஆனால் சிங்கை நகர் அரசு எந்தச் சிந்தனைச் சட்டகத்தின் அடிப்படையில் உருவானதென்பதை உணர மறுத்துவிட்டனர். லீ குவான் யூ சீனர்களுக்காகவோ மலாயர்களுக்காகவோ இந்தியருக்காகவோ அந்த நாட்டை வளர்க்கவில்லை. அதை சிங்கைநகர் மக்களுக்காக வளர்த்து மூன்றாம் உலக நாடாய் இருந்ததை முதலாம் உலக நாடாக மாற்றினார். அவ்வாறான ஒரு சிந்தனைச் சட்டகத்தையும் ஒரு தலைவனையும் இலங்கையின் அறப்போராளிகளிடமிருந்தே தோற்றுவிக்க முடியும். அவர்களின் கைகளிலேயே இலங்கையின் எதிர்காலச் சுபீட்சம் தங்கியுள்ளது.-Vidivelli